Wednesday, March 10, 2021

ஆகம சீலர்க்கு அருளும் அரன்

                    28 ஆகம சந்நிதி, ஸ்ரீ விருத்தகிரீசுவரர் கோயில், 

                                                 விருத்தாசலம்  


அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன் பிடவூரன்

தம்மானே தண்தமிழ் நூல் புலவாணர்க்கோர்

அம்மானே பரவையுண் மண்டலி அம்மானே.

                                  -- சுந்தரர் தேவாரம்

“ ஆகமம் ஆகி நின்று அண்ணிக்கும் “ பேரருளாளனாகிய பெருமானைத் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர் மேற்கண்டவாறு திருவாரூர்ப் பரவையுண் மண்டலி என்ற தலத்தில் துதிக்கிறார். மகேந்திர மலையின்கண் எழுந்தருளித் தனது ஐந்து முகங்களாலும் இருபத்தெட்டு ஆகமங்களைப் பெருமான் தோற்றுவித்து அருளியதாகத் திருவாசகம் கூறுகிறது. “ எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்” என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.தமிழகம் செய்த தவப்பயனாக இன்றளவும் ஆகம வழியில் சிவாலயங்களில் நித்திய பூஜைகள், கும்பாபிஷேகங்கள் நடைபெறுவது ஈசன் திருவருட் துணையினால் மட்டுமே ஆகும்.

இருபத்தெட்டு ஆகமங்களில் காரணம்,காமிகம் போன்ற சில ஆகமங்களே தற்போது கிடைப்பதோடு மட்டும்  அல்லாமல் பின்பற்றப் படுவனவும் ஆகும். பிற ஆகமங்கள் எவ்வாறு, எக்காலத்தில் மறைந்து போயின என்பது திட்ட வட்டமாகத் தெரியவில்லை. அவற்றை மீட்டெடுக்கும் தீவிர முயற்சி செய்யப்பட்டுள்ளதா என்றும் புலப்படவில்லை. எஞ்சிய ஆகமங்களையே தற்போதுள்ள ஆகம பாடசாலைகள் கற்பிக்கின்றன. ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் இக்கல்வி முறை பின்பற்றப் படுகிறது.

ஆகமத்தொடு, வாழ்வியல் கல்வியும் தக்கோரைக் கொண்டு கற்பிக்கப்படுவதால் பாட திட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையில் சிறிது வேறுபாடுகள் இருக்கலாம். ஆகமக் கல்வியோடு, தற்காலக் கல்வியும் பன்னிரண்டாம் வகுப்பு வரை இணைத்துக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இரண்டையும் இணைத்துக் கற்கும் மாணவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் அறிவு பெற்றாலும் அனைவரும் அறிந்த காரணத்தால் அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே, ஆகமப் பாடசாலைகளே கல்வித்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் கொடுக்கின்றன.

இவ்வாறு பெறப்பட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு எவ்வாறு பயன் தருகின்றன என்பது அடுத்த கேள்வி.அதிக வருமானத்தை விரும்பி சொந்த ஊரை விட்டு விட்டு வெளியூருக்கும் வெளி நாடுகளுக்கும் செல்பவர்கள் அவ்வாறு செல்லுமிடங்களில் இச் சான்றிதழ்களைக் காட்டித் தனது தகுதியை நிரூபிக்க முயலுகிறார்கள். அப்படியானால் சொந்த ஊர்களில் வாழையடி வாழையாகத் திருக்கோயில்களில் பணியாற்றி வந்தவர்கள் அக்கோயில்களைப் புறக்கணிக்கும் நிலையைப் பாடசாலைகள் ஆதரிக்கின்றனவா? பாடசாலைத் தரப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற்று வெளியேறுகையில் அவனுக்கு ,அவனது பூர்வீக ஊரிலேயே வாழும்படி வாழ்வாதாரம் செய்து தரப் படவில்லையே !

