Wednesday, March 10, 2021

ஆகம சீலர்க்கு அருளும் அரன்

                    28 ஆகம சந்நிதி, ஸ்ரீ விருத்தகிரீசுவரர் கோயில், 

                                                 விருத்தாசலம்  


அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன் பிடவூரன்

தம்மானே தண்தமிழ் நூல் புலவாணர்க்கோர்

அம்மானே பரவையுண் மண்டலி அம்மானே.

                                  -- சுந்தரர் தேவாரம்

“ ஆகமம் ஆகி நின்று அண்ணிக்கும் “ பேரருளாளனாகிய பெருமானைத் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர் மேற்கண்டவாறு திருவாரூர்ப் பரவையுண் மண்டலி என்ற தலத்தில் துதிக்கிறார். மகேந்திர மலையின்கண் எழுந்தருளித் தனது ஐந்து முகங்களாலும் இருபத்தெட்டு ஆகமங்களைப் பெருமான் தோற்றுவித்து அருளியதாகத் திருவாசகம் கூறுகிறது. “ எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்” என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.தமிழகம் செய்த தவப்பயனாக இன்றளவும் ஆகம வழியில் சிவாலயங்களில் நித்திய பூஜைகள், கும்பாபிஷேகங்கள் நடைபெறுவது ஈசன் திருவருட் துணையினால் மட்டுமே ஆகும்.

இருபத்தெட்டு ஆகமங்களில் காரணம்,காமிகம் போன்ற சில ஆகமங்களே தற்போது கிடைப்பதோடு மட்டும்  அல்லாமல் பின்பற்றப் படுவனவும் ஆகும். பிற ஆகமங்கள் எவ்வாறு, எக்காலத்தில் மறைந்து போயின என்பது திட்ட வட்டமாகத் தெரியவில்லை. அவற்றை மீட்டெடுக்கும் தீவிர முயற்சி செய்யப்பட்டுள்ளதா என்றும் புலப்படவில்லை. எஞ்சிய ஆகமங்களையே தற்போதுள்ள ஆகம பாடசாலைகள் கற்பிக்கின்றன. ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் இக்கல்வி முறை பின்பற்றப் படுகிறது.

ஆகமத்தொடு, வாழ்வியல் கல்வியும் தக்கோரைக் கொண்டு கற்பிக்கப்படுவதால் பாட திட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையில் சிறிது வேறுபாடுகள் இருக்கலாம். ஆகமக் கல்வியோடு, தற்காலக் கல்வியும் பன்னிரண்டாம் வகுப்பு வரை இணைத்துக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இரண்டையும் இணைத்துக் கற்கும் மாணவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் அறிவு பெற்றாலும் அனைவரும் அறிந்த காரணத்தால் அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே, ஆகமப் பாடசாலைகளே கல்வித்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் கொடுக்கின்றன.

இவ்வாறு பெறப்பட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு எவ்வாறு பயன் தருகின்றன என்பது அடுத்த கேள்வி.அதிக வருமானத்தை விரும்பி சொந்த ஊரை விட்டு விட்டு வெளியூருக்கும் வெளி நாடுகளுக்கும் செல்பவர்கள் அவ்வாறு செல்லுமிடங்களில் இச் சான்றிதழ்களைக் காட்டித் தனது தகுதியை நிரூபிக்க முயலுகிறார்கள். அப்படியானால் சொந்த ஊர்களில் வாழையடி வாழையாகத் திருக்கோயில்களில் பணியாற்றி வந்தவர்கள் அக்கோயில்களைப் புறக்கணிக்கும் நிலையைப் பாடசாலைகள் ஆதரிக்கின்றனவா? பாடசாலைத் தரப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற்று வெளியேறுகையில் அவனுக்கு ,அவனது பூர்வீக ஊரிலேயே வாழும்படி வாழ்வாதாரம் செய்து தரப் படவில்லையே !

பாடசாலை நடத்துவதும் அத்தனை எளிது அல்ல. வெளியிலிருந்து பெரிய மனம் உள்ளவர்களின் துணையுடனும், நிரந்தர வைப்பு நிதியின் வட்டி வருவாயுடனும் மாணவர்களின் கல்வி, உணவு,உடை ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதை நாம் அறிவோம். இச் சிவபுண்ணியத்தில் வெளிநாடுகளில் வசித்து வரும் நம்மவர்கள் பங்கேற்க மேலும் முன்வந்தால் பாடசாலைகளில் மாணவர்களின்  எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உண்டு.அவர்களை இத்தருமத்தில் ஈடுபடச் செய்ய வேண்டிவர்கள் மடாதிபதிகளும், வெளிநாடுகளுக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள கோயில் கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும் சிவாச்சாரியார்களும் ஆவார்கள். தனவந்தர்கள் பலர் அங்கு ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது இன்றியமையாததாகும். இதனை ஆதி சைவர் நல சங்கங்களும் இணைந்து செய்யலாம்.

ஆகமம் கற்ற மாணவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும். அப்படி நடந்து விட்டால் ஆங்கில வழிக் கல்வி கற்கும் மோகமும் ஒழிந்து விடும். ஆகமமும் தமிழும் ஒருங்கே பயில ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கல்வி ஸ்தாபனமே அரசு ஆதரவோடு நடை பெற வேண்டும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பத்தை விட, இம்முறையில் கிடைக்கும் பலனைப் பல மாங்காய் என்றும் சொல்ல முடியும். இன்று ஆதிசைவ சமூகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சிவனுக்கே மீளா அடிமை பூண்டொழுகும் சமூகம் பாதை மாறி சம்பந்தமில்லாத,  மற்றும் மரியாதை முற்றிலும் கிடைக்காத இடங்களில் வேலைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. சொந்தக்  காலில் நிற்கும்போது சமூகத்தில் அந்தஸ்து உயரும். பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. வறுமை முற்றிலும் நீங்கிவிடும். திருமண வயதை அடைந்த ஆண் பெண் இருபாலார்க்கும் உரிய காலத்தில் திருமணம் நடைபெறும். இத்தனையும் நடைபெற வேண்டுமானால் மேற்கூறியபடி போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைப்பு மூலம் ஒரே ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும். சிவனருள் என்றென்றும் துணை செய்யும். சம்பந்தப் பட்டவர்கள் களப் பணி செய்ய முன்வர வேண்டும் என்று, வேதமாகவும்,ஆகமமாகவும், திருமுறைகளாகவும் நின்று அண்ணிக்கும் பரம்பொருளை இறைஞ்சுவோமாக.
--- சிவபாதசேகரன் 

Friday, July 26, 2019

ஆசை வலையில் அகப்படலாமா


ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் முக்கியம் என்றாலும் சமுதாயம் இதனை அந்தணரிடம் மிக உன்னிப்பாக எதிர்பார்ப்பதில் தவறில்லை. உலக நன்மைக்காக அனுதினமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிய கடமை அந்தணர்களுக்கு உண்டு. ஆத்மார்த்த பூஜை, ஜபம் என்பதோடு பரார்த்த பூஜையானது ஆதி சைவர்களால் சிவாலயங்களில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பட்டாச்சார்யார்களும் விஷ்ணு கோயில்களில் பூஜை செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் ஒழுக்க சீலர்கள் எனவும், தவறான காரியங்களை மறந்தும் செய்ய மாட்டார்கள் என்றும் இந்த சமூகம் இன்றும் உறுதியாக நம்புகிறது.

ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்குவார் என்று தில்லை வாழ் அந்தணர்களைச் சிறப்பிக்கிறார் சேக்கிழார். அதாவது, திருவோடும், செம்பொன்னாலாகிய பொருளும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான் என்பது கருத்து. சில வருடங்களுக்கு முன் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை தனது ஆட்சிக்குக் கொண்டு வந்தவுடன் உண்டியல்களை நிறுவினார்கள். உயர்நீதி மன்றத் தீர்ப்பின் மூலம் கோயில் மீண்டும் தீக்ஷிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதுவரை உண்டியலில் இடப்பட்ட காணிக்கைகளை தீக்ஷிதர்கள்  அரசுக்கே திருப்பிக் கொடுத்தனர் என்று பத்திரிகைகள் மூலம் அறிந்தோம். கோயிலும் முன்போலவே உண்டியல் இன்றி சிறப்பாக இயங்குகிறது.

அண்மைக்காலமாகவே கோயில்களில் களவு போகும்போதெல்லாம் அர்ச்சகருக்குத் தெரியாமல் எவ்வாறு சாத்தியம் ஆகும் என்றெல்லாம் அவதூறுகளைக் கிளப்பி விட்டனர். நல்ல வேளையாக அர்ச்சகர்கள் யாரும் இந்த குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை மக்கள் உணர்ந்தனர்.
ஊடகங்கள் திரித்துப் பொய்யாக்கிய செய்திகள் உலா வரும் வேளையில் அர்ச்சகர் உள்ளிட்ட அந்தணர் சமூகம் மேலும் கவனமாக இருக்க வேண்டிய கட்டத்தில் உள்ளது. தவறு எங்கேயாவது நடந்தால் மொத்த சமூகத்தின் மூலம் பழி சுமத்தி விடலாம் என்று கழுகுகள் வட்டமிட்டுக் காத்துக் கொண்டு இருக்கின்றன. அர்ச்சகர்களும் மற்றவர்களைப் போலவே ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்கள் என்று யாரும் கூறப்போவதில்லை. சமூக வலைத்தளங்களிலும் மிகுந்த எச்சரிக்கையோடு செயல் பட வேண்டிய தருணம் இது. சொந்த விஷயங்களைப் பகிர்வதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை. அனுதினமும் சுவாமியைத் தொட்டு பூஜிக்கும் கரங்கள் சுத்தமாகவும்,புனிதமாகவும் இருக்க வேண்டும் அல்லவா?

கோயிலுக்குள் நுழையும்போதே அர்ச்சகருக்குப் பயம் கலந்த பக்தியும், ஆசாரமும்,எளிமையும், பொறுப்பும், பக்தர்களிடம் அன்பும் கூடவே வர வேண்டும். அதனால் தான் சுந்தரரும்.” முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் “ என்று பாடினார். இப்படி இருந்தால்  ஆலயத்தில் நடக்கும் குற்றங்களை அர்ச்சகர் மீது வீணாகச் சுமத்த அஞ்சுவார்கள். ஆனால்,சிரத்தை குறைவு, அனாசாரம்,அலட்சியம், அகந்தை, பணத்தாசை ஆகியவை மேலோங்கும்போது இதுபோன்ற பழிகளுக்கு ஆளாக நேரிடும்.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவர சுவாமி ஆலயத்தில் உண்டியலை மாற்றுச் சாவி மூலம் திறந்து அர்ச்சகர்கள் இருவர் திருடியதாகத் தொலைக் காட்சி ஒன்றில் காட்டப்பட்டுள்ளது.இத்தகவல் அதிர்ச்சியையும் தாங்க முடியாத வேதனையையும் தருகிறது. காமிராவில் பதிவானதையும் கூடவே காட்டினார்கள். பிடிக்கப்பட்ட இரு அர்ச்சகர்களையும் காட்டி, அவர்கள் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதாகச் செய்தி வெளியானது.
குற்றத்தின் பின்னணியைக் காவல் துறையினர் நிச்சயம் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறோம். எப்படி இருப்பினும் தனக்காகவோ பிறருக்காகவோ இந்தச் செயலை செய்வது சிவத் துரோகம் அல்லவா? நல்ல வருமானத்தைத் தரும் இக்கோயிலில் இப்படிப்பட்ட பேராசையுடன் அர்ச்சகர்கள் ஈடுபட்டார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.
இதற்காகவே காத்திருக்கும் நாத்திக வாதிகளும், பிராமணத் துவேஷிகளும் கொக்கரிப்பார்கள் என்பதை இவர்கள் அறியாமல் இச்செயலில் ஈடுபடலாமா? “ அப்போது நாங்கள் சொன்னபோது நீங்கள் நம்பவில்லை, இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் “ என்று சவால் விடப் போகிறார்கள். மொத்த அந்தணர் சமுதாயத்தையும் வெட்கித் தலை குனியச் செய்து விட்டது இச் சம்பவம்.

பின் குறிப்பு: இப்பதிவு ஆசிசைவ மற்றும் அந்தணர்களின் பிற பிரிவினர்களுக்கு மட்டுமே எழுதப்பட்டது. இதனைப் பிறரிடம் பகிர்வது நமக்கு மேலும் இழிவைத் தேடித்தரும்.      

Saturday, December 22, 2018

ஆணி வேருக்கு ஆபத்து நேரக்கூடாது


கல்வியும், மருத்துவ வசதியும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதுதான்.. இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. ஆனால் இதில் அதிக பங்கேற்க வேண்டியது அரசாங்கமே. ஏனெனில் இதற்காகும் செலவை எதிர்கொள்ளும் வலிமை அரசுக்கே  சாத்தியம். . தனி நபர்களோ, ஒரு சில இயக்கங்களோ சிறிய அளவிலேயே செய்ய முடிகிறது. இருப்பினும் ,இதற்கு விலக்காகச் சிலர் சிறப்பாகச் செயல் படுவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. கல்வி வளர்ச்சியால் தனிநபருக்கும் நாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதையும் மறுக்க முடியாது. 

