இணைய தள நண்பர் அனுப்பிய படம் : நன்றி |
இத்தனை ஆண்டுகளாக சந்திர கிரஹணம் வந்த போதெல்லாம் மௌனிகளாக இருந்தவர்கள் இப்போது புது சர்ச்சையைத் தோற்றுவித்து மக்களைக் குழப்புகிறார்கள். கிரகண காலத்தில் ஆலயத்தை மூடாமல் திறந்து வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்த வேண்டும் என்று கருத்து வெளியிடுகிறார்கள். ஆகமங்களில் இருந்து வாக்கியங்களை எடுத்துக் கூறி இக்கருத்தை நியாயப்படுத்த முனைகிறார்கள்.
கிரகண காலத்தில் சந்திரனை ராகு பிடிப்பதாகப் புராணங்கள் கூறியதை ஏற்க மறுத்தவர்களும் , அந்த நேரத்தில் ஏற்படும் கதிர் வீச்சினால் நமக்குப் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞான ரீதியாகக் கூறுவதை ஏற்கிறார்கள். அந்நேரத்தில் வெளியில் செல்லாமல் இருந்தால் கதிர் வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதால் கோவிலுக்குக் கூடச் செல்வதை அந்த சில மணி நேரங்கள் மட்டும் இத்தனை காலமும் தவிர்த்து வந்தார்கள். குறிப்பாகக் கர்ப்பமடைந்த பெண்கள் வெளியில் செல்வதால் அதிகமாகப் பாதிக்கப்படுவர் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆகமங்களைப் பிரமாணங்களாகக் காட்டி ஆலயங்களைக் கிரகண காலத்தில் திறக்க வேண்டும் என்று சொல்பவர்களைக் கேட்கிறோம்:
1. தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தியே ஆக வேண்டும் என்று அறிக்கை விடாதது ஏன் ?
2 உற்சவர்கள் வீதி உலா சென்றாலே, ஆலயத்தில் மூலவர் வழிபாடு செய்யலாகாது என்பதால் கோவில் மூடப்படும் நிலையில், உற்சவர்கள் அனைவரையும் பாதுகாப்பு என்ற பெயரில் பல்லாண்டுகள் அறநிலையத்துறை வேறோர் கோயிலில் சிறை வைத்துள்ளதைக் கண்டித்து அறிக்கை விடாதது ஏன் ?
3 சுவாமி-அம்பாளுக்கு யாகசாலையில் நவகுண்டங்கள் அமைக்க வேண்டும் என்ற ஆகம உரையை மாற்றி(க் குறைந்தது ஐந்து குண்டங்களாவது அமைக்காமல்) ஒரே குண்டம் அமைத்துக் கும்பாபிஷேகம் நடத்தும் ஊர்களைக் கண்டிக்காதது ஏன் ?
4 ஆங்கிலப்புத்தாண்டன்று நள்ளிரவில் கோவிலைத் திறந்து வைத்து வழிபாடுகள் செய்வது எந்த ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது ?
5 இறைவனைப் பல இடங்களில் தீண்டாத் திருமேனி என்று சொல்லிக் கொண்டு மனிதர்கள் நெற்றியில் திருநீறு பூசி விடுவதை யாரும் கண்டித்ததாகத் தெரியவில்லையே !
6 ஆகமப் ப்ரவீணர்களாக இருப்பவர்கள் கும்பாபிஷேகத்திற்கு மட்டும் செல்வதோடு நிறுத்தி விடாமல் சாதாரண நாட்களிலும் கிராமக் கோயில்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தினசரி வழிபாட்டின் அவசியத்தை எடுத்துச் சொல்லலாமே !
இன்று ஏராளமான ஆலயங்கள் ஈ-காக்காய் கூட இல்லாமல் வௌவால்களும் பாம்புகளும் ஆட்சி செய்து வரும் நிலையில் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஊர் மக்கள் அக்கறை இல்லாமல் ஆலயம் இடியும் நிலையைக் கண்டும் காணாதது போல இருக்கிறார்கள். எடுத்துச் சொல்ல எவரும் முன் வருவதில்லை. இருந்த இடத்தில் இருந்த படியே அறிக்கை மட்டும் விடுபவர்ர்கள். முதலில் மக்களை நல் வழிப்படுத்தட்டும் பிறகு மாற்றங்கள் பற்றி யோசிப்போம்.
திருவாரூர் கோயிலைக் கிரகண காலத்தில் திறந்து வைக்க வில்லையா என்று கேட்கிறார்கள். எல்லாக் கோயில்களையுமே திறந்து வைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். கோயிலுக்கு வருபவர்கள் எந்த வேளையிலும் இரண்டு மணி நேரம் அங்கேயே இருப்பது அபூர்வமாகி விட்ட இக்காலத்தில் , அவர்கள் கிரகணம் பிடித்தவுடன் அரை மணி நேரம் தரிசனம் செய்து விட்டு, வீட்டுக் குத் திரும்பும் போது, கதிர் வீச்சுக்கு ஆளாவர் அல்லவா? அது மட்டுமல்ல. கிரகணம் முடிந்ததும் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதால் கோவிலுக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தால் ஸ்நானம் செய்யலாமா என்பதும் நியாயமான காரணமாகப் படுவதால் தினசரி தரிசனத்தை அந்த சில மணி நேரங்களில் செய்யாமல் சற்றுத் தள்ளிப் போடச் சொன்னார்கள் நமது முன்னோர்கள். அவ்வளவுதான்.
அவரவர்கள் தனக்குத் தோன்றியவற்றை நியாயப் படுத்த முனைந்து விட்டபோது யார் என்ன சொன்னாலும் அவ்வளவு எளிதில் ஏற்பதில்லை. அனைவரும் ஏற்கும் படியாக அறிவுரை சொல்பவர் இல்லாமலும் இருக்கக் கூடும். ஒருவேளை இருந்தாலும், ஆணவ மலம் அதனை ஏற்க மறுக்கிறது.
பக்தி மேலீட்டின் பால், இறைவனே எல்லாவற்றுக்கும் காரணமாக விளங்குவதால் நாம் அஞ்ச வேண்டியதில்லை என்பர் சிலர். உண்மைதான்.ஆனால் இந்தப்பக்குவம் ஏற்பட எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டுமே ! பாமர மக்களுக்குப் போய்ச் சேரும்படி எளிய அறிவுரைகளைக் காலத்தை மனதில் கொண்டு சர்ச்சைகள் ஏற்படாதவாறு எடுத்து உரைப்பதே நல்லது. நிருபர்களைக் கண்டவுடன் வித்தியாசமாகப் பேசியே தீர வேண்டும் என்ற மனப்பாங்கைத் தவிர்த்தல் சமய உலகிற்கே நலம் விளைவிக்கும்.