பாடசாலை நடத்துவதும் அத்தனை எளிது அல்ல. வெளியிலிருந்து பெரிய மனம் உள்ளவர்களின் துணையுடனும், நிரந்தர வைப்பு நிதியின் வட்டி வருவாயுடனும் மாணவர்களின் கல்வி, உணவு,உடை ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதை நாம் அறிவோம். இச் சிவபுண்ணியத்தில் வெளிநாடுகளில் வசித்து வரும் நம்மவர்கள் பங்கேற்க மேலும் முன்வந்தால் பாடசாலைகளில் மாணவர்களின்  எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உண்டு.அவர்களை இத்தருமத்தில் ஈடுபடச் செய்ய வேண்டிவர்கள் மடாதிபதிகளும், வெளிநாடுகளுக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள கோயில் கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும் சிவாச்சாரியார்களும் ஆவார்கள். தனவந்தர்கள் பலர் அங்கு ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது இன்றியமையாததாகும். இதனை ஆதி சைவர் நல சங்கங்களும் இணைந்து செய்யலாம்.

ஆகமம் கற்ற மாணவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும். அப்படி நடந்து விட்டால் ஆங்கில வழிக் கல்வி கற்கும் மோகமும் ஒழிந்து விடும். ஆகமமும் தமிழும் ஒருங்கே பயில ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கல்வி ஸ்தாபனமே அரசு ஆதரவோடு நடை பெற வேண்டும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பத்தை விட, இம்முறையில் கிடைக்கும் பலனைப் பல மாங்காய் என்றும் சொல்ல முடியும். இன்று ஆதிசைவ சமூகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சிவனுக்கே மீளா அடிமை பூண்டொழுகும் சமூகம் பாதை மாறி சம்பந்தமில்லாத,  மற்றும் மரியாதை முற்றிலும் கிடைக்காத இடங்களில் வேலைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. சொந்தக்  காலில் நிற்கும்போது சமூகத்தில் அந்தஸ்து உயரும். பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. வறுமை முற்றிலும் நீங்கிவிடும். திருமண வயதை அடைந்த ஆண் பெண் இருபாலார்க்கும் உரிய காலத்தில் திருமணம் நடைபெறும். இத்தனையும் நடைபெற வேண்டுமானால் மேற்கூறியபடி போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைப்பு மூலம் ஒரே ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும். சிவனருள் என்றென்றும் துணை செய்யும். சம்பந்தப் பட்டவர்கள் களப் பணி செய்ய முன்வர வேண்டும் என்று, வேதமாகவும்,ஆகமமாகவும், திருமுறைகளாகவும் நின்று அண்ணிக்கும் பரம்பொருளை இறைஞ்சுவோமாக.
--- சிவபாதசேகரன் 

Friday, July 26, 2019

ஆசை வலையில் அகப்படலாமா


ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் முக்கியம் என்றாலும் சமுதாயம் இதனை அந்தணரிடம் மிக உன்னிப்பாக எதிர்பார்ப்பதில் தவறில்லை. உலக நன்மைக்காக அனுதினமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிய கடமை அந்தணர்களுக்கு உண்டு. ஆத்மார்த்த பூஜை, ஜபம் என்பதோடு பரார்த்த பூஜையானது ஆதி சைவர்களால் சிவாலயங்களில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பட்டாச்சார்யார்களும் விஷ்ணு கோயில்களில் பூஜை செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் ஒழுக்க சீலர்கள் எனவும், தவறான காரியங்களை மறந்தும் செய்ய மாட்டார்கள் என்றும் இந்த சமூகம் இன்றும் உறுதியாக நம்புகிறது.

ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்குவார் என்று தில்லை வாழ் அந்தணர்களைச் சிறப்பிக்கிறார் சேக்கிழார். அதாவது, திருவோடும், செம்பொன்னாலாகிய பொருளும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான் என்பது கருத்து. சில வருடங்களுக்கு முன் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை தனது ஆட்சிக்குக் கொண்டு வந்தவுடன் உண்டியல்களை நிறுவினார்கள். உயர்நீதி மன்றத் தீர்ப்பின் மூலம் கோயில் மீண்டும் தீக்ஷிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதுவரை உண்டியலில் இடப்பட்ட காணிக்கைகளை தீக்ஷிதர்கள்  அரசுக்கே திருப்பிக் கொடுத்தனர் என்று பத்திரிகைகள் மூலம் அறிந்தோம். கோயிலும் முன்போலவே உண்டியல் இன்றி சிறப்பாக இயங்குகிறது.