தனியார்கள் செய்வதென்பது, அவர்களது சேவை மனப்பான்மையைக் காட்டுகிறது. ஆனால் இதன் மூலம்               பேரும்,புகழும்,பணமும் சம்பாதிப்பதைக் குறிக்கோளாக யாராவது கொண்டால் பயனாளிகளுக்குப் பெரிய நன்மை விளைவதில்லை. மிகவும் வசதி படைத்தவர்களோ அல்லது அளவிற்கு அதிகமாகப் பொருள் ஈட்டியவர்களோ இவற்றைச் செய்து வரி விலக்குப் பெறக் கூடும். தனியார் கல்வி மற்றும் மருத்துவ  நிறுவனங்களில்  லாப நோக்கோடு செயல்படும் பல இடங்களைப் பார்க்கிறோம். 

கல்வித்தரத்தைப் பற்றிப்  பேசுபவர்கள் எப்படிப் பட்ட கல்வி வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதைச் சிந்திப்பதில்லை. தேவையற்ற பாடத் திட்டம் திணிக்கப் படுகிறது. எதைப் படித்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற ஒரே அடிப்படையிலேயே மாணவ மாணவியர்கள் கல்வியை அணுகுகிறார்கள். சம்பந்தமில்லாத படிப்பு படித்தவர்களையும் சில நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. கை நிறையக் காசு சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் வாழ்க்கைக்கேற்ற கல்வியைப் பற்றி எண்ணவே நேரம் இல்லாமல் போய் விட்டது.இப்படியே போனால், படிக்காமலேயே குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு விட்டு விடும்.

வேற்று மதத்தவர்கள் கல்விக்கும், மருத்துவத்துக்கும்  சேவை செய்யும்போது உள் நோக்கம் இருக்கத்தான் செய்யும்.  நம்மவர்களும் ஆன்மீக சேவையோடு இதுபோன்ற சேவைகளையும் செய்யத் தொடங்கி விட்டனர். இராமகிருஷ்ண மடத்தின் சமூக சேவை நாடறிந்தது. இதேபோல் பல்வேறு மடங்களும் இச்சேவைகளைச் செய்து வருவது பாராட்டுக்குரியது. ஆனாலும் மடங்களின்  அடிப்படை நோக்கமான  மக்களை நன்னெறிப் படுத்தும் இலக்கை ஒருபோதும் பணயம் வைக்கலாகாது. அது கலாசார சீரழிவுக்கே வழி வகுக்கும். 

மற்ற சமூகத்தினர் போல் அர்ச்சகர் சமூகமும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளத் துடிக்கிறது என்பது உண்மைதான். இந்த நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம், அவர்களுக்கு ஆலய நிலங்களிலிருந்து பெறப்பட்டு வந்த நெல்லும் ஊதியமும் கொடுக்கப்படாமல்   ஏமாற்றப்பட்டதுதான்.  அவற்றை மீட்டுக் கொடுத்தாலே அவர்களது பொருளாதாரம் முன்னேறிவிடும். சம்பந்தமில்லாத கல்வியைக் கற்று விட்டு மீண்டும் ஆலய பூஜைக்கு வர எத்தனை பேருக்கு மனம் வரும் ? அதோடு, சமூகத்தில் தாங்கள் அலுவலக வேலை செய்தால் மட்டுமே மதிக்கப் படுவார்கள் என்ற எண்ணமும்  வந்து விட்டதே ! 

அர்ச்சகர் சமூகப் பெண் குழந்தைகள் கல்லூரிகளில் படித்துவிட்டால் வேலைக்குச் செல்வதையே விரும்பும் சூழ்நிலை உருவாகிறது. அப்படி வேலைக்குச் சென்று கை நிறையப் பணம் சம்பாதிப்பவர்கள்,தங்களைப் போல் வேலைக்குச் செல்லும் ஆண்களையே மணம் செய்ய விரும்புவதால், ஆகம-வேத பாடசாலைகளில் கற்று விட்டுக்  கோயிலிலும், கும்பாபிஷேகம்-பாராயணங்களிலும்,பிற சுப காரியங்களிலும்  நிறைய சம்பாதிக்கும் எத்தனையோ  பையன்களுக்குத்  திருமணம் ஆவது மிகவும் கடினமாக ஆகி விட்டது. இந்நிலையில் எந்தப் பையன் இனிமேல் பாடசாலைக் கல்வியையும், ஆலய பூஜையையும் விரும்புவான் ? அப்படியானால் அடுத்த தலைமுறையில் ஆதிசைவ குலம் சிவாலய பூஜை செய்ய முன்வரத் தயங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா ? 

கச்சி மூதூர் அர்ச்சகர் நல நிதியாக ஒரு திட்டத்தை காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் அறிமுகப்படுத்தி, சிவாச்சார்யார்கள்,பட்டாச்சாரியார்கள் மற்றும் கிராமக் கோயில் பூசாரிகள் பலருக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கச் செய்தார்கள். தற்காலத்தில், பணமதிப்புக் குறைந்து விட்டதால் அதுவும் பெரிய அளவில் துணை செய்ய முடியாமல் போய் விட்டது. இந்தத் தர்மசங்கடமான நிலையில்தான், தற்போது காஞ்சி சங்கர மடம்  அர்ச்சகர் குலப் பையன்களுக்கு உயர்கல்வியை இலவசமாகத் தர முன் வந்துள்ளது. உயர்ந்த நோக்கம் ஆனாலும் இதன் பின் விளைவுகளைக் கண்டு நாம் அஞ்சுகிறோம். 

நமக்குத் தெரிந்த வரையில், பெண்களுக்கு நிகராகப் பையன்களும் சம்பாதித்து விட்டால் கல்யாணப் பிரச்சினை வேண்டுமானால் தீர்ந்து விடலாம்.கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு பெரும்பாலான பையன்கள் வேலைக்குப் போய் தங்களைத் திருமணத்திற்குத் " தகுதி "  ஆனவர்களாக ஆக்கிக் கொள்ளவே முயற்சிப்பார்களே தவிர, கோயில் பூஜைக்கு வர முன் வருவோர் அநேகமாக இல்லாமல் போய் விடும். கணவன்-மனைவி இருவருமாக சம்பாதிக்கும் சூழ்நிலையில்,  எந்த கைங்கர்யத்திற்காக இந்தக் குலம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதோ அதிலிருந்து முற்றிலுமாக விலகிவிட வாய்ப்பு ஏற்பட்டு விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.  அதனால், ஆலய பூஜையை- அதிலும் குறிப்பாகக்  கிராமக் கோயில்களைப் பூஜையைச்  செய்ய சிவாச்சார்யார்களே இல்லாமல் போகும் அபாயம் ஏற்படுவதை மேலும்  துரிதமாக்கும் செயலை செய்யலாகாது என்ற எண்ணத்தால் மட்டுமே இவ்வாறு எழுத வேண்டி இருக்கிறது.  

