Tuesday, January 30, 2018

சமயத்தைப் பிடித்துள்ள கிரகணம்

இணைய தள நண்பர் அனுப்பிய படம் : நன்றி 
பொழுது விடிந்தாலே ஒரு சர்ச்சையோடு ஆரம்பிக்கும் காலம் இது. அதுவும் கடந்த ஆண்டினைச்  சர்ச்சை ஆண்டு என்றே பெயரிட்டு விடலாம் போல் இருக்கிறது. சமயம் பற்றிய சர்ச்சைகளே அவற்றில் அதிகமாகக் காணப்படுபவை. சர்ச்சைகள் என்று கூறினால் அவற்றைப் பிரச்னைகள் என்று வேறு பெயர் இட்டு விடுகிறார்கள். எதற்கு எடுத்தாலும் போராட்டம், எதிர்ப்பு என்று ஆகி விட்டது. இப்படிச் செய்வதால் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்ற எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம். இத்தனை காலமும் பின்பற்றி வந்த மரபினை மாற்றத் துடிக்கிறார்கள். ஊடகங்களில் பேட்டி கொடுத்து சுய லாபத்தை அடைய முனைகிறார்கள். 

இத்தனை ஆண்டுகளாக சந்திர கிரஹணம் வந்த போதெல்லாம் மௌனிகளாக இருந்தவர்கள் இப்போது புது சர்ச்சையைத் தோற்றுவித்து மக்களைக் குழப்புகிறார்கள். கிரகண காலத்தில் ஆலயத்தை மூடாமல் திறந்து வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்த வேண்டும் என்று கருத்து வெளியிடுகிறார்கள். ஆகமங்களில் இருந்து வாக்கியங்களை எடுத்துக் கூறி இக்கருத்தை நியாயப்படுத்த முனைகிறார்கள். 

கிரகண காலத்தில் சந்திரனை ராகு பிடிப்பதாகப் புராணங்கள் கூறியதை ஏற்க மறுத்தவர்களும் , அந்த நேரத்தில் ஏற்படும் கதிர்  வீச்சினால் நமக்குப் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞான ரீதியாகக் கூறுவதை ஏற்கிறார்கள்.  அந்நேரத்தில் வெளியில் செல்லாமல் இருந்தால் கதிர் வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதால் கோவிலுக்குக் கூடச் செல்வதை அந்த சில மணி நேரங்கள் மட்டும் இத்தனை காலமும் தவிர்த்து வந்தார்கள். குறிப்பாகக் கர்ப்பமடைந்த பெண்கள் வெளியில் செல்வதால் அதிகமாகப் பாதிக்கப்படுவர் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். 

ஆகமங்களைப் பிரமாணங்களாகக் காட்டி ஆலயங்களைக் கிரகண காலத்தில் திறக்க வேண்டும் என்று சொல்பவர்களைக் கேட்கிறோம்:

1. தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தியே ஆக வேண்டும் என்று அறிக்கை விடாதது ஏன் ? 

2  உற்சவர்கள் வீதி உலா சென்றாலே, ஆலயத்தில் மூலவர் வழிபாடு செய்யலாகாது என்பதால் கோவில் மூடப்படும் நிலையில், உற்சவர்கள் அனைவரையும் பாதுகாப்பு என்ற பெயரில் பல்லாண்டுகள் அறநிலையத்துறை வேறோர் கோயிலில் சிறை வைத்துள்ளதைக்  கண்டித்து அறிக்கை விடாதது ஏன் ? 

3 சுவாமி-அம்பாளுக்கு யாகசாலையில் நவகுண்டங்கள் அமைக்க வேண்டும் என்ற ஆகம உரையை மாற்றி(க்  குறைந்தது ஐந்து குண்டங்களாவது அமைக்காமல்) ஒரே குண்டம் அமைத்துக் கும்பாபிஷேகம் நடத்தும் ஊர்களைக் கண்டிக்காதது ஏன் ?

4 ஆங்கிலப்புத்தாண்டன்று நள்ளிரவில் கோவிலைத் திறந்து வைத்து வழிபாடுகள் செய்வது எந்த ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது ? 

