கல்வியும், மருத்துவ வசதியும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதுதான்.. இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. ஆனால் இதில் அதிக பங்கேற்க வேண்டியது அரசாங்கமே. ஏனெனில் இதற்காகும் செலவை எதிர்கொள்ளும் வலிமை அரசுக்கே சாத்தியம். . தனி நபர்களோ, ஒரு சில இயக்கங்களோ சிறிய அளவிலேயே செய்ய முடிகிறது. இருப்பினும் ,இதற்கு விலக்காகச் சிலர் சிறப்பாகச் செயல் படுவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. கல்வி வளர்ச்சியால் தனிநபருக்கும் நாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதையும் மறுக்க முடியாது.
தனியார்கள் செய்வதென்பது, அவர்களது சேவை மனப்பான்மையைக் காட்டுகிறது. ஆனால் இதன் மூலம் பேரும்,புகழும்,பணமும் சம்பாதிப்பதைக் குறிக்கோளாக யாராவது கொண்டால் பயனாளிகளுக்குப் பெரிய நன்மை விளைவதில்லை. மிகவும் வசதி படைத்தவர்களோ அல்லது அளவிற்கு அதிகமாகப் பொருள் ஈட்டியவர்களோ இவற்றைச் செய்து வரி விலக்குப் பெறக் கூடும். தனியார் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களில் லாப நோக்கோடு செயல்படும் பல இடங்களைப் பார்க்கிறோம்.
கல்வித்தரத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எப்படிப் பட்ட கல்வி வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதைச் சிந்திப்பதில்லை. தேவையற்ற பாடத் திட்டம் திணிக்கப் படுகிறது. எதைப் படித்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற ஒரே அடிப்படையிலேயே மாணவ மாணவியர்கள் கல்வியை அணுகுகிறார்கள். சம்பந்தமில்லாத படிப்பு படித்தவர்களையும் சில நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. கை நிறையக் காசு சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் வாழ்க்கைக்கேற்ற கல்வியைப் பற்றி எண்ணவே நேரம் இல்லாமல் போய் விட்டது.இப்படியே போனால், படிக்காமலேயே குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு விட்டு விடும்.
வேற்று மதத்தவர்கள் கல்விக்கும், மருத்துவத்துக்கும் சேவை செய்யும்போது உள் நோக்கம் இருக்கத்தான் செய்யும். நம்மவர்களும் ஆன்மீக சேவையோடு இதுபோன்ற சேவைகளையும் செய்யத் தொடங்கி விட்டனர். இராமகிருஷ்ண மடத்தின் சமூக சேவை நாடறிந்தது. இதேபோல் பல்வேறு மடங்களும் இச்சேவைகளைச் செய்து வருவது பாராட்டுக்குரியது. ஆனாலும் மடங்களின் அடிப்படை நோக்கமான மக்களை நன்னெறிப் படுத்தும் இலக்கை ஒருபோதும் பணயம் வைக்கலாகாது. அது கலாசார சீரழிவுக்கே வழி வகுக்கும்.
மற்ற சமூகத்தினர் போல் அர்ச்சகர் சமூகமும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளத் துடிக்கிறது என்பது உண்மைதான். இந்த நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம், அவர்களுக்கு ஆலய நிலங்களிலிருந்து பெறப்பட்டு வந்த நெல்லும் ஊதியமும் கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டதுதான். அவற்றை மீட்டுக் கொடுத்தாலே அவர்களது பொருளாதாரம் முன்னேறிவிடும். சம்பந்தமில்லாத கல்வியைக் கற்று விட்டு மீண்டும் ஆலய பூஜைக்கு வர எத்தனை பேருக்கு மனம் வரும் ? அதோடு, சமூகத்தில் தாங்கள் அலுவலக வேலை செய்தால் மட்டுமே மதிக்கப் படுவார்கள் என்ற எண்ணமும் வந்து விட்டதே !