பாடசாலைகளில் படிப்போருக்கும் , ஏழ்மை நிலையில் உள்ள சிவாச்சாரியார்களது வீட்டுத் திருமணங்களுக்கும் நிதி உதவி செய்யலாம். மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மேற்படிப்புக்கு உதவப்போய் ஆணி வேரே  ஆட்டம் கண்டுவிடும்படியாக  எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது. ஆகவே, ஆதிசைவ குலப் பெண்கள் தங்கள் குலம் காக்கப் படவேண்டும் என்ற அக்கறை உடையவர்களாக இருத்தலே இன்றையத் தேவை. பையன்களை மாற்றப் போய் மொத்தமாகவே கோயில் பூஜைகள் சமூகத்தை விட்டே போகும்படி எந்த விஷப் பரிட்சையிலும் இறங்கலாகாது.   

Monday, November 26, 2018

ஆதி சைவர் நலன்

ஆச்சார்யாபிஷேகம் 
மதிப்பிற்குரிய சிவாச்சாரியப் பெருமக்களுக்கும் அவர்கள் நலனில் ஈடுபட்டுள்ள சிலருக்கு மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்படும் பதிவு இது. ஆகவே இதனை உரியவர்களுக்கு மட்டுமே பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

ஆதி சைவர்கள் என்றும் முப்போதும் திருமேனி தீண்டுவார் என்றும் அழைக்கப்படும் இச்சமூகம் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நன்மை தீமை முழுதும் அவரவர் வினை வழியே நடைபெறும் என்பதில்  யாருமே விதி விலக்கு அல்ல. சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றிய ஆகம வழிப்படி பூஜைகள் நடைபெறாததற்கு ஆயிரம் காரணம்   இருக்கலாம். ஆனால் அடிப்படையான சிரத்தையே குறைவதற்கு என்ன காரணம் சொல்ல முடியும் ? .

சிவபுரம் கும்பாபிஷேகம் 
நித்திய கர்மானுஷ்டானங்கள்,  ஆகம பாடசாலைக் கல்வி, தீக்ஷை, ஆச்சார்ய அபிஷேகம், ஆத்மபூஜை  ஆகியவற்றைக் கடைபிடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பூஜை உரிமை ஆதி சைவருக்கே என்பதைப்  பிறகு எந்த வழியில் நிலை நாட்ட முடியும் ? ஆசார லோபத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கே இல்லை. இவ்வளவு லோபங்களுக்கு இடையில் பெருமானது சாந்நித்தியம் எப்படி ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹத்தில் இருக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா ? 

ஆகம பாட சாலை நிறுவிப் பெயரும் பணமும் சம்பாதித்து விட்டால் நித்திய பரார்த்த  பூஜை என்கிற கடமையே மறந்து போகிறது. வெளி நாட்டுப் பயணங்கள் இருக்கவே இருக்கிறது.  அப்படிப் பட்டவர்கள் கும்பாபிஷேகம் செய்து  வைக்கப் போனாலோ, மைக்கையும், வீடியோவையுமே நாடுகிறார்கள். ஹோம குண்டங்களில் அமர்ந்துள்ள எத்தனை பேர் யாகசாலை மந்திரங்களில் அக்கறை காட்டுகிறார்கள்? கும்பாபிஷேகம் முடிந்தவுடன் சம்பாவனையை வாங்கிக்கொண்டு சாப்பிடப்போகும் பலருக்கு ,மகாபிஷேகத்திலோ, யாகசாலையில் செய்யப்படும் உபசாரங்களிலோ  சிரத்தை இல்லாமல் போனது ஏன் என்று யாராவது விளக்க முடியுமா ? 

நன்றி: வலைத்தளத்தில் வெளியிட்டவருக்கு 
ஒரு கும்பாபிஷேகம் என்றால் ஏறத்தாழ இருபது சிவாச்சார்யர்கள் வந்து நடத்தி வைக்கிறார்கள். அந்த வருகையைத்  தங்கள் குடும்ப நலனுக்காகவும் பயன் படுத்திக்கொள்ளலாம் அல்லவா? தமது வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை ஆங்கிலக் கல்வி கற்க வைத்து, வேலைக்கும் அனுப்பி விடத் துடிக்கிறார்கள் பலர். பிற்காலத்தில் கோயில் பூஜை எக்கேடு கெட்டால் என்ன என்று இருப்பவர்கள் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும். வேலைக்குச் சென்று விட்ட இவர்கள் வீட்டுப் பெண்கள் கை நிறைய சம்பாதிக்கும் போது கோயில் பூஜை செய்யும் பையனைத்  திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். வேதம் கற்கும் மாணவர்களுக்கும் இதே நிலைதான். 

கும்பாபிஷேக யாகசாலை 
பல ஊர்களில் மேற்படி காரணத்தால் பல ஆதிசைவ குலப் பையன்களுக்குத் திருமணம் ஆகாமல் போ ய் விடுவதைப் பார்க்கிறோம். பெண்கள் மட்டுமல்ல. அப்பெண்களைப் பெற்றோர்களும் சிவ பூஜைகள் தொடரமுடியாதபடித் தவறிழைக்கிறார்கள். அதிலும் கிராமக் கோயில்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. 

இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் போது ஒன்று சேரும் சிவாசார்யர்கள் அங்கு வந்துள்ள தமது சமூகத்தினரிடையே ஜாதக பரிவர்த்தனை செய்து கொள்ளலாமே! அதெல்லாம் செய்யாமல் மறு நிமிடமே ஏன் பறந்து விடத் துடிக்க வேண்டும் ? 

வருமானம் இல்லாமல் சிரமப்படுவது உண்மை தான். ஆனால் உண்மையாகத் தொண்டு  செய்யும்  பூஜகர்களுக்கு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் உள்ள அன்பர்கள் உதவிக் கரம் நீட்டத் தயாராக இருக்கிறார்கள். " என்னோடு போகட்டும் " என்று இருப்பவர்களை மட்டும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதேபோல, எனது பெண்ணை யாருக்குத்  திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். யாரும் சொல்லத் தேவை இல்லை என்று இருப்பவர்களையும் ஒன்றும் செய்வதற்கில்லை. அவரவர் தலைவிதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியது தான். 