5  இறைவனைப் பல இடங்களில் தீண்டாத் திருமேனி என்று சொல்லிக் கொண்டு மனிதர்கள் நெற்றியில் திருநீறு பூசி விடுவதை யாரும் கண்டித்ததாகத் தெரியவில்லையே ! 

6  ஆகமப் ப்ரவீணர்களாக இருப்பவர்கள் கும்பாபிஷேகத்திற்கு மட்டும் செல்வதோடு நிறுத்தி விடாமல் சாதாரண நாட்களிலும் கிராமக் கோயில்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தினசரி வழிபாட்டின் அவசியத்தை எடுத்துச் சொல்லலாமே ! 

இன்று ஏராளமான ஆலயங்கள் ஈ-காக்காய் கூட இல்லாமல் வௌவால்களும் பாம்புகளும் ஆட்சி செய்து வரும் நிலையில் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஊர் மக்கள் அக்கறை இல்லாமல் ஆலயம் இடியும் நிலையைக் கண்டும் காணாதது போல இருக்கிறார்கள். எடுத்துச் சொல்ல எவரும் முன் வருவதில்லை. இருந்த இடத்தில் இருந்த படியே அறிக்கை மட்டும் விடுபவர்ர்கள். முதலில் மக்களை நல்  வழிப்படுத்தட்டும்  பிறகு மாற்றங்கள் பற்றி யோசிப்போம். 

திருவாரூர் கோயிலைக் கிரகண காலத்தில் திறந்து வைக்க வில்லையா என்று கேட்கிறார்கள். எல்லாக் கோயில்களையுமே திறந்து வைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். கோயிலுக்கு வருபவர்கள் எந்த வேளையிலும் இரண்டு மணி நேரம் அங்கேயே இருப்பது அபூர்வமாகி விட்ட இக்காலத்தில் , அவர்கள் கிரகணம் பிடித்தவுடன் அரை மணி நேரம் தரிசனம் செய்து விட்டு, வீட்டுக் குத் திரும்பும் போது, கதிர் வீச்சுக்கு ஆளாவர் அல்லவா? அது மட்டுமல்ல. கிரகணம் முடிந்ததும் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதால் கோவிலுக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தால் ஸ்நானம் செய்யலாமா என்பதும் நியாயமான காரணமாகப் படுவதால் தினசரி தரிசனத்தை அந்த சில மணி நேரங்களில் செய்யாமல் சற்றுத் தள்ளிப் போடச் சொன்னார்கள் நமது முன்னோர்கள். அவ்வளவுதான். 

அவரவர்கள் தனக்குத் தோன்றியவற்றை நியாயப் படுத்த முனைந்து விட்டபோது யார் என்ன சொன்னாலும் அவ்வளவு எளிதில் ஏற்பதில்லை. அனைவரும் ஏற்கும் படியாக அறிவுரை சொல்பவர் இல்லாமலும் இருக்கக் கூடும். ஒருவேளை இருந்தாலும், ஆணவ மலம் அதனை ஏற்க மறுக்கிறது. 

பக்தி மேலீட்டின் பால், இறைவனே எல்லாவற்றுக்கும் காரணமாக விளங்குவதால் நாம் அஞ்ச வேண்டியதில்லை என்பர் சிலர். உண்மைதான்.ஆனால் இந்தப்பக்குவம் ஏற்பட எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டுமே !  பாமர மக்களுக்குப் போய்ச் சேரும்படி எளிய அறிவுரைகளைக் காலத்தை மனதில் கொண்டு சர்ச்சைகள் ஏற்படாதவாறு எடுத்து உரைப்பதே நல்லது. நிருபர்களைக் கண்டவுடன் வித்தியாசமாகப் பேசியே தீர வேண்டும் என்ற மனப்பாங்கைத் தவிர்த்தல் சமய உலகிற்கே நலம் விளைவிக்கும்.  