அண்மைக்காலமாகவே கோயில்களில் களவு போகும்போதெல்லாம் அர்ச்சகருக்குத் தெரியாமல் எவ்வாறு சாத்தியம் ஆகும் என்றெல்லாம் அவதூறுகளைக் கிளப்பி விட்டனர். நல்ல வேளையாக அர்ச்சகர்கள் யாரும் இந்த குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை மக்கள் உணர்ந்தனர்.
ஊடகங்கள் திரித்துப் பொய்யாக்கிய செய்திகள் உலா வரும் வேளையில் அர்ச்சகர் உள்ளிட்ட அந்தணர் சமூகம் மேலும் கவனமாக இருக்க வேண்டிய கட்டத்தில் உள்ளது. தவறு எங்கேயாவது நடந்தால் மொத்த சமூகத்தின் மூலம் பழி சுமத்தி விடலாம் என்று கழுகுகள் வட்டமிட்டுக் காத்துக் கொண்டு இருக்கின்றன. அர்ச்சகர்களும் மற்றவர்களைப் போலவே ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்கள் என்று யாரும் கூறப்போவதில்லை. சமூக வலைத்தளங்களிலும் மிகுந்த எச்சரிக்கையோடு செயல் பட வேண்டிய தருணம் இது. சொந்த விஷயங்களைப் பகிர்வதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை. அனுதினமும் சுவாமியைத் தொட்டு பூஜிக்கும் கரங்கள் சுத்தமாகவும்,புனிதமாகவும் இருக்க வேண்டும் அல்லவா?

கோயிலுக்குள் நுழையும்போதே அர்ச்சகருக்குப் பயம் கலந்த பக்தியும், ஆசாரமும்,எளிமையும், பொறுப்பும், பக்தர்களிடம் அன்பும் கூடவே வர வேண்டும். அதனால் தான் சுந்தரரும்.” முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் “ என்று பாடினார். இப்படி இருந்தால்  ஆலயத்தில் நடக்கும் குற்றங்களை அர்ச்சகர் மீது வீணாகச் சுமத்த அஞ்சுவார்கள். ஆனால்,சிரத்தை குறைவு, அனாசாரம்,அலட்சியம், அகந்தை, பணத்தாசை ஆகியவை மேலோங்கும்போது இதுபோன்ற பழிகளுக்கு ஆளாக நேரிடும்.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவர சுவாமி ஆலயத்தில் உண்டியலை மாற்றுச் சாவி மூலம் திறந்து அர்ச்சகர்கள் இருவர் திருடியதாகத் தொலைக் காட்சி ஒன்றில் காட்டப்பட்டுள்ளது.இத்தகவல் அதிர்ச்சியையும் தாங்க முடியாத வேதனையையும் தருகிறது. காமிராவில் பதிவானதையும் கூடவே காட்டினார்கள். பிடிக்கப்பட்ட இரு அர்ச்சகர்களையும் காட்டி, அவர்கள் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதாகச் செய்தி வெளியானது.
குற்றத்தின் பின்னணியைக் காவல் துறையினர் நிச்சயம் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறோம். எப்படி இருப்பினும் தனக்காகவோ பிறருக்காகவோ இந்தச் செயலை செய்வது சிவத் துரோகம் அல்லவா? நல்ல வருமானத்தைத் தரும் இக்கோயிலில் இப்படிப்பட்ட பேராசையுடன் அர்ச்சகர்கள் ஈடுபட்டார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.
இதற்காகவே காத்திருக்கும் நாத்திக வாதிகளும், பிராமணத் துவேஷிகளும் கொக்கரிப்பார்கள் என்பதை இவர்கள் அறியாமல் இச்செயலில் ஈடுபடலாமா? “ அப்போது நாங்கள் சொன்னபோது நீங்கள் நம்பவில்லை, இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் “ என்று சவால் விடப் போகிறார்கள். மொத்த அந்தணர் சமுதாயத்தையும் வெட்கித் தலை குனியச் செய்து விட்டது இச் சம்பவம்.

பின் குறிப்பு: இப்பதிவு ஆசிசைவ மற்றும் அந்தணர்களின் பிற பிரிவினர்களுக்கு மட்டுமே எழுதப்பட்டது. இதனைப் பிறரிடம் பகிர்வது நமக்கு மேலும் இழிவைத் தேடித்தரும்.      

