Tuesday, April 10, 2018

யாரிடம்தான் குறை இல்லை ?

ஒவ்வொருவருக்கும் தான் செய்யும் செயல்கள் எல்லாம் சரியாகவே தெரிகிறது. தங்களுக்கென்று ஒரு பாணி, முத்திரை ஆகியவற்றோடு மக்களிடயே உலா வருகின்றனர். அப்படி வரும்போது அவர்களுக்குப் பின் ஆதரவாளர்கள் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. நாட்டுக்கும் மொழிக்கும் எதிராகச் செயல் படுவோர்களுக்கே ஒரு கூட்டம் பின்னால் நிற்கும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ள நிலையைக் கூடப் பார்க்கிறோம். கருத்துக்கள் தாராளமாக மக்கள் முன்னிலையில் வீசப்படுகின்றன. ஆனால், சுட்டு விரல் பிறரைச் சுட்டிக் காட்டும்போது ஏனோ கட்டைவிரல் நம் பக்கம் பார்ப்பது மறந்து போய் விடுகிறது.

யாரை எளிதாகக் குறை கூற முடியுமோ அவர்களை இலக்காக வைக்கத் துவங்கி விட்டனர். அதற்காக எவரும் குறை இல்லாதவர்கள் என்று சொல்ல வரவில்லை. ஏதோ ஒரு விதத்தில் நாம் எல்லோருமே குறை உடையவர்கள் தான். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தான் இன்னும் நமக்கு வரவில்லை. 

சமய உலகிலும் குறைகள் காண்பது இயற்கை. சிவாகமமே அக்குறைகளைப் பட்டியலிட்டு பூஜை முடிவில் சிவாச்சாரியாரை விட்டுச் சொல்லச் சொல்லும்போது நம்மவர்கள் குறை சொல்லப் புகுவதற்கான தேவையே இல்லை. அதற்கு மேலும் குறைகள் தொடர்ந்தால் அதற்கான பொறுப்பு இன்னாருக்கு என்று இறைவன் தீர்ப்பு அளிப்பான். நாம் முதலில் நமது குறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டி வழிபாடு செய்வதே நல்ல பண்புக்கு அடையாளம். 

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது முன்னோக்கி உள்ள சூழ்நிலையில் அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பதைப் பற்றி எவ்வளவு பேர் கவலைப் படப் போகிறார்கள் ? எப்படியாவது பொருள் சம்பாதித்து இம்மாதத்தை ஓட்டியாகவேண்டிய கட்டாயத்தில் அனைவரும் தள்ளப்பட்டுள்ளார்கள்.  வறுமையின் காரணமாக சொல்லமுடியாத துன்பங்களில் சிக்கியுள்ள குடும்பங்கள் தமக்கே உரிய வழிகளிலிருந்து தடம் மாறி விடுகின்றன. செய்யும் தொழிலில் அசிரத்தை ஏற்படுத்தும்  விபத்தும் நடைபெற்று விடுகிறது.. அவர்களது துன்பம் துடைக்க முன் வருவோர் சிலர். ஆனால் அவர்கள் சொற்ப வருவாயிலும் பணி  செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று வேறு சிலர் எதிர்பார்ப்பது வேதனையாக உள்ளது. 

பாட சாலைகளில் பயிற்சி பெற்றுக் காலம் தோறும் நியமத்தோடு சிவாலய பூஜை செய்ய வேண்டும் என்று ஆதிசைவ சமூகத்திடம் எதிர்பார்ப்பது நியாயம் தான். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நெல் நிறுத்தப்பட்டபோதும், மிகச் சொற்ப சம்பளம் கொடுக்கப்படும் நிலையிலும் அவர்கள் மறு பேச்சே பேசாமல் பணியைத் தொடர வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா ? அப்படி எதிர்பார்ப்பவர்கள், தாமாக முன்வந்து அவர்களுக்கு மாதம்  தோறும் முடிந்த உதவி செய்யலாமே ! அதை விட்டுவிட்டுக் குறை சொல்வதால் என்ன மாற்றத்தை எதிர் பார்க்க முடியும் ? 

மக்கள் எப்போது ஆதரவளிக்கத் தவறி விட்டார்களோ அப்போதிலிருந்தே விபரீதம் தொடங்கி விட்டது. கிராமங்களில் ஆலயங்களுக்கு ஆதரவளித்து வந்த அக்கிரகாரங்கள் காலியாகி விட்டன. கோயில் சிப்பந்திகளில் அர்ச்சகரைத் தவிர எல்லோரும் இடம் பெயர்ந்து விட்டார்கள். ஆகவே பூ பறித்துக் கட்டுவது, ஆலயத்தை சுத்தப் படுத்துவது , அபிஷேகத்திற்கு ஜலம் கொண்டு வருவது, நைவேத்தியம் தயார் செய்வது போன்ற வேலைகளும் அர்ச்சகர்களுக்குப் புகுத்தப்பட்டு விட்டன. இதற்காகக்  கூடுதல் வருமானமா அவர்களுக்கு வருகிறது ? முன்னோர் வசித்த வீட்டில் இருந்து கொண்டு, எவ்வளவோ சிரமத்துக்கு நடுவில் பணியாற்றுபவர்கள்  இன்றும் இருக்கிறார்கள். அந்த வீடுகள் பெரும்பாலும் மேற்கூரைகள் பழுதாகி மழை நீர் வீட்டுக்குள்ளே கொட்டியும் இரவு பூராகவும் கண் விழித்து மேற்கூரை இடுக்கு வழியாகக் கொட்டும் மழை நீரைப் பாத்திரங்களில் பிடித்து அவை நிரம்பியவுடன் அப்புறப்படுத்தும் குடும்பங்களைப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் அவர்கள் படும் சிரமங்கள் .