Wednesday, January 17, 2018

புராண வரலாறுகளைச் சொல்லலாமே

ஆகமம் தந்த அண்ணலும் அர்ச்சித்த தவக் கொழுந்தும் 
தல யாத்திரை செய்பவர்கள் பலவிதம். சிலர் தாங்கள் ஒரு ஊரின் பெருமையைப் பிறர் சொன்னதால் வருபவர்கள். சிலர் பத்திரிகை,தொலைக் காட்சி மூலம் தெரிந்து கொண்டு வருவார்கள். இன்னும் சிலர்  புத்தகங்களில் படித்து விட்டுச் செல்பவர்கள். எப்படியாவது வரட்டும். சுற்றுலா மாதிரி செல்பவர்கள் இல்லாமல் இருந்தால் நல்லது. யாத்திரை என்பது புனிதமானது. நம்மைப்  புனிதப்படுத்துவது. பொழுது போக்குவதற்கும், கேளிக்கைக்கும் அதனை மாற்றி விடக் கூடாது. யாத்திரை மேற்கொள்பவர்கள் பக்தி நெறியைக் கடைப் பிடிப்பது மிகவும் அவசியம்.

தனியாகச் செல்வோரும் குழுக்களாகச் செல்வோரும் ஒரு வாகனத்தை அமைத்துக் கொண்டு பல கோயில்களுக்குச் செல்கிறார்கள். இக்கோயில்கள் பெரும்பாலும் கிராமங்களில் உள்ளன. இவ்வாறு பலர் வருகை தருவதால் ஆலய சிப்பந்திகளும் பயனடைவர். வெளியூர்களில் இருந்து வரும் யாத்திரீகர்களுக்கு உள்ளூர் வாசிகள் தங்குமிடம், உண்ண உணவு ஆகியன கொடுத்து அவர்களை விருந்தாளிகளாக எண்ணி உபசரித்த காலம் இனி எப்பொழுது வரப்போகிறது? 

தேசாந்திரிகளுக்கு உணவு வழங்க அக்காலத்தில் நிலங்களைத் தானமாகக் கொடுத்திருந்தார்கள். நில வருவாய் இல்லாமல் போனதால் அந்த தருமமும் நின்று போய் விட்டது. மதிய வேளையில் சில கோயில்கள் அன்னதானம் செய்கின்றன. அதுவும் பிறரது நன்கொடையிலிருந்து! 

எல்லாம் தான் ஒன்றன் பின் ஒன்றாக நின்று போய்க் கொண்டிருக்கிறது. வாய் வார்த்தைக்குமா பஞ்சம் ?  வெளியூர் அன்பர்களுக்குத் தரிசனம் செய்து வைக்கும் சிவாச்சார்யர்களில்  அநேகர்,  தமது கோயிலின் புராண வரலாறைக் கூறுவதில்லை என்று பரவலாக ஒரு புகார் உள்ளது. நாமாகக் கேட்டால் சொல்வோரும் உண்டு. ஒரு ஊரில் தல வரலாற்றைக் கேட்ட பொது, தகவல் பலகையில் எழுதி இருக்கிறது படித்துக் கொள்ளுங்கள் என்று கூறியதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இந்த நிலைமை? விரக்தி காரணமா? அசிரத்தை காரணமா? நாம் எதற்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணமா?  எதுவுமே புரியவில்லை. இது பற்றி நாமும் எழுத வேண்டாம் என்று இத்தனை நாள் இருந்தோம். சமூக வலைத் தளங்களில் சிலர் இதைச் சுட்டிக் காட்டும்போது நாமும் பிறரது எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் செயல் படலாம் என்று சொல்லத் தோன்றியது.

பெருமாளின் திவ்ய தேசங்களுக்கு யாத்திரை செய்பவர்களுக்கு அங்கு எப்படித்  தரிசனம் செய்து வைக்கிறார்கள் என்பது தெரியும். மூலவரது பெயர், எந்த திசையை நோக்கியுள்ளார், யாருக்கு அருள் செய்தார், நின்ற/ அமர்ந்த/கிடந்த கோலம், விமானம் மற்றும் புஷ்கரணியின் பெயர்கள், முதலிய தகவல்கள் தரிசிக்க வருபவர்களுக்குச் சொல்லப்படுகிறது. இதுபோல் சிவாலயங்களில் ஏன் சொல்லப் படுவதில்லை? திருப்தி அடைந்த சேவார்த்திகள் தாராளமாக தட்சிணை அளிக்கவும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. 