Saturday, December 22, 2018

ஆணி வேருக்கு ஆபத்து நேரக்கூடாது


கல்வியும், மருத்துவ வசதியும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதுதான்.. இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. ஆனால் இதில் அதிக பங்கேற்க வேண்டியது அரசாங்கமே. ஏனெனில் இதற்காகும் செலவை எதிர்கொள்ளும் வலிமை அரசுக்கே  சாத்தியம். . தனி நபர்களோ, ஒரு சில இயக்கங்களோ சிறிய அளவிலேயே செய்ய முடிகிறது. இருப்பினும் ,இதற்கு விலக்காகச் சிலர் சிறப்பாகச் செயல் படுவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. கல்வி வளர்ச்சியால் தனிநபருக்கும் நாட்டுக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதையும் மறுக்க முடியாது. 

தனியார்கள் செய்வதென்பது, அவர்களது சேவை மனப்பான்மையைக் காட்டுகிறது. ஆனால் இதன் மூலம்               பேரும்,புகழும்,பணமும் சம்பாதிப்பதைக் குறிக்கோளாக யாராவது கொண்டால் பயனாளிகளுக்குப் பெரிய நன்மை விளைவதில்லை. மிகவும் வசதி படைத்தவர்களோ அல்லது அளவிற்கு அதிகமாகப் பொருள் ஈட்டியவர்களோ இவற்றைச் செய்து வரி விலக்குப் பெறக் கூடும். தனியார் கல்வி மற்றும் மருத்துவ  நிறுவனங்களில்  லாப நோக்கோடு செயல்படும் பல இடங்களைப் பார்க்கிறோம். 

கல்வித்தரத்தைப் பற்றிப்  பேசுபவர்கள் எப்படிப் பட்ட கல்வி வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதைச் சிந்திப்பதில்லை. தேவையற்ற பாடத் திட்டம் திணிக்கப் படுகிறது. எதைப் படித்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற ஒரே அடிப்படையிலேயே மாணவ மாணவியர்கள் கல்வியை அணுகுகிறார்கள். சம்பந்தமில்லாத படிப்பு படித்தவர்களையும் சில நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. கை நிறையக் காசு சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் வாழ்க்கைக்கேற்ற கல்வியைப் பற்றி எண்ணவே நேரம் இல்லாமல் போய் விட்டது.இப்படியே போனால், படிக்காமலேயே குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு விட்டு விடும்.

வேற்று மதத்தவர்கள் கல்விக்கும், மருத்துவத்துக்கும்  சேவை செய்யும்போது உள் நோக்கம் இருக்கத்தான் செய்யும்.  நம்மவர்களும் ஆன்மீக சேவையோடு இதுபோன்ற சேவைகளையும் செய்யத் தொடங்கி விட்டனர். இராமகிருஷ்ண மடத்தின் சமூக சேவை நாடறிந்தது. இதேபோல் பல்வேறு மடங்களும் இச்சேவைகளைச் செய்து வருவது பாராட்டுக்குரியது. ஆனாலும் மடங்களின்  அடிப்படை நோக்கமான  மக்களை நன்னெறிப் படுத்தும் இலக்கை ஒருபோதும் பணயம் வைக்கலாகாது. அது கலாசார சீரழிவுக்கே வழி வகுக்கும். 

மற்ற சமூகத்தினர் போல் அர்ச்சகர் சமூகமும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளத் துடிக்கிறது என்பது உண்மைதான். இந்த நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம், அவர்களுக்கு ஆலய நிலங்களிலிருந்து பெறப்பட்டு வந்த நெல்லும் ஊதியமும் கொடுக்கப்படாமல்   ஏமாற்றப்பட்டதுதான்.  அவற்றை மீட்டுக் கொடுத்தாலே அவர்களது பொருளாதாரம் முன்னேறிவிடும். சம்பந்தமில்லாத கல்வியைக் கற்று விட்டு மீண்டும் ஆலய பூஜைக்கு வர எத்தனை பேருக்கு மனம் வரும் ? அதோடு, சமூகத்தில் தாங்கள் அலுவலக வேலை செய்தால் மட்டுமே மதிக்கப் படுவார்கள் என்ற எண்ணமும்  வந்து விட்டதே ! 