பாடல் பெற்ற சிவாலயங்களில் சில சிவாச்சார்யார்களால் கைவிடப் பட்டு விட்டன என்று கூறுவோர் உண்டு. ஆனால் சமூகமே அவர்களைக் கைவிட்டுவிட்ட நிலையில் வேறு வழி இல்லாமல் இடம் பெயர்கிறார்களே ஒழிய அக்கிராம மக்களோ அரசாங்கமோ ஆதரவளித்தால் எதற்காக வேறிடத்திற்குப் போகப் போகிறார்கள்? அர்ச்சகர் இல்லாததால் ஒரு கோவிலில் மெய்க் காவல் புரிபவரின் மகன் பூஜை செய்வதாக ஒரு அன்பர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் காலை நேரத்தில் அக் கோயிலைத் தரிசிக்கச் சென்ற  படியால் ஒன்று மட்டும் கூறுகிறோம். சுவாமிக்கு அபிஷேகம் மாலை நேரத்தில் மட்டுமே நடத்துவதாக அம்மகனாரே ஒப்புக் கொண்டார். இதைத்தான் இச் சமூகம் ஏற்கிறதா? அல்லது இறைவன்தான் மனமுவந்து ஏற்கிறாரா? உள்ளூர் மக்கள் முன்வந்து ஒரு சிவாச்சார்யாருக்குத்  தகுந்த ஊதியம் வழங்கி விட்டு அதற்குப் பிறகு குறைகள் இருந்தால் களைய முற்படலாமே ! 

அரசு ஊழியருக்கு சமமாக ஆலய ஊழியருக்கும் சம்பளம் வழங்கப்படும் என்று அண்டை மாநிலம் அறிவித்ததை இங்கு எத்தனை பேர் ஆதரித்து அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார்கள்? இங்கேதான் தொட்டதற்கெல்லாம் மொழிப் பிரச்னை,ஜாதிப் பிரச்னை என்று சொல்லியே மக்களை திசை திருப்புகிறார்களே. கோயில்களோ சிப்பந்திகளோ எப்படிப் போனால் இவர்களுக்கு என்ன? பொதி சுமக்கும் விலங்குகளுக்குச் சமமாகத்தானே ஆலய ஊழியர்கள் பார்க்கப்படுகிறார்கள் ! 

நிறைவாக ஒன்று சொல்ல விரும்புகிறோம். நமது இன்றைய தேவை கிராமம் தோறும் சென்று குறை அறிந்து அவற்றை நிவர்த்தி அளிக்கும் தன்னலமற்ற தொண்டர்கள் மட்டுமே.  இருந்த இடத்திலிருந்தே முற்றோதுதல்,அன்ன தானம் செய்தல், ஆகியவற்றைச்  செய்துவருபவர்கள் இதுபோன்ற இடங்களுக்குச் சென்று செய்யலாம். உழவாரம் செய்யும் அடியார்கள் இச் செயல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உள்ளூர் வாசிகளுக்கு ஊர்க் கோயிலின் பெருமையை எடுத்துச் சொல்லி, தினசரி வழிபாட்டிற்கு வரச் சொல்ல வேண்டும். அர்ச்சகர்கள் அவர்களை நம்பியே காலம் தள்ளுகிறார்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். 

சொந்த ஊரை விட்டு விட்டு நகரங்களுக்குக் குடிஏறியவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தயவு செய்து உங்கள் பூர்வீக கிராமத்தின் கோயில்களுக்கும் அவற்றின் அர்ச்சகர்களுக்கும் குன்றிமணி அளவாவது கொடுத்து உதவுங்கள். உங்களது முன்னோர்கள் உங்களை நம்பியே இக்கோயி ல்களை விட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள். நம் குடும்பத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கும் போது, இதுவரையில் சிறிதளவும் உதவாதவர்கள் இனிமேலாவது அதை மேற்கொள்ளலாம். அது உங்கள் வம்சத்தையே காப்பாற்றும். செய்து பார்த்தல் தான் அதன் அருமை புரியும். 

வெள்ளி மலையை நோக்கிப் பறந்து செல்லும் காக்கையும் அந்நிறம் பெறும் என்பது போல இறைவனை நோக்கிச் செல்லும் நாம் அனைவரும் அவனது குணங்களில் ஒரு சிறு துளியேனும் பெற முயற்சிக்க வேண்டாமா?  " குறை உடையார் குற்றம் ஓராய் " என்று  அடியார்களது குற்றத்தை மன்னித்துக் குணத்தையே கொள்ளும் சிவபரம்பொருளின் பெரும் கருணையை சம்பந்தர் பாடுகின்றார். " பழுது இல் தொல் புகழாள் பங்க "  என்று திருவாசகம் பார்வதி பரமேசுவரர்களது புகழ் தொன்மையானதாகவும், குற்றமற்றதாகவும் விளங்குவதாகக் கூறும். எனவே , நமது குறைகள் நீங்க ஒவ்வொருவரும் வழிபட்டால் ஊரே குறையற்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும். அதற்கு அடுத்த படியாகப் பிறருக்கு இரங்கும் குணம் தானாகவே வந்து விடும். அந்த இரக்க குணம் வந்துவிட்டால் நாம் புனிதர்கள் ஆகி விடுவோம். நமது வழிபாடும் அப்போதுதான் அர்த்தமுள்ளதாக ஆகும். குற்றமே பெரிதும் உடைய நம்மிடத்திலும்  கடைக் கண் பாலித்து நம்மை உய்ய வைக்க வேண்டும் என்று ஞான பரமேசுவரனை பிரார்த்திப்போம்.