Tuesday, December 5, 2017

" எதுக்கும் கவலைப் பட வேண்டாம் ஸ்வாமி இருக்கார் "

ஸ்ரீ கணேச சிவாசாரியார் அவர்கள் 
நாம் பல கோயில்களைத் தரிசிக்கச் செல்லும்போது மனதுக்கு இதமாக ஆலய தரிசனம் செய்து வைப்பவர்களை சந்திக்கிறோம். அவர்களது அயராத சேவையைக் கண்டு அதிசயிக்கிறோம். எந்த விதமான பிரதி பலனையும் எதிர்பாராமல் இறைவனுக்குத் தொண்டு செய்வதொன்றையே தனது வாழ்நாளின் இலட்சியமாகக் கொண்டு வாழ்பவர்கள் இத்தகையவர்கள். சிவனருளால் தனக்குக் குறை எதுவும் இல்லை என்று பெருமிதமாகக் கூறிக் கொண்டு குக் கிராமத்தில் ஏழ்மை நிலையிலும் சிறிதளவு அங்கலாய்ப்பும் கூட  இல்லாதவர்களைப் பார்க்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. இன்றைய சமூகம் அவர்களைப் போற்றிக் காப்பாற்றத் தவறி விட்டது என்று உறுதியாகச் சொல்லலாம். கோயில் முறை உள்ள நாட்களில் எந்த அசௌகர்யம் வந்தாலும் பொருட்படுத்தாமல்  பூஜை ஒன்றையே இலக்காகக் கொண்டு தம்மை இறை பணிக்கு  அர்ப்பணிப்பவர்களுக்கு நாம் நன்றி செலுத்தத் தவறி விட்டோம்.

 நிலைமை இப்படி இருக்கும்போது, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது அல்லவா? எனவே, கோயில் முறை இல்லாத காலங்களில் வெளியூர் சென்று கும்பாபிஷேகங்கள் செய்வித்தும், வீடுகளில் சுப காரியங்கள் செய்வித்தும் பொருள் ஈட்டி, மிகுந்த சிரமத்துடன் மாதம் தோறும் நாட்களைத் தள்ளவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். எதிர் காலத்தைப் பற்றி யோசிக்க என்ன இருக்கிறது? 

மயிலாடுதுறையில் இளமைக் காலத்தில் வசித்த காலத்தில் பக்கத்து வீட்டில் இருந்த சிவாசார்ய குடும்பமும் மேலே குறிப்பிட்ட நிலையில் தான் இருந்தது. சிவாகமத்தில் நன்கு தேர்ச்சி பெற்றதோடல்லாமல் ஆலய பூஜையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பம் அது. சகோதரர்கள் தங்கள் குடும்பங்களோடு வசித்துக் கொண்டு தங்களது ஆலயத்திற்குச் சென்று பூஜைகளைச் செய்து வந்தனர். அப்போதெல்லாம் மழைக் காலங்களில் காவிரி கரை புரண்டு ஓடும். படிகளைக்கூடப் பார்க்க முடியாது. ஆற்றின் நடுவில் நந்தி மண்டபம் ஒன்று உண்டு. அதிலுள்ள நந்திகேசுவரருக்கு இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிவாசாரியார், ஒரு கையால் நைவேத்தியத்தை சுமந்து கொண்டு மறு கையால் ஆற்று நீரை விலக்கிக் கொண்டுபோய், அபிஷேக ஆராதனைகள் செய்வதைக் கண்டிருக்கிறோம்.

அக்குடும்பங்களில் ஒன்றாக, பக்கத்திலுள்ள பாண்டூரைச் சேர்ந்த சிவாசார்யக் குடும்பமும் வசித்து வந்தது. அக்குடும்பத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ கணேச சிவாசாரியார் அவர்கள், திருவாரூர் செல்லும் வழியிலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் ஆலய பூஜையைச் செய்து வந்தார்கள். 
 பரமேசுவரன் கஜ சம்ஹாரம் செய்ததோடு ஞானோபதேசம் செய்த இந்த அற்புதத்தலத்திற்கு இவரோடு பலமுறை சென்றதுண்டு. கோயிலின் பல்வேறு சிறப்புக்களை விளக்குவதோடு, நுட்பமான பூஜை முறைகளையும் விளக்குவார். யந்த்ர தரிசனம் செய்துவைக்கும்போது, ஸ்ரீ ருத்ரத்தில் வரும், " பரிணோ ருத்ரஸ்ய " என்ற பகுதியைச் சொல்லச் சொல்லித் தீபாராதனை காட்டுவார். அவ்வளவு பய பக்தியோடு அவர் அதைச் செய்யும்போது நம்மை அறியாமல் ஆனந்தக் கண்ணீர் விடுவோம். நமக்கு சிவபக்தி அதிகமாவதற்கு முக்கியமானவர்களுள் இவரும் ஒருவர். 

சுவாமி தரிசனம் செய்ய வரும்போது வெறும் கையோடு வரக் கூடாது என்று வலியுறுத்துவார். தேங்காய்,பழம் இல்லாவிட்டாலும் கற்கண்டோ , உலர்ந்த திராக்ஷையோ கொண்டு வரலாமே என்பார். ஞானம் வருவதற்கு மூல மந்திர ஜபம் செய்து தியானிக்க வேண்டியது முக்கியமானது என்று சொல்லுவார். " நானே உனக்கு வல்லப மகா கணபதி , சுப்பிரமணிய ஜபங்களை உபதேசிக்கிறேன் " என்று சொல்லி க்ருத்திவாசரின் மகாமண்டபத்தில் அடியேனுக்கு அந்த ஜபங்களை எடுத்து வைத்து விட்டு, நிறைய ஆவர்த்தி செய்து வந்தால் மந்திர சித்தி ஏற்படும் என்றும் சொல்வார். தன்  நினைவாக ஒரு ஸ்படிக ருத்ராக்ஷ மாலையையும் தந்து ஆசீர்வதித்தார்.   

வயது முதிர்ச்சியின் காரணமாக வழுவூர் செல்வது நின்று போன நிலையிலும்  தனது இல்லத்தில் இருந்தபடியே மனதாகிய இல்லத்தில் நீங்காது விளங்கிய ஞான சபேசுவரப் பெருமானை சதா காலமும் தியானிப்பது இவரது வழக்கம். நேரில் சந்திக்கும்போதெல்லாம் அந்த மூர்த்தியின் பெருமைகளை சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி அடைவார். அந்த ஊரின் புராணம் புத்தக வடிவில்  வெளிவந்தவுடன்  அதன் ஒரு பிரதியைத்  தந்து, " இதை வைத்துக் கொள். உனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்" என்றார். பின்னர் அப்புத்தகத்தைப் படித்ததால் வழுவூரைச் சுற்றியுள்ள சில தலங்களின் இருப்பிடங்கள்  தெளிவாக விளங்கின . இன்னும் தெளியவேண்டியவை பல உண்டு. 

சுமார் ஆறு மாதங்கள் முன்னர் அவரை சந்தித்தபோது அவரது நிலை சொல்லும்படியாக இல்லை. யாரோடு பேசுகிறோம் என்பதும் தெரியவில்லை. முகத்தில் மட்டும் தேஜஸ் சற்றும் குறையவில்லை. வீட்டிற்குள் நுழைந்தவுடன் எப்பொழுதும் ஒருமையில் அழைப்பவர் அன்றைய தினம் " வாங்கோ " என்று அழைத்தார். நினைவாற்றல் இழந்த நிலையிலும் வருபவர்களை வரவேற்பது மட்டும் குறையவில்லை. யார் வந்திருப்பது என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. சில நிமிடங்களில் ஒரே வார்த்தை அவரிடமிருந்து உதித்தது:  "எதுக்கும் கவலைப் பட வேண்டாம். ஸ்வாமி இருக்கார் " என்பதே அது. இந்த ஆசி மொழிகளைக் கேட்டுக் கண்ணீர் பெருக்குவதைத் தவிர மேலும் அவரிடம் பேசத் தோன்றவில்லை. 

அதுவே அவரைக்  கடைசியாக சந்தித்தது. சுய நினைவுடன் இருக்கும்போது அவரிடம் எத்தனையோ முறை ஆசிகள் பெற்றிருந்தும், இவ்வாறு சுய நினைவில்லாத போது பெற்ற ஆசிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று நினைக்கத் தோன்றியது. மூலமாகிய ஞான தீபத்திலிருந்து பல தீபங்கள் ஏற்றப்படலாம். இருந்தாலும் மூலத்திற்கு நிகர் எது? 

சென்ற கும்பாபிஷேகத்திற்கு முன்னர்  திருப்பணிகள் நடந்த சமயம் வழுவூர் சென்றிருந்தபோது மாலை நேரம். நமக்கும் அத்திருப்பணியில் பங்கேற்கும் பாக்கியம் கிட்டுமா என்று மனம் ஏங்கிய போது, " ஒவ்வொரு சன்னதியையும் ஒரு உபயதாரர் திருப்பணி செய்கிறார். ஒரே ஒரு சன்னதி விமானம் மட்டும் திருப்பணி செய்வதற்கு யாரும் முன் வரவில்லை. அது எந்த சன்னதி தெரியுமா? எந்த மூர்த்திக்கு முன்னால் நின்று கொண்டு வரும்போதெல்லாம் தேவாரம் பாடுவாயோ அந்த கஜ சம்ஹார மூர்த்தி சன்னதி தான் . அதை  நீயும் உன் நண்பர்களும் ஏற்றுச் செய்யலாமே " என்றார். உண்மையிலேயே மெய் சிலிர்த்தது.  அதன்படியே அத்  திருப்பணியைச்  செய்யும் பாக்கியத்தை க்ருத்திவாசப் பெருமான் அருளினான். 

நமது அமைப்பின் மூலம் கிராமக் கோயில்களில் பணி  புரியும் சிவாச்சாரியார்களைக் கெளரவிக்கும்போது இவரைத்  தம்பதி சமேதராய் மேலும் நான்கு ஆலய சிவாசார்ய தம்பதிகளோடு திருவாழ்கொளிபுத்தூர் ஆலயத்திற்கு அழைத்து வந்தபோது எல்லோருமாக ஆசீர்வதித்ததை வாழ்க்கையில் பெற்ற பெறும் பேறாகக் கருதுகிறோம். இவ்வாறு ஞானச் சுடர் விளக்குகளைத் தோற்றுவித்து அவற்றை அணையாமல் தூண்டிப் பாதுகாத்து வந்த மூல தீபம் 1.12.2017 அன்று காலையில் கயிலை நாதனின் மலரடிகளைச் சென்றடைந்தது. " தேச விளக்கெல்லாம் ஆன   தூண்டு சுடர் அனைய சோதி"யுடன் சோதியாகக் கலந்து விட்டது. 

4 comments:

 1. Very sincere obituary, may God bless his soul

  ReplyDelete
 2. முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கடியேன்....
  திருச்சிற்றம்பலம்

  ReplyDelete
 3. Very moving tributr to a true Acharyapususha! There is no doubt that he has reached the ultimate, exalted place at the feet of the Lord.

  ReplyDelete
 4. Sivaya namaha anega namaskarangal

  ReplyDelete