அர்ச்சகர் சமூகப் பெண் குழந்தைகள் கல்லூரிகளில் படித்துவிட்டால் வேலைக்குச் செல்வதையே விரும்பும் சூழ்நிலை உருவாகிறது. அப்படி வேலைக்குச் சென்று கை நிறையப் பணம் சம்பாதிப்பவர்கள்,தங்களைப் போல் வேலைக்குச் செல்லும் ஆண்களையே மணம் செய்ய விரும்புவதால், ஆகம-வேத பாடசாலைகளில் கற்று விட்டுக்  கோயிலிலும், கும்பாபிஷேகம்-பாராயணங்களிலும்,பிற சுப காரியங்களிலும்  நிறைய சம்பாதிக்கும் எத்தனையோ  பையன்களுக்குத்  திருமணம் ஆவது மிகவும் கடினமாக ஆகி விட்டது. இந்நிலையில் எந்தப் பையன் இனிமேல் பாடசாலைக் கல்வியையும், ஆலய பூஜையையும் விரும்புவான் ? அப்படியானால் அடுத்த தலைமுறையில் ஆதிசைவ குலம் சிவாலய பூஜை செய்ய முன்வரத் தயங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா ? 

கச்சி மூதூர் அர்ச்சகர் நல நிதியாக ஒரு திட்டத்தை காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் அறிமுகப்படுத்தி, சிவாச்சார்யார்கள்,பட்டாச்சாரியார்கள் மற்றும் கிராமக் கோயில் பூசாரிகள் பலருக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கச் செய்தார்கள். தற்காலத்தில், பணமதிப்புக் குறைந்து விட்டதால் அதுவும் பெரிய அளவில் துணை செய்ய முடியாமல் போய் விட்டது. இந்தத் தர்மசங்கடமான நிலையில்தான், தற்போது காஞ்சி சங்கர மடம்  அர்ச்சகர் குலப் பையன்களுக்கு உயர்கல்வியை இலவசமாகத் தர முன் வந்துள்ளது. உயர்ந்த நோக்கம் ஆனாலும் இதன் பின் விளைவுகளைக் கண்டு நாம் அஞ்சுகிறோம். 

நமக்குத் தெரிந்த வரையில், பெண்களுக்கு நிகராகப் பையன்களும் சம்பாதித்து விட்டால் கல்யாணப் பிரச்சினை வேண்டுமானால் தீர்ந்து விடலாம்.கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு பெரும்பாலான பையன்கள் வேலைக்குப் போய் தங்களைத் திருமணத்திற்குத் " தகுதி "  ஆனவர்களாக ஆக்கிக் கொள்ளவே முயற்சிப்பார்களே தவிர, கோயில் பூஜைக்கு வர முன் வருவோர் அநேகமாக இல்லாமல் போய் விடும். கணவன்-மனைவி இருவருமாக சம்பாதிக்கும் சூழ்நிலையில்,  எந்த கைங்கர்யத்திற்காக இந்தக் குலம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதோ அதிலிருந்து முற்றிலுமாக விலகிவிட வாய்ப்பு ஏற்பட்டு விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.  அதனால், ஆலய பூஜையை- அதிலும் குறிப்பாகக்  கிராமக் கோயில்களைப் பூஜையைச்  செய்ய சிவாச்சார்யார்களே இல்லாமல் போகும் அபாயம் ஏற்படுவதை மேலும்  துரிதமாக்கும் செயலை செய்யலாகாது என்ற எண்ணத்தால் மட்டுமே இவ்வாறு எழுத வேண்டி இருக்கிறது.  

பாடசாலைகளில் படிப்போருக்கும் , ஏழ்மை நிலையில் உள்ள சிவாச்சாரியார்களது வீட்டுத் திருமணங்களுக்கும் நிதி உதவி செய்யலாம். மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மேற்படிப்புக்கு உதவப்போய் ஆணி வேரே  ஆட்டம் கண்டுவிடும்படியாக  எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது. ஆகவே, ஆதிசைவ குலப் பெண்கள் தங்கள் குலம் காக்கப் படவேண்டும் என்ற அக்கறை உடையவர்களாக இருத்தலே இன்றையத் தேவை. பையன்களை மாற்றப் போய் மொத்தமாகவே கோயில் பூஜைகள் சமூகத்தை விட்டே போகும்படி எந்த விஷப் பரிட்சையிலும் இறங்கலாகாது.   