ஒருங்கிணைக்கும் நல்லுள்ளம் கொண்ட சிவாசார்யர்களாவது முயற்சி செய்வது நல்லது. உலகை வலம்  வந்துகொண்டு பொன்னாடைகள் போர்த்திக் கொள்பவர்கள் முன் வரப் போவதில்லை. அவர்கள் வேண்டுமளவு பணம் சம்பாதித்து ஆகி விட்டது.  குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், சிவாலயங்களில் பூஜை செய்வது நமது கடமை என்ற எண்ணம் இருப்பவர்கள் மட்டுமே முன்வர முடியும். அரசாங்கத்தையும் பிற மனிதர்களையும் நம்பிக் கையேந்துவதை விட நமது குல தெய்வமான பரமேச்வரனே நமக்குக் கதி என்று எண்ணுபவர்களை இன்றளவும் சுவாமி கை விடாமல் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார். இதை வாய் விட்டுப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் பூஜகர்களை நாம் சந்தித்திருக்கிறோம். 

சமூகம் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு பூஜகரும் நினைவில் வைக்க வேண்டி உள்ளது. அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளும், பாவச் செயல்களும் மக்களாலும் மகேசனாலும் கண்காணிக்கப் படுகின்றன. நமக்கு ஒழுக்கம்,ஆசாரம், நியமம், சிரத்தை ஆகியவை நாள்தோறும் வளர வேண்டும் என்று மனமார பிரார்த்தித்துக் கொண்டு ஒரு வில்வத்தை சுவாமி மீது சார்த்தினால் போதும். மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்வான். புகழ்த்துணை நாயனாராகிய ஆதி சைவருக்கு நித்தலும் படிக்காசு வைத்த பரமன், தன்னை நாள்தோறும் காலம் தவறாமல் நியமத்தோடு பூஜிப்பவனை எப்படிக் கைவிடுவான்? காப்பது அவன் கடமை ஆகி விடும் அல்லவா ? 

Monday, October 8, 2018

கால லோபமும் நியம லோபமும்

சிவாகமப்படி நூறு சதவீதம் பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் இல்லாமல் இருந்தாலும் அடிப்படையே இல்லாமல் போகக் கூடாது. நம் சௌகர்யத்திற்கு பூஜை முறைகளை மாற்றிக் கொள்ள நாம் யார் ?  " முச்சந்தி முட்டாத மூவாயிரவர் " என்று தில்லை வாழ் அந்தணர்கள் புகழப்படுகிறார்கள். காலம் தோறும் தவறாமல் பூஜைகள் நடைபெற்று வந்ததுபோக இன்று பல கிராமங்களில் ஒரு கால பூஜைக்கே ஏங்க வேண்டி இருக்கிறது. காரணங்கள் ஆயிரம் இருந்து விட்டுப் போகட்டும். ஆர்வம் இல்லாவிட்டாலும் சிரத்தையாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு கால பூஜை என்றால் இன்ன நேரத்திற்குக் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மிகவும் முக்கியம். எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு மதியம் மூன்று மணிக்குப் போய் பூஜை செய்வது என்று ஏற்பட்டு விட்டால் அதுவே பழக்கமாகிவிடும்.  இறைவன் பசியால் காத்திருப்பாரே என்று ஏங்கிய கண்ணப்ப நாயனார்  விரைந்து ஓடி மலை மீதிருந்த குடுமித்தேவரைச் சென்றடைந்தார் என்று புராணம் கேட்டிருந்தும் இவ்வாறு நடக்கக் கூடாது அல்லவா? கால லோபத்தை அனுமதித்தால் பிற லோபங்கள் தானாகவே புகுந்துவிடும்.

 நியம லோபம் ஏற்படுவது பல இடங்களில் வாடிக்கை ஆகி விட்டது. அதிகாரியின் மிரட்டல், அதிக அளவில் மக்கள் வருகை, பக்தர்களின் பொறுமை இன்மை ஆகியவை காரணங்களாகக் காட்டப்பட்டாலும் நியமம் இன்றி எவ்வாறு பூஜை செய்வது ? பூஜை முறைகள் மிகத் தெளிவாக ஆகமங்களில் கூறப்பட்டிருந்தும் அவற்றை மீறுவது அவ்வாகமங்களை அருளிய சிவபிரானின் கட்டளையை மீறுவது போலாகுமே !  குறுக்கு வழிகளில் மனம் போன போக்கில் மற்ற வேலைகளை வேண்டுமானால் செய்யலாம். சிவாராதனையைக் கூடவா நியமமின்றிச் செய்வது ? 

தெய்வ தரிசனத்தை ஒருபோதும் காட்சிப் பொருள் போல ஆக்கி விடக்கூடாது. அர்ச்சனை செய்தால் மட்டுமே ஒரு காலத்தில் கற்பூர ஹாரத்தி செய்து வந்தார்கள். அதனால் கோயிலுக்குச் செல்பவர்கள் வெறும் கையோடு போக மாட்டார்கள். கற்கண்டு ,திராக்ஷை போன்றவற்றையாவது நைவைத்தியம் செய்யச் சொல்லிவிட்டு ஹாரத்தி செய்யச் சொல்வார்கள். ஆனால் இப்போதோ தொடர்ந்து கற்பூரம் காட்டப் படுகிறது. மக்கள் வரிசையில் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் அர்ச்சனை என்பது பெயர் அளவில் ஆகி விடுகிறது. அஷ்டோத்திர நாமாவளி குறுகிப் போனது தான் மிச்சம். பல அர்ச்சனைத் தட்டுக்கள் வரிசையாக வைக்கப்பட்டு ஒரே முறைதான் அர்ச்சனை செய்வது  சாத்தியம் ஆகிறது.  

போர் குழாயைத் திருப்பி விட்டால் அபிஷேக நீர் கருவறையிலோ அர்த்த மண்டபத்திலோ நிரம்பும் நவீன காலத்தில் ஸ்நபனமாவது ஒன்றாவது ?  பூவோடு நீர் சுமந்து கொண்டு வந்த காலம் இனி எப்போது வரப் போகிறது? திருமஞ்சனம் ஆறுகளில் இருந்து கொண்டு வந்த காலம் மலை ஏறிப் போய் விட்டது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் போதிய வருவாய் இல்லை என்று விளக்கம் சொல்லக் கேட்கிறோம். வருவாய் மிகக் குறைவு தான். ஒப்புக் கொள்ளாதவர் எவரும் இருக்க முடியாது. அதே நேரத்தில், நியமத்துடனும் சிரத்தையுடனும் பூஜை செய்பவர்களை மக்கள் அலட்சியம் செய்வதில்லை. இறைவன் அந்த பூஜையை ஏற்றுக் கொள்வதன் அடையாளமாக மிகக் குறைவாக மக்கள் வந்து கொண்டிருந்த திருமணஞ்சேரி போன்ற ஆலயங்களில் இப்பொழுது மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்க்கிறோம். இதற்கு மூல  காரணம் அங்கு அரும் பணியாற்றிய சிவாச்சாரியார் என்பதை நேரில் கண்டவர்கள் ஒப்புக் கொள்வார்கள். 

இப்போது கோவிலுக்கு வருபவர்கள் பல்வேறு ஆடைகளை அணிந்து கொண்டு வருகிறார்கள். சிலரிடம் துர் நாற்றம் வீசுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நெற்றியில் விபூதி பூசி விட்ட பின்னர் இறைவனைத் தொட்டு பூஜையைத்  தொடரலாமா என்பதை ஆகம வல்லுனர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம். முன்பெல்லாம் சமுதாயத்தில் அர்ச்சகர்களின் பங்கு முக்கியமாகக் கருதப்பட்டது. குருவாக அவர்களை மக்கள் ஏற்ற படியால் குருக்கள் என்று போற்றப்பட்டனர். நகரத்தார்களுக்கு சிவ தீக்ஷை செய்து வைத்த சிவாகம சீலர்கள் பலர் உண்டு. 

சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து வந்த சிவாசார்ய பரம்பரை இன்று போதிய வருவாய் இல்லை என்ற ஒன்றையே மனதில் கொண்டு ஆகம விதி மீறல்களைச் செய்யத் தொடங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டைப் பலரும் சொல்லக் கேட்கையில் மனம் வேதனைப் படுகிறது. நமக்குத் தெரிந்தவரையில் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறோம். நமக்குப் படி அளப்பவன் பரமேசுவரன் ஒருவன் தான். நடைமுறையில் அதிகாரி மூலம் ஊதியம் பெறுவது போலத் தோன்றினாலும் இதுவே உண்மை. அப்படியானால் இத்தனை துயரங்கள் ஏற்படுவானேன் என்று கேட்கலாம். மேற்கண்ட லோபங்கள் புகுந்து விட்டபடியால் சிவாபராதம் ஏற்பட்டு அதன் பலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. குற்றம்  பொறுத்துக் குணம் ஒன்றையே கொள்ளும் பரமன் மட்டுமே சரண் என்று நம்பியவர்கள்  என்றும் கை விடப் படுவதில்லை. இது எக்காலத்திற்கும் பொருத்தம்.

Tuesday, April 10, 2018

யாரிடம்தான் குறை இல்லை ?

ஒவ்வொருவருக்கும் தான் செய்யும் செயல்கள் எல்லாம் சரியாகவே தெரிகிறது. தங்களுக்கென்று ஒரு பாணி, முத்திரை ஆகியவற்றோடு மக்களிடயே உலா வருகின்றனர். அப்படி வரும்போது அவர்களுக்குப் பின் ஆதரவாளர்கள் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. நாட்டுக்கும் மொழிக்கும் எதிராகச் செயல் படுவோர்களுக்கே ஒரு கூட்டம் பின்னால் நிற்கும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ள நிலையைக் கூடப் பார்க்கிறோம். கருத்துக்கள் தாராளமாக மக்கள் முன்னிலையில் வீசப்படுகின்றன. ஆனால், சுட்டு விரல் பிறரைச் சுட்டிக் காட்டும்போது ஏனோ கட்டைவிரல் நம் பக்கம் பார்ப்பது மறந்து போய் விடுகிறது.

யாரை எளிதாகக் குறை கூற முடியுமோ அவர்களை இலக்காக வைக்கத் துவங்கி விட்டனர். அதற்காக எவரும் குறை இல்லாதவர்கள் என்று சொல்ல வரவில்லை. ஏதோ ஒரு விதத்தில் நாம் எல்லோருமே குறை உடையவர்கள் தான். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தான் இன்னும் நமக்கு வரவில்லை. 

சமய உலகிலும் குறைகள் காண்பது இயற்கை. சிவாகமமே அக்குறைகளைப் பட்டியலிட்டு பூஜை முடிவில் சிவாச்சாரியாரை விட்டுச் சொல்லச் சொல்லும்போது நம்மவர்கள் குறை சொல்லப் புகுவதற்கான தேவையே இல்லை. அதற்கு மேலும் குறைகள் தொடர்ந்தால் அதற்கான பொறுப்பு இன்னாருக்கு என்று இறைவன் தீர்ப்பு அளிப்பான். நாம் முதலில் நமது குறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டி வழிபாடு செய்வதே நல்ல பண்புக்கு அடையாளம். 

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது முன்னோக்கி உள்ள சூழ்நிலையில் அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பதைப் பற்றி எவ்வளவு பேர் கவலைப் படப் போகிறார்கள் ? எப்படியாவது பொருள் சம்பாதித்து இம்மாதத்தை ஓட்டியாகவேண்டிய கட்டாயத்தில் அனைவரும் தள்ளப்பட்டுள்ளார்கள்.  வறுமையின் காரணமாக சொல்லமுடியாத துன்பங்களில் சிக்கியுள்ள குடும்பங்கள் தமக்கே உரிய வழிகளிலிருந்து தடம் மாறி விடுகின்றன. செய்யும் தொழிலில் அசிரத்தை ஏற்படுத்தும்  விபத்தும் நடைபெற்று விடுகிறது.. அவர்களது துன்பம் துடைக்க முன் வருவோர் சிலர். ஆனால் அவர்கள் சொற்ப வருவாயிலும் பணி  செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று வேறு சிலர் எதிர்பார்ப்பது வேதனையாக உள்ளது. 

பாட சாலைகளில் பயிற்சி பெற்றுக் காலம் தோறும் நியமத்தோடு சிவாலய பூஜை செய்ய வேண்டும் என்று ஆதிசைவ சமூகத்திடம் எதிர்பார்ப்பது நியாயம் தான். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நெல் நிறுத்தப்பட்டபோதும், மிகச் சொற்ப சம்பளம் கொடுக்கப்படும் நிலையிலும் அவர்கள் மறு பேச்சே பேசாமல் பணியைத் தொடர வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா ? அப்படி எதிர்பார்ப்பவர்கள், தாமாக முன்வந்து அவர்களுக்கு மாதம்  தோறும் முடிந்த உதவி செய்யலாமே ! அதை விட்டுவிட்டுக் குறை சொல்வதால் என்ன மாற்றத்தை எதிர் பார்க்க முடியும் ? 