அறநிலையத்துறை தரும் சம்பளமோ சில நூறுகள் தான். உள்ளூரிலிருந்தும் வருமானம் இல்லை. பொருள் ஈட்டுவதற்காக வெளியூர் சென்று படாத பாடு படுவதைக் கண்டும் உதவுவார் இல்லை. அப்படி இருக்கும் போது யாத்ரிகர்கள் மூலம் வரும் வருவாய் சொற்பமாக இருந்தாலும் உதாசீனப் படுத்தலாமா? வருமானத்தை விட, புராண வரலாறு கேட்டவர்களின் முகத்தில் ஏற்படும் திருப்தி இருக்கிறதே, அது ஒன்றே, ஆறுதல் தரும் மருந்தாகவும்  அமைவதாகக் கருதலாமே. 

Tuesday, January 16, 2018

நந்தியை மறைப்பதா ?

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவரை பூஜிக்கும் பெண்ணின் நல்லாள் 

சபரி மலை போகும் பக்தர்கள் பலர் கோயில்களில் மாலை போட்டுக் கொள்கிறார்கள். மலைக்குப் போகும்போது கோவிலுக்கு வந்து ஐயப்ப பூஜை செய்து விட்டு இருமுடியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். அண்மையில் ஒரு கோயிலில் கண்டதை இங்குப் பகிர வேண்டியிருக்கிறது. 

துணியால் மறைக்கப்பட்ட நந்தி மண்டபம் 
ராஜ கோபுரத்தைக் கடந்தவுடன் நந்தி மண்டபம், கொடி மரப் பிள்ளையாரை வணங்கி விட்டு, நந்திக்கு நேராக இருக்கும் சிவசன்னதிக்குச் செல்லுகையில்  நந்தி தேவரை மீண்டும் வணங்க எண்ணியபோது நந்தியைப் பார்க்க முடியாத படித் திரை இடப் பட்டிருந்தது. அதற்கு முன்பாக மூலவரை நோக்கிய நிலையில் 18  மரப்படிகள் அமைக்கப் பட்டு, அதன் மீது ஐயப்பன் விக்கிரகம் இருந்ததைக் கண்டோம். பூஜைக்காகச்  செய்யப்பட்ட ஏற்பாடு இது. 

நந்தி போல் மறைக்காதே என்று வேடிக்கையாகச் சொல்வது போய் நந்தியையே மறைத்து விட்டிருக்கிறார்கள்! தற்காலிக ஏற்பாடாக இருந்தாலும் சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகக் கூடாது என்று ஆலய வழிபாட்டு முறை இருக்கும்போது, நந்தி மண்டபத்தையே இப்படித் துணியால் மூடியது வியப்பில் ஆழ்த்தியது!  சிவாகம முறைப்படி நடக்கும் கோயில்களில் கூட இப்படி விதி மீறல்கள் நடக்கலாமா ? 

மறைப்பும் பூஜை அமைப்பும் விலகியபின் தெரியும் நந்தி 
தகுந்தபடி எடுத்துச் சொன்ன பிறகு படிகளோடு கூடிய பூஜை அமைப்புச் சற்று விலக்கப்பட்டது. நந்தனார் சரித்திரத்தில் இறைவன் நந்தி தேவரைச் சற்று விலகி இருக்கும் படி கூறியருளினார். ஆனால் இங்கு நடைபெற்றதோ வேறு விதமாக இருந்தது. இப்படியெல்லாம் நடை பெறாமல் சிவாச்சாரியப் பெருமக்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். 