Monday, November 26, 2018

ஆதி சைவர் நலன்

ஆச்சார்யாபிஷேகம் 
மதிப்பிற்குரிய சிவாச்சாரியப் பெருமக்களுக்கும் அவர்கள் நலனில் ஈடுபட்டுள்ள சிலருக்கு மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்படும் பதிவு இது. ஆகவே இதனை உரியவர்களுக்கு மட்டுமே பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

ஆதி சைவர்கள் என்றும் முப்போதும் திருமேனி தீண்டுவார் என்றும் அழைக்கப்படும் இச்சமூகம் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நன்மை தீமை முழுதும் அவரவர் வினை வழியே நடைபெறும் என்பதில்  யாருமே விதி விலக்கு அல்ல. சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றிய ஆகம வழிப்படி பூஜைகள் நடைபெறாததற்கு ஆயிரம் காரணம்   இருக்கலாம். ஆனால் அடிப்படையான சிரத்தையே குறைவதற்கு என்ன காரணம் சொல்ல முடியும் ? .

சிவபுரம் கும்பாபிஷேகம் 
நித்திய கர்மானுஷ்டானங்கள்,  ஆகம பாடசாலைக் கல்வி, தீக்ஷை, ஆச்சார்ய அபிஷேகம், ஆத்மபூஜை  ஆகியவற்றைக் கடைபிடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பூஜை உரிமை ஆதி சைவருக்கே என்பதைப்  பிறகு எந்த வழியில் நிலை நாட்ட முடியும் ? ஆசார லோபத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கே இல்லை. இவ்வளவு லோபங்களுக்கு இடையில் பெருமானது சாந்நித்தியம் எப்படி ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹத்தில் இருக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா ? 

ஆகம பாட சாலை நிறுவிப் பெயரும் பணமும் சம்பாதித்து விட்டால் நித்திய பரார்த்த  பூஜை என்கிற கடமையே மறந்து போகிறது. வெளி நாட்டுப் பயணங்கள் இருக்கவே இருக்கிறது.  அப்படிப் பட்டவர்கள் கும்பாபிஷேகம் செய்து  வைக்கப் போனாலோ, மைக்கையும், வீடியோவையுமே நாடுகிறார்கள். ஹோம குண்டங்களில் அமர்ந்துள்ள எத்தனை பேர் யாகசாலை மந்திரங்களில் அக்கறை காட்டுகிறார்கள்? கும்பாபிஷேகம் முடிந்தவுடன் சம்பாவனையை வாங்கிக்கொண்டு சாப்பிடப்போகும் பலருக்கு ,மகாபிஷேகத்திலோ, யாகசாலையில் செய்யப்படும் உபசாரங்களிலோ  சிரத்தை இல்லாமல் போனது ஏன் என்று யாராவது விளக்க முடியுமா ? 

நன்றி: வலைத்தளத்தில் வெளியிட்டவருக்கு 
ஒரு கும்பாபிஷேகம் என்றால் ஏறத்தாழ இருபது சிவாச்சார்யர்கள் வந்து நடத்தி வைக்கிறார்கள். அந்த வருகையைத்  தங்கள் குடும்ப நலனுக்காகவும் பயன் படுத்திக்கொள்ளலாம் அல்லவா? தமது வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை ஆங்கிலக் கல்வி கற்க வைத்து, வேலைக்கும் அனுப்பி விடத் துடிக்கிறார்கள் பலர். பிற்காலத்தில் கோயில் பூஜை எக்கேடு கெட்டால் என்ன என்று இருப்பவர்கள் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும். வேலைக்குச் சென்று விட்ட இவர்கள் வீட்டுப் பெண்கள் கை நிறைய சம்பாதிக்கும் போது கோயில் பூஜை செய்யும் பையனைத்  திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். வேதம் கற்கும் மாணவர்களுக்கும் இதே நிலைதான். 