அர்ச்சகர் சமூகப் பெண் குழந்தைகள் கல்லூரிகளில் படித்துவிட்டால் வேலைக்குச் செல்வதையே விரும்பும் சூழ்நிலை உருவாகிறது. அப்படி வேலைக்குச் சென்று கை நிறையப் பணம் சம்பாதிப்பவர்கள்,தங்களைப் போல் வேலைக்குச் செல்லும் ஆண்களையே மணம் செய்ய விரும்புவதால், ஆகம-வேத பாடசாலைகளில் கற்று விட்டுக் கோயிலிலும், கும்பாபிஷேகம்-பாராயணங்களிலும்,பிற சுப காரியங்களிலும் நிறைய சம்பாதிக்கும் எத்தனையோ பையன்களுக்குத் திருமணம் ஆவது மிகவும் கடினமாக ஆகி விட்டது. இந்நிலையில் எந்தப் பையன் இனிமேல் பாடசாலைக் கல்வியையும், ஆலய பூஜையையும் விரும்புவான் ? அப்படியானால் அடுத்த தலைமுறையில் ஆதிசைவ குலம் சிவாலய பூஜை செய்ய முன்வரத் தயங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா ?
கச்சி மூதூர் அர்ச்சகர் நல நிதியாக ஒரு திட்டத்தை காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் அறிமுகப்படுத்தி, சிவாச்சார்யார்கள்,பட்டாச்சாரியார்கள் மற்றும் கிராமக் கோயில் பூசாரிகள் பலருக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கச் செய்தார்கள். தற்காலத்தில், பணமதிப்புக் குறைந்து விட்டதால் அதுவும் பெரிய அளவில் துணை செய்ய முடியாமல் போய் விட்டது. இந்தத் தர்மசங்கடமான நிலையில்தான், தற்போது காஞ்சி சங்கர மடம் அர்ச்சகர் குலப் பையன்களுக்கு உயர்கல்வியை இலவசமாகத் தர முன் வந்துள்ளது. உயர்ந்த நோக்கம் ஆனாலும் இதன் பின் விளைவுகளைக் கண்டு நாம் அஞ்சுகிறோம்.
நமக்குத் தெரிந்த வரையில், பெண்களுக்கு நிகராகப் பையன்களும் சம்பாதித்து விட்டால் கல்யாணப் பிரச்சினை வேண்டுமானால் தீர்ந்து விடலாம்.கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு பெரும்பாலான பையன்கள் வேலைக்குப் போய் தங்களைத் திருமணத்திற்குத் " தகுதி " ஆனவர்களாக ஆக்கிக் கொள்ளவே முயற்சிப்பார்களே தவிர, கோயில் பூஜைக்கு வர முன் வருவோர் அநேகமாக இல்லாமல் போய் விடும். கணவன்-மனைவி இருவருமாக சம்பாதிக்கும் சூழ்நிலையில், எந்த கைங்கர்யத்திற்காக இந்தக் குலம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதோ அதிலிருந்து முற்றிலுமாக விலகிவிட வாய்ப்பு ஏற்பட்டு விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. அதனால், ஆலய பூஜையை- அதிலும் குறிப்பாகக் கிராமக் கோயில்களைப் பூஜையைச் செய்ய சிவாச்சார்யார்களே இல்லாமல் போகும் அபாயம் ஏற்படுவதை மேலும் துரிதமாக்கும் செயலை செய்யலாகாது என்ற எண்ணத்தால் மட்டுமே இவ்வாறு எழுத வேண்டி இருக்கிறது.
பாடசாலைகளில் படிப்போருக்கும் , ஏழ்மை நிலையில் உள்ள சிவாச்சாரியார்களது வீட்டுத் திருமணங்களுக்கும் நிதி உதவி செய்யலாம். மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மேற்படிப்புக்கு உதவப்போய் ஆணி வேரே ஆட்டம் கண்டுவிடும்படியாக எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது. ஆகவே, ஆதிசைவ குலப் பெண்கள் தங்கள் குலம் காக்கப் படவேண்டும் என்ற அக்கறை உடையவர்களாக இருத்தலே இன்றையத் தேவை. பையன்களை மாற்றப் போய் மொத்தமாகவே கோயில் பூஜைகள் சமூகத்தை விட்டே போகும்படி எந்த விஷப் பரிட்சையிலும் இறங்கலாகாது.
No comments:
Post a Comment