மக்கள் எப்போது ஆதரவளிக்கத் தவறி விட்டார்களோ அப்போதிலிருந்தே விபரீதம் தொடங்கி விட்டது. கிராமங்களில் ஆலயங்களுக்கு ஆதரவளித்து வந்த அக்கிரகாரங்கள் காலியாகி விட்டன. கோயில் சிப்பந்திகளில் அர்ச்சகரைத் தவிர எல்லோரும் இடம் பெயர்ந்து விட்டார்கள். ஆகவே பூ பறித்துக் கட்டுவது, ஆலயத்தை சுத்தப் படுத்துவது , அபிஷேகத்திற்கு ஜலம் கொண்டு வருவது, நைவேத்தியம் தயார் செய்வது போன்ற வேலைகளும் அர்ச்சகர்களுக்குப் புகுத்தப்பட்டு விட்டன. இதற்காகக்  கூடுதல் வருமானமா அவர்களுக்கு வருகிறது ? முன்னோர் வசித்த வீட்டில் இருந்து கொண்டு, எவ்வளவோ சிரமத்துக்கு நடுவில் பணியாற்றுபவர்கள்  இன்றும் இருக்கிறார்கள். அந்த வீடுகள் பெரும்பாலும் மேற்கூரைகள் பழுதாகி மழை நீர் வீட்டுக்குள்ளே கொட்டியும் இரவு பூராகவும் கண் விழித்து மேற்கூரை இடுக்கு வழியாகக் கொட்டும் மழை நீரைப் பாத்திரங்களில் பிடித்து அவை நிரம்பியவுடன் அப்புறப்படுத்தும் குடும்பங்களைப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் அவர்கள் படும் சிரமங்கள் .

பாடல் பெற்ற சிவாலயங்களில் சில சிவாச்சார்யார்களால் கைவிடப் பட்டு விட்டன என்று கூறுவோர் உண்டு. ஆனால் சமூகமே அவர்களைக் கைவிட்டுவிட்ட நிலையில் வேறு வழி இல்லாமல் இடம் பெயர்கிறார்களே ஒழிய அக்கிராம மக்களோ அரசாங்கமோ ஆதரவளித்தால் எதற்காக வேறிடத்திற்குப் போகப் போகிறார்கள்? அர்ச்சகர் இல்லாததால் ஒரு கோவிலில் மெய்க் காவல் புரிபவரின் மகன் பூஜை செய்வதாக ஒரு அன்பர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் காலை நேரத்தில் அக் கோயிலைத் தரிசிக்கச் சென்ற  படியால் ஒன்று மட்டும் கூறுகிறோம். சுவாமிக்கு அபிஷேகம் மாலை நேரத்தில் மட்டுமே நடத்துவதாக அம்மகனாரே ஒப்புக் கொண்டார். இதைத்தான் இச் சமூகம் ஏற்கிறதா? அல்லது இறைவன்தான் மனமுவந்து ஏற்கிறாரா? உள்ளூர் மக்கள் முன்வந்து ஒரு சிவாச்சார்யாருக்குத்  தகுந்த ஊதியம் வழங்கி விட்டு அதற்குப் பிறகு குறைகள் இருந்தால் களைய முற்படலாமே ! 

அரசு ஊழியருக்கு சமமாக ஆலய ஊழியருக்கும் சம்பளம் வழங்கப்படும் என்று அண்டை மாநிலம் அறிவித்ததை இங்கு எத்தனை பேர் ஆதரித்து அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார்கள்? இங்கேதான் தொட்டதற்கெல்லாம் மொழிப் பிரச்னை,ஜாதிப் பிரச்னை என்று சொல்லியே மக்களை திசை திருப்புகிறார்களே. கோயில்களோ சிப்பந்திகளோ எப்படிப் போனால் இவர்களுக்கு என்ன? பொதி சுமக்கும் விலங்குகளுக்குச் சமமாகத்தானே ஆலய ஊழியர்கள் பார்க்கப்படுகிறார்கள் ! 

நிறைவாக ஒன்று சொல்ல விரும்புகிறோம். நமது இன்றைய தேவை கிராமம் தோறும் சென்று குறை அறிந்து அவற்றை நிவர்த்தி அளிக்கும் தன்னலமற்ற தொண்டர்கள் மட்டுமே.  இருந்த இடத்திலிருந்தே முற்றோதுதல்,அன்ன தானம் செய்தல், ஆகியவற்றைச்  செய்துவருபவர்கள் இதுபோன்ற இடங்களுக்குச் சென்று செய்யலாம். உழவாரம் செய்யும் அடியார்கள் இச் செயல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உள்ளூர் வாசிகளுக்கு ஊர்க் கோயிலின் பெருமையை எடுத்துச் சொல்லி, தினசரி வழிபாட்டிற்கு வரச் சொல்ல வேண்டும். அர்ச்சகர்கள் அவர்களை நம்பியே காலம் தள்ளுகிறார்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். 

சொந்த ஊரை விட்டு விட்டு நகரங்களுக்குக் குடிஏறியவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தயவு செய்து உங்கள் பூர்வீக கிராமத்தின் கோயில்களுக்கும் அவற்றின் அர்ச்சகர்களுக்கும் குன்றிமணி அளவாவது கொடுத்து உதவுங்கள். உங்களது முன்னோர்கள் உங்களை நம்பியே இக்கோயி ல்களை விட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள். நம் குடும்பத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கும் போது, இதுவரையில் சிறிதளவும் உதவாதவர்கள் இனிமேலாவது அதை மேற்கொள்ளலாம். அது உங்கள் வம்சத்தையே காப்பாற்றும். செய்து பார்த்தல் தான் அதன் அருமை புரியும். 

வெள்ளி மலையை நோக்கிப் பறந்து செல்லும் காக்கையும் அந்நிறம் பெறும் என்பது போல இறைவனை நோக்கிச் செல்லும் நாம் அனைவரும் அவனது குணங்களில் ஒரு சிறு துளியேனும் பெற முயற்சிக்க வேண்டாமா?  " குறை உடையார் குற்றம் ஓராய் " என்று  அடியார்களது குற்றத்தை மன்னித்துக் குணத்தையே கொள்ளும் சிவபரம்பொருளின் பெரும் கருணையை சம்பந்தர் பாடுகின்றார். " பழுது இல் தொல் புகழாள் பங்க "  என்று திருவாசகம் பார்வதி பரமேசுவரர்களது புகழ் தொன்மையானதாகவும், குற்றமற்றதாகவும் விளங்குவதாகக் கூறும். எனவே , நமது குறைகள் நீங்க ஒவ்வொருவரும் வழிபட்டால் ஊரே குறையற்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும். அதற்கு அடுத்த படியாகப் பிறருக்கு இரங்கும் குணம் தானாகவே வந்து விடும். அந்த இரக்க குணம் வந்துவிட்டால் நாம் புனிதர்கள் ஆகி விடுவோம். நமது வழிபாடும் அப்போதுதான் அர்த்தமுள்ளதாக ஆகும். குற்றமே பெரிதும் உடைய நம்மிடத்திலும்  கடைக் கண் பாலித்து நம்மை உய்ய வைக்க வேண்டும் என்று ஞான பரமேசுவரனை பிரார்த்திப்போம். 

