ஆகமம் தந்த அண்ணலும் அர்ச்சித்த தவக் கொழுந்தும் |
தனியாகச் செல்வோரும் குழுக்களாகச் செல்வோரும் ஒரு வாகனத்தை அமைத்துக் கொண்டு பல கோயில்களுக்குச் செல்கிறார்கள். இக்கோயில்கள் பெரும்பாலும் கிராமங்களில் உள்ளன. இவ்வாறு பலர் வருகை தருவதால் ஆலய சிப்பந்திகளும் பயனடைவர். வெளியூர்களில் இருந்து வரும் யாத்திரீகர்களுக்கு உள்ளூர் வாசிகள் தங்குமிடம், உண்ண உணவு ஆகியன கொடுத்து அவர்களை விருந்தாளிகளாக எண்ணி உபசரித்த காலம் இனி எப்பொழுது வரப்போகிறது?
தேசாந்திரிகளுக்கு உணவு வழங்க அக்காலத்தில் நிலங்களைத் தானமாகக் கொடுத்திருந்தார்கள். நில வருவாய் இல்லாமல் போனதால் அந்த தருமமும் நின்று போய் விட்டது. மதிய வேளையில் சில கோயில்கள் அன்னதானம் செய்கின்றன. அதுவும் பிறரது நன்கொடையிலிருந்து!
எல்லாம் தான் ஒன்றன் பின் ஒன்றாக நின்று போய்க் கொண்டிருக்கிறது. வாய் வார்த்தைக்குமா பஞ்சம் ? வெளியூர் அன்பர்களுக்குத் தரிசனம் செய்து வைக்கும் சிவாச்சார்யர்களில் அநேகர், தமது கோயிலின் புராண வரலாறைக் கூறுவதில்லை என்று பரவலாக ஒரு புகார் உள்ளது. நாமாகக் கேட்டால் சொல்வோரும் உண்டு. ஒரு ஊரில் தல வரலாற்றைக் கேட்ட பொது, தகவல் பலகையில் எழுதி இருக்கிறது படித்துக் கொள்ளுங்கள் என்று கூறியதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இந்த நிலைமை? விரக்தி காரணமா? அசிரத்தை காரணமா? நாம் எதற்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணமா? எதுவுமே புரியவில்லை. இது பற்றி நாமும் எழுத வேண்டாம் என்று இத்தனை நாள் இருந்தோம். சமூக வலைத் தளங்களில் சிலர் இதைச் சுட்டிக் காட்டும்போது நாமும் பிறரது எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் செயல் படலாம் என்று சொல்லத் தோன்றியது.
பெருமாளின் திவ்ய தேசங்களுக்கு யாத்திரை செய்பவர்களுக்கு அங்கு எப்படித் தரிசனம் செய்து வைக்கிறார்கள் என்பது தெரியும். மூலவரது பெயர், எந்த திசையை நோக்கியுள்ளார், யாருக்கு அருள் செய்தார், நின்ற/ அமர்ந்த/கிடந்த கோலம், விமானம் மற்றும் புஷ்கரணியின் பெயர்கள், முதலிய தகவல்கள் தரிசிக்க வருபவர்களுக்குச் சொல்லப்படுகிறது. இதுபோல் சிவாலயங்களில் ஏன் சொல்லப் படுவதில்லை? திருப்தி அடைந்த சேவார்த்திகள் தாராளமாக தட்சிணை அளிக்கவும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது.
அறநிலையத்துறை தரும் சம்பளமோ சில நூறுகள் தான். உள்ளூரிலிருந்தும் வருமானம் இல்லை. பொருள் ஈட்டுவதற்காக வெளியூர் சென்று படாத பாடு படுவதைக் கண்டும் உதவுவார் இல்லை. அப்படி இருக்கும் போது யாத்ரிகர்கள் மூலம் வரும் வருவாய் சொற்பமாக இருந்தாலும் உதாசீனப் படுத்தலாமா? வருமானத்தை விட, புராண வரலாறு கேட்டவர்களின் முகத்தில் ஏற்படும் திருப்தி இருக்கிறதே, அது ஒன்றே, ஆறுதல் தரும் மருந்தாகவும் அமைவதாகக் கருதலாமே.
No comments:
Post a Comment