Monday, October 8, 2018

கால லோபமும் நியம லோபமும்

சிவாகமப்படி நூறு சதவீதம் பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் இல்லாமல் இருந்தாலும் அடிப்படையே இல்லாமல் போகக் கூடாது. நம் சௌகர்யத்திற்கு பூஜை முறைகளை மாற்றிக் கொள்ள நாம் யார் ?  " முச்சந்தி முட்டாத மூவாயிரவர் " என்று தில்லை வாழ் அந்தணர்கள் புகழப்படுகிறார்கள். காலம் தோறும் தவறாமல் பூஜைகள் நடைபெற்று வந்ததுபோக இன்று பல கிராமங்களில் ஒரு கால பூஜைக்கே ஏங்க வேண்டி இருக்கிறது. காரணங்கள் ஆயிரம் இருந்து விட்டுப் போகட்டும். ஆர்வம் இல்லாவிட்டாலும் சிரத்தையாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு கால பூஜை என்றால் இன்ன நேரத்திற்குக் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மிகவும் முக்கியம். எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு மதியம் மூன்று மணிக்குப் போய் பூஜை செய்வது என்று ஏற்பட்டு விட்டால் அதுவே பழக்கமாகிவிடும்.  இறைவன் பசியால் காத்திருப்பாரே என்று ஏங்கிய கண்ணப்ப நாயனார்  விரைந்து ஓடி மலை மீதிருந்த குடுமித்தேவரைச் சென்றடைந்தார் என்று புராணம் கேட்டிருந்தும் இவ்வாறு நடக்கக் கூடாது அல்லவா? கால லோபத்தை அனுமதித்தால் பிற லோபங்கள் தானாகவே புகுந்துவிடும்.

 நியம லோபம் ஏற்படுவது பல இடங்களில் வாடிக்கை ஆகி விட்டது. அதிகாரியின் மிரட்டல், அதிக அளவில் மக்கள் வருகை, பக்தர்களின் பொறுமை இன்மை ஆகியவை காரணங்களாகக் காட்டப்பட்டாலும் நியமம் இன்றி எவ்வாறு பூஜை செய்வது ? பூஜை முறைகள் மிகத் தெளிவாக ஆகமங்களில் கூறப்பட்டிருந்தும் அவற்றை மீறுவது அவ்வாகமங்களை அருளிய சிவபிரானின் கட்டளையை மீறுவது போலாகுமே !  குறுக்கு வழிகளில் மனம் போன போக்கில் மற்ற வேலைகளை வேண்டுமானால் செய்யலாம். சிவாராதனையைக் கூடவா நியமமின்றிச் செய்வது ? 

தெய்வ தரிசனத்தை ஒருபோதும் காட்சிப் பொருள் போல ஆக்கி விடக்கூடாது. அர்ச்சனை செய்தால் மட்டுமே ஒரு காலத்தில் கற்பூர ஹாரத்தி செய்து வந்தார்கள். அதனால் கோயிலுக்குச் செல்பவர்கள் வெறும் கையோடு போக மாட்டார்கள். கற்கண்டு ,திராக்ஷை போன்றவற்றையாவது நைவைத்தியம் செய்யச் சொல்லிவிட்டு ஹாரத்தி செய்யச் சொல்வார்கள். ஆனால் இப்போதோ தொடர்ந்து கற்பூரம் காட்டப் படுகிறது. மக்கள் வரிசையில் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் அர்ச்சனை என்பது பெயர் அளவில் ஆகி விடுகிறது. அஷ்டோத்திர நாமாவளி குறுகிப் போனது தான் மிச்சம். பல அர்ச்சனைத் தட்டுக்கள் வரிசையாக வைக்கப்பட்டு ஒரே முறைதான் அர்ச்சனை செய்வது  சாத்தியம் ஆகிறது.  

போர் குழாயைத் திருப்பி விட்டால் அபிஷேக நீர் கருவறையிலோ அர்த்த மண்டபத்திலோ நிரம்பும் நவீன காலத்தில் ஸ்நபனமாவது ஒன்றாவது ?  பூவோடு நீர் சுமந்து கொண்டு வந்த காலம் இனி எப்போது வரப் போகிறது? திருமஞ்சனம் ஆறுகளில் இருந்து கொண்டு வந்த காலம் மலை ஏறிப் போய் விட்டது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் போதிய வருவாய் இல்லை என்று விளக்கம் சொல்லக் கேட்கிறோம். வருவாய் மிகக் குறைவு தான். ஒப்புக் கொள்ளாதவர் எவரும் இருக்க முடியாது. அதே நேரத்தில், நியமத்துடனும் சிரத்தையுடனும் பூஜை செய்பவர்களை மக்கள் அலட்சியம் செய்வதில்லை. இறைவன் அந்த பூஜையை ஏற்றுக் கொள்வதன் அடையாளமாக மிகக் குறைவாக மக்கள் வந்து கொண்டிருந்த திருமணஞ்சேரி போன்ற ஆலயங்களில் இப்பொழுது மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்க்கிறோம். இதற்கு மூல  காரணம் அங்கு அரும் பணியாற்றிய சிவாச்சாரியார் என்பதை நேரில் கண்டவர்கள் ஒப்புக் கொள்வார்கள். 

இப்போது கோவிலுக்கு வருபவர்கள் பல்வேறு ஆடைகளை அணிந்து கொண்டு வருகிறார்கள். சிலரிடம் துர் நாற்றம் வீசுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நெற்றியில் விபூதி பூசி விட்ட பின்னர் இறைவனைத் தொட்டு பூஜையைத்  தொடரலாமா என்பதை ஆகம வல்லுனர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம். முன்பெல்லாம் சமுதாயத்தில் அர்ச்சகர்களின் பங்கு முக்கியமாகக் கருதப்பட்டது. குருவாக அவர்களை மக்கள் ஏற்ற படியால் குருக்கள் என்று போற்றப்பட்டனர். நகரத்தார்களுக்கு சிவ தீக்ஷை செய்து வைத்த சிவாகம சீலர்கள் பலர் உண்டு. 

சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து வந்த சிவாசார்ய பரம்பரை இன்று போதிய வருவாய் இல்லை என்ற ஒன்றையே மனதில் கொண்டு ஆகம விதி மீறல்களைச் செய்யத் தொடங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டைப் பலரும் சொல்லக் கேட்கையில் மனம் வேதனைப் படுகிறது. நமக்குத் தெரிந்தவரையில் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறோம். நமக்குப் படி அளப்பவன் பரமேசுவரன் ஒருவன் தான். நடைமுறையில் அதிகாரி மூலம் ஊதியம் பெறுவது போலத் தோன்றினாலும் இதுவே உண்மை. அப்படியானால் இத்தனை துயரங்கள் ஏற்படுவானேன் என்று கேட்கலாம். மேற்கண்ட லோபங்கள் புகுந்து விட்டபடியால் சிவாபராதம் ஏற்பட்டு அதன் பலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. குற்றம்  பொறுத்துக் குணம் ஒன்றையே கொள்ளும் பரமன் மட்டுமே சரண் என்று நம்பியவர்கள்  என்றும் கை விடப் படுவதில்லை. இது எக்காலத்திற்கும் பொருத்தம்.

No comments:

Post a Comment