Monday, March 12, 2018

தாயும் ஆகும் ஆதிசைவர்


இறைவனிடம் தொண்டனாகவும், புத்திரனாகவும் , தோழனாகவும் , நாயகி பாவத்தோடும் வழிபடும் மார்க்கங்களை முறையே திருநாவுக்கரசரும்,திருஞான சம்பந்தரும், சுந்தரரும், மாணிக்க வாசகரும்  வாழ்ந்து காட்டி நமக்கு அருளியுள்ளனர். முழுமுதற்கடவுளைத் தாயாகவே கூட இருந்து தன்னையும் பிறரையும் பேரின்ப மாகடலில் திளைக்க வைப்பவர்கள் ஆதிசைவர்கள்.

உண்ணாது உறங்காது இருக்கும் சிவபெருமானுக்கு நியமத்தோடு பூசை செய்யும்போது ஒரு தாய் அன்றாடம் தன குழந்தைக்கு நீராட்டுவதைப்போல நீராட்டுகின்றார் சிவாச்சார்யார். நீராட்டும்போது குழந்தைக்குப் பிடித்த பாடல்களைத் தாய் பாடுவதுபோல, இவரும் ருத்ராதி சூக்தங்களைச்  சொல்கிறார். குளித்த குழந்தைக்கு ஜலதோஷம் வராமலிருக்கத் தாயார் சாம்பிராணிப் புகை போடுவது போல இவரும் பெருமானுக்குத் தூபம் காட்டுகிறார். அன்னையானவள் குழந்தைக்குத் திருஷ்டி சுற்றிப் போடுவது போலவே இவர் விபூதியால் சுற்றிப் போடுகிறார். குழந்தையை அலங்கரித்துக் கண்ணாடி காட்டுவது போலவே இவரும் பெருமானை அலங்கரித்துக கண்ணாடி,குடை,சாமரம் போன்ற பொருள்களைக் காட்டுகின்றார். நீராடிய குழந்தைக்குப் பசிக்கும் என்று கருதிப் பால் நினைந்து ஊட்டும் தாயினைப் போலத் தானும் சாலப் பரிந்து நைவேத்தியம் செய்கிறார். குழந்தைக்கு நாள் முழுவதும் தாய் உணவு ஊட்டுவதைப் போல ஆதி சைவரும் பெருமானுக்கு ஆறு வேளைகள் இவ்வாறு பணி செய்கிறார். இதனால் தானோ என்னவோ குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பெரியோர்கள் கூறினார்கள் போலும்!

மேற்கூறிய ஒப்பு நோக்குதலில் சிறிது வித்தியாசமும் உண்டு. குழந்தை வளரும் வரையில் தான் தாயின் அரவணைப்பில் இருக்க முடியும். ஆனால் ஆதி சைவரோ தனது வாழ் நாள் முழுதுமே பெருமானுக்குத் தாய் போன்று இருந்து பணிவிடை செய்யக் கடமைப் பட்டவர். எனவேதான் ஆகம வழி நின்று பூஜைகள் செய்வது அத்தியாவசியமாகிறது. ஆறு கால பூஜைகள் நடப்பதற்குப் பதிலாக நாளடைவில் நான்கு,இரண்டு என்று ஆகி, ஒரு கால பூஜைகள் நடைபெறுவதையும் பார்க்கும்போது இறைவனை அன்னையாக இருந்து ஆராதிக்கும் அணுகுமுறைக்குக் குந்தகம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

பல்வேறு காரணங்களால் ஒருகால பூஜையே குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறாமல் இருக்கும் ஊர்களைக் காணும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. காலம் தாழ்ந்தால் சுவாமி பசியோடு இருப்பாரே என்று ஓடோடிச் சென்று காளத்தி மலை ஏறித் தான் கொண்டு வந்த இறைச்சியை இறைவன் முன் வைத்து , தலையில் செருகி வந்த காட்டுப் பூக்களை அர்ப்பணித்து , வாயில் கொண்டு வந்த பொன்முகலி ஆற்று நீரைத் திருமுடி மேல் உமிழ்ந்து அன்பின் வடிவமாகத் திகழ்ந்த கண்ணப்ப நாயனாருக்குக் கிடைத்த பேறு யாருக்குக் கிடைக்கும் ? ஒரு கால பூஜை என்று ஆகி விட்ட ஊர்ர்களில் அந்த ஒரு காலமாவது முழு ஈடு பாடுடன் நடைபெறுகிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம்.
உண்மையில் சுவாமிக்கு நாம் நைவைத்தியம் செய்வது என்பது, “ பெருமானே, நீ அருளிய தான்யங்கள் மூலம் செய்த உணவை உனது கருணை என நன்றியுடன் நினைவு கூர்ந்து உனக்கு அறிவிக்கிறேன் “ என்ற உயர்ந்த எண்ணத்தோடு செய்யப்படுவது. வீட்டிலேயும் பூஜை செய்து, மலர்களால் அர்ச்சனை செய்து, நைவேத்தியம் செய்வதன் நோக்கமும் இதுவே ஆகும். உண்பதன் முன் மலர் பறித்து, இறைவனது கழல்களுக்கு இடாவிட்டால், நோய்களுக்கே விருந்தாவர் என்று எச்சரிக்கிறார் அப்பர் பெருமான்.

ஆலய பூஜைகள் ஆறு காலங்கள் நடைபெற்றாலும் ஏதோ ஒரு சில காரணங்களால் ஆகமம் காட்டிய பாதையில் இருந்து சற்று விலகி விட வாய்ப்பு உண்டு என்பதால் கால பூஜையின் இறுதியில் தற்செயலாக நடைபெற்றமைக்கு மன்னிப்புக் கேட்கப்படுகிறது. அது மந்திர-தந்திர லோபமாகவோ, ஸ்ரத்தா லோபமாகவோ,கால-நியம லோபமாகவோ இருக்கக்கூடும் என்பதால் இறைவனிடம் இவ்வாறு விண்ணப்பிக்கப்படுகிறது.

தாயாய் இருந்து தொண்டாற்றும் கடமை பூண்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவாவது , வருமானத்தையோ சிரமத்தையோ பொருட்படுத்தாமல் பணியைத் தொடர வேண்டும். அதற்கான பலனை இறைவன் தராமல் விட மாட்டான். அதிலும் தன்னைத் தாயே போல் சீராட்டிப் பணிவிடை செய்பவனைக் கை விடுவானா அக்கடவுள் ?