Monday, March 12, 2018

தாயும் ஆகும் ஆதிசைவர்


இறைவனிடம் தொண்டனாகவும், புத்திரனாகவும் , தோழனாகவும் , நாயகி பாவத்தோடும் வழிபடும் மார்க்கங்களை முறையே திருநாவுக்கரசரும்,திருஞான சம்பந்தரும், சுந்தரரும், மாணிக்க வாசகரும்  வாழ்ந்து காட்டி நமக்கு அருளியுள்ளனர். முழுமுதற்கடவுளைத் தாயாகவே கூட இருந்து தன்னையும் பிறரையும் பேரின்ப மாகடலில் திளைக்க வைப்பவர்கள் ஆதிசைவர்கள்.

உண்ணாது உறங்காது இருக்கும் சிவபெருமானுக்கு நியமத்தோடு பூசை செய்யும்போது ஒரு தாய் அன்றாடம் தன குழந்தைக்கு நீராட்டுவதைப்போல நீராட்டுகின்றார் சிவாச்சார்யார். நீராட்டும்போது குழந்தைக்குப் பிடித்த பாடல்களைத் தாய் பாடுவதுபோல, இவரும் ருத்ராதி சூக்தங்களைச்  சொல்கிறார். குளித்த குழந்தைக்கு ஜலதோஷம் வராமலிருக்கத் தாயார் சாம்பிராணிப் புகை போடுவது போல இவரும் பெருமானுக்குத் தூபம் காட்டுகிறார். அன்னையானவள் குழந்தைக்குத் திருஷ்டி சுற்றிப் போடுவது போலவே இவர் விபூதியால் சுற்றிப் போடுகிறார். குழந்தையை அலங்கரித்துக் கண்ணாடி காட்டுவது போலவே இவரும் பெருமானை அலங்கரித்துக கண்ணாடி,குடை,சாமரம் போன்ற பொருள்களைக் காட்டுகின்றார். நீராடிய குழந்தைக்குப் பசிக்கும் என்று கருதிப் பால் நினைந்து ஊட்டும் தாயினைப் போலத் தானும் சாலப் பரிந்து நைவேத்தியம் செய்கிறார். குழந்தைக்கு நாள் முழுவதும் தாய் உணவு ஊட்டுவதைப் போல ஆதி சைவரும் பெருமானுக்கு ஆறு வேளைகள் இவ்வாறு பணி செய்கிறார். இதனால் தானோ என்னவோ குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பெரியோர்கள் கூறினார்கள் போலும்!

மேற்கூறிய ஒப்பு நோக்குதலில் சிறிது வித்தியாசமும் உண்டு. குழந்தை வளரும் வரையில் தான் தாயின் அரவணைப்பில் இருக்க முடியும். ஆனால் ஆதி சைவரோ தனது வாழ் நாள் முழுதுமே பெருமானுக்குத் தாய் போன்று இருந்து பணிவிடை செய்யக் கடமைப் பட்டவர். எனவேதான் ஆகம வழி நின்று பூஜைகள் செய்வது அத்தியாவசியமாகிறது. ஆறு கால பூஜைகள் நடப்பதற்குப் பதிலாக நாளடைவில் நான்கு,இரண்டு என்று ஆகி, ஒரு கால பூஜைகள் நடைபெறுவதையும் பார்க்கும்போது இறைவனை அன்னையாக இருந்து ஆராதிக்கும் அணுகுமுறைக்குக் குந்தகம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

பல்வேறு காரணங்களால் ஒருகால பூஜையே குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறாமல் இருக்கும் ஊர்களைக் காணும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. காலம் தாழ்ந்தால் சுவாமி பசியோடு இருப்பாரே என்று ஓடோடிச் சென்று காளத்தி மலை ஏறித் தான் கொண்டு வந்த இறைச்சியை இறைவன் முன் வைத்து , தலையில் செருகி வந்த காட்டுப் பூக்களை அர்ப்பணித்து , வாயில் கொண்டு வந்த பொன்முகலி ஆற்று நீரைத் திருமுடி மேல் உமிழ்ந்து அன்பின் வடிவமாகத் திகழ்ந்த கண்ணப்ப நாயனாருக்குக் கிடைத்த பேறு யாருக்குக் கிடைக்கும் ? ஒரு கால பூஜை என்று ஆகி விட்ட ஊர்ர்களில் அந்த ஒரு காலமாவது முழு ஈடு பாடுடன் நடைபெறுகிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம்.
உண்மையில் சுவாமிக்கு நாம் நைவைத்தியம் செய்வது என்பது, “ பெருமானே, நீ அருளிய தான்யங்கள் மூலம் செய்த உணவை உனது கருணை என நன்றியுடன் நினைவு கூர்ந்து உனக்கு அறிவிக்கிறேன் “ என்ற உயர்ந்த எண்ணத்தோடு செய்யப்படுவது. வீட்டிலேயும் பூஜை செய்து, மலர்களால் அர்ச்சனை செய்து, நைவேத்தியம் செய்வதன் நோக்கமும் இதுவே ஆகும். உண்பதன் முன் மலர் பறித்து, இறைவனது கழல்களுக்கு இடாவிட்டால், நோய்களுக்கே விருந்தாவர் என்று எச்சரிக்கிறார் அப்பர் பெருமான்.

ஆலய பூஜைகள் ஆறு காலங்கள் நடைபெற்றாலும் ஏதோ ஒரு சில காரணங்களால் ஆகமம் காட்டிய பாதையில் இருந்து சற்று விலகி விட வாய்ப்பு உண்டு என்பதால் கால பூஜையின் இறுதியில் தற்செயலாக நடைபெற்றமைக்கு மன்னிப்புக் கேட்கப்படுகிறது. அது மந்திர-தந்திர லோபமாகவோ, ஸ்ரத்தா லோபமாகவோ,கால-நியம லோபமாகவோ இருக்கக்கூடும் என்பதால் இறைவனிடம் இவ்வாறு விண்ணப்பிக்கப்படுகிறது.

தாயாய் இருந்து தொண்டாற்றும் கடமை பூண்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவாவது , வருமானத்தையோ சிரமத்தையோ பொருட்படுத்தாமல் பணியைத் தொடர வேண்டும். அதற்கான பலனை இறைவன் தராமல் விட மாட்டான். அதிலும் தன்னைத் தாயே போல் சீராட்டிப் பணிவிடை செய்பவனைக் கை விடுவானா அக்கடவுள் ?