பூஜைக்குக்  குடும்பத்துடனும் நண்பர்களுடனும்  வருபவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை உண்டுவிட்டு எஞ்சியவற்றைக் கோயிலிலேயே எறிவது வருத்தமளிப்பதாக உள்ளது. எஞ்சிய  உணவை கோவிலுக்கு வெளியில் ஒரு தொட்டியில் போடாமல், கோவிலுக்கு உள்ளேயே போடுவதால், அதை உண்பதற்காக நாய்கள் வந்து விடுகின்றன. எஞ்சிய இலைகளும், பிளாஸ்டிக் பொருள்களும் சிதறிக் கிடப்பதைப் பார்த்தால் வேதனையே மிஞ்சுகிறது. போதாக் குறைக்கு வாய் கொப்பளித்த எச்சில் நீர்  , அங்கு வருபவர்களின் கால்களில்  படுகிறது . 

வீட்டில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் மட்டும் போதாது. வீதிகளையும் நாம் வணங்கும் கடவுளின் ஆலயத்தையும் அவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டாமா? நாம் எப்போது தான் திருந்தப்போகிறோமோ தெரியவில்லை. 

Friday, January 12, 2018

அலங்காரமா அறியாமையா ?

இலிங்கப் பெருமானுக்கு  உருவம் 
மூர்த்தி அலங்கார விதி என்ற பழைய புஸ்தகத்தில் எவ்வாறு அலங்காரம் செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப் பட்டிருக்கிறது. ஆண் விக்கிரகத்தைப் பெண்ணாகவும், மனம் போன போக்கில் எல்லாம் அடியோடு மாற்றி அமைப்பதும் பல கோயில்களில் நடைபெறுகின்றன. சிவாகமத்திற்கு மாறாக நடந்து கொள்வது வருந்தத்தக்கது. அலங்காரம் என்ற பெயரில் கண்ட பொருள்களைக் கொண்டு மூலவர் மற்றும் உற்சவத் திருமேனிகள் அலங்கரிக்கப்படுகின்றன. பார்ப்பவர்களோ ஒன்றும் தெரியாத அப்பாவிகளாகவும், இப்படிப்பட்ட  " அலங்காரத்தைப் பெரிதும்  மெச்சுபவர்களாகவும் இருப்பதால் கேட்பவரின்றி ,விதம் விதமான  அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு மாற்றுவதால் ஏற்படும் தோஷங்கள் பற்றித் தெரிந்தவர்கள் இப்படி மாற்றத் துணியமாட்டார்கள். 

ஒரு ஊரில் நவராத்திரியின் போது அம்பிகைக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களைப் படம் எடுத்து அனுப்பிஇருந்தார்கள். அம்பிகையை ராஜ ராஜேசுவரியாகவும், திருபுர  சுந்தரியாகவும், சிவ பூஜை செய்பவளாகவும்,தக்ஷிணா மூர்த்தி ரூபிணியாகவும், சரஸ்வதி,லக்ஷ்மி ஆகிய தேவி அம்சங்களாகவும், துர்க்கா தேவியாகவும், காமாக்ஷியாகவும் , மீனாக்ஷியாகவும், அன்னபூரணியாகவும் அலங்காரம் செய்து வருவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் வெண்ணைத் தாழி அலங்காரம் செய்திருந்தார்கள். எழுதிக் கேட்டதற்கு, "  அரியலால் தேவியில்லை" என்ற தேவார வாக்கை சுட்டிக் காட்டினார்கள். அப்படியானால் பத்து நாட்களும் தசாவதாரங்களையும் அம்பிகைக்கு செய்து பார்ப்பார்களோ என்னவோ !!


சிவலிங்க மூர்த்தியாவது உருவமும் அருவமும் கலந்த படியால், அம்மூர்த்திக்கு உருவம் கொடுப்பது உயர்ந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ளாததன் விளைவு. சந்தனக் காப்பே செய்து விடுகிறார்கள் சில இடங்களில். மேலும், கண்,மூக்கு,வாய் என்ற எல்லாம் பாணத்தில் வரையப் படுகிறது. போதாததற்கு மீசை வேறு ! 


அன்னாபிஷேகம் என்பது அன்னத்தால் அபிஷேகம் செய்யப் படுவது. அன்னம் பாலித்த கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக செய்யப்படுவது. சிதம்பரத்தில் சந்த்ரமௌலீசுவரருக்கு அன்றாடம் செய்யப்படுவது. வித்தியாசமாகச் செய்வதாக எண்ணிக்கொண்டு பல ஊர்களில்  முகம் வரையப்பட்டு , எல்லாப் பொருள்களைக் கொண்டும் " அலங்காரம் " செய்யப்படுகிறது  பாவம் , அலங்காரம் செய்ய எவ்வளவோ முயன்றும், கண் ஒன்றரைக் கண்ணாகவும், விழித்துப் பார்ப்பதாகவும் பயங்கரமாகவும் சில ஆலயங்களில் சித்தரிக்கப்படுகிறது. சிவலிங்கப் பெருமானுக்கும் ,அம்பிகைக்கும்  அர்த்தநாரி வடிவம் கொடுத்து விடுவதையும் பார்க்கிறோம்.  


உற்சவருக்குச்  செய்யப்படும் அலங்காரமோ கற்பனையின் உச்சமாக இருக்கிறது. நிற்கும் விக்கிரகத்தை போலிக் கரங்களையும் கால்களையும் வைத்துக் கயிறுகளால் கட்டி, இயல்பான வடிவம் எது என்று தெரியாதபடி ஆக்கி விடுகிறார்கள். சோமாஸ்கந்த மூர்த்திக்கு நீண்ட கால்களை வைத்துக் கட்டி செயற்கைக் கைகளில் சூலத்தைக் கொடுத்து, மூர்த்தியின் அழகையே கெடுத்து விடுகிறார்கள். தொண்டை மண்டலத்தில் இவ்வித அலங்காரம் சகஜமாகப் போய் விட்டது. அதையும் ரசிப்பவர்கள் உண்டு. உயரத்தில் அமர்ந்திருக்கும் மூர்த்தியின் செயற்கைக் கால்கள் அதிகார நந்தியின் ஏந்திய கரங்கள் வரை நீட்டப்படுகின்றன. 


மூர்த்தியால் நகைக்கு அழகு 
சோழ நாட்டுக் கோயில்களில் பெரும்பாலும் மூர்த்தியின் இயற்கையான வடிவை மாற்ற மாட்டார்கள். கவசம் சார்த்தி, நகைகள்,கிரீடம்,நகைகள், பின் அலங்காரம் ஆகியன மட்டும் செய்து விட்டு, புஷ்ப அலங்காரம் மூர்த்தியை மறைக்காதவாறு செய்வார்கள். அது அவர்களுக்கே உரிய ஆற்றல். மற்ற பகுதிகளில் உள்ள பெரிய கோயில்களில் உற்சவ அம்பாளுக்குத் திருக் கல்யாணத்தின் போது கூட புடவை அணிவிக்காமல், பாவாடை அணிவிப்பதை  என்னவென்று சொல்வது ? 


ஒரு ஊரில்  சுவாமி, அம்பாளுக்குப் பின்னல் பின்னி விடுவதாக உற்சவர்கள் அலங்காரம் செய்யப் பட்டுள்ளனர். இதெல்லாம் ஆகம சம்மதமா, எப்படி வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம் என்ற எண்ணமா  என்பதை  சிவாச்சாரியப் பெருமக்களின் சிந்தனைக்கு விடுகிறோம்.


சுவாமிக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலை போடப் போய் இப்பொழுது சன்னதியையே நோட்டுக்களால் அலங்கரிக்கத் துவங்கி விட்டனர். மரத்தை மறைத்தது மா மத யானை என்பதைப் போல் காகிதம் என்பதே மறந்து நோட்டு மட்டுமே தெரிகிறது !! 

இப்பதிவு எவரையும் குறைகூறவோ, புண்படுத்தவோ எழுதப்பட்டதன்று. சிவாசார்யர்களது சிந்தனைக்கு மட்டுமே உரியது என்பதால் பரவலாக எல்லோருக்கும் அனுப்பப்படவில்லை. யாரோ சிலரது  ஆர்வக் கோளாறுகளால் மொத்த சமூகமே பழிக்கப்படக் கூடாது. எனவே இதனை சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.