கும்பாபிஷேக யாகசாலை 
பல ஊர்களில் மேற்படி காரணத்தால் பல ஆதிசைவ குலப் பையன்களுக்குத் திருமணம் ஆகாமல் போ ய் விடுவதைப் பார்க்கிறோம். பெண்கள் மட்டுமல்ல. அப்பெண்களைப் பெற்றோர்களும் சிவ பூஜைகள் தொடரமுடியாதபடித் தவறிழைக்கிறார்கள். அதிலும் கிராமக் கோயில்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. 

இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் போது ஒன்று சேரும் சிவாசார்யர்கள் அங்கு வந்துள்ள தமது சமூகத்தினரிடையே ஜாதக பரிவர்த்தனை செய்து கொள்ளலாமே! அதெல்லாம் செய்யாமல் மறு நிமிடமே ஏன் பறந்து விடத் துடிக்க வேண்டும் ? 

வருமானம் இல்லாமல் சிரமப்படுவது உண்மை தான். ஆனால் உண்மையாகத் தொண்டு  செய்யும்  பூஜகர்களுக்கு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் உள்ள அன்பர்கள் உதவிக் கரம் நீட்டத் தயாராக இருக்கிறார்கள். " என்னோடு போகட்டும் " என்று இருப்பவர்களை மட்டும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதேபோல, எனது பெண்ணை யாருக்குத்  திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். யாரும் சொல்லத் தேவை இல்லை என்று இருப்பவர்களையும் ஒன்றும் செய்வதற்கில்லை. அவரவர் தலைவிதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியது தான். 

ஒருங்கிணைக்கும் நல்லுள்ளம் கொண்ட சிவாசார்யர்களாவது முயற்சி செய்வது நல்லது. உலகை வலம்  வந்துகொண்டு பொன்னாடைகள் போர்த்திக் கொள்பவர்கள் முன் வரப் போவதில்லை. அவர்கள் வேண்டுமளவு பணம் சம்பாதித்து ஆகி விட்டது.  குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், சிவாலயங்களில் பூஜை செய்வது நமது கடமை என்ற எண்ணம் இருப்பவர்கள் மட்டுமே முன்வர முடியும். அரசாங்கத்தையும் பிற மனிதர்களையும் நம்பிக் கையேந்துவதை விட நமது குல தெய்வமான பரமேச்வரனே நமக்குக் கதி என்று எண்ணுபவர்களை இன்றளவும் சுவாமி கை விடாமல் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார். இதை வாய் விட்டுப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் பூஜகர்களை நாம் சந்தித்திருக்கிறோம். 

சமூகம் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு பூஜகரும் நினைவில் வைக்க வேண்டி உள்ளது. அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளும், பாவச் செயல்களும் மக்களாலும் மகேசனாலும் கண்காணிக்கப் படுகின்றன. நமக்கு ஒழுக்கம்,ஆசாரம், நியமம், சிரத்தை ஆகியவை நாள்தோறும் வளர வேண்டும் என்று மனமார பிரார்த்தித்துக் கொண்டு ஒரு வில்வத்தை சுவாமி மீது சார்த்தினால் போதும். மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்வான். புகழ்த்துணை நாயனாராகிய ஆதி சைவருக்கு நித்தலும் படிக்காசு வைத்த பரமன், தன்னை நாள்தோறும் காலம் தவறாமல் நியமத்தோடு பூஜிப்பவனை எப்படிக் கைவிடுவான்? காப்பது அவன் கடமை ஆகி விடும் அல்லவா ? 

Monday, October 8, 2018

கால லோபமும் நியம லோபமும்

சிவாகமப்படி நூறு சதவீதம் பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் இல்லாமல் இருந்தாலும் அடிப்படையே இல்லாமல் போகக் கூடாது. நம் சௌகர்யத்திற்கு பூஜை முறைகளை மாற்றிக் கொள்ள நாம் யார் ?  " முச்சந்தி முட்டாத மூவாயிரவர் " என்று தில்லை வாழ் அந்தணர்கள் புகழப்படுகிறார்கள். காலம் தோறும் தவறாமல் பூஜைகள் நடைபெற்று வந்ததுபோக இன்று பல கிராமங்களில் ஒரு கால பூஜைக்கே ஏங்க வேண்டி இருக்கிறது. காரணங்கள் ஆயிரம் இருந்து விட்டுப் போகட்டும். ஆர்வம் இல்லாவிட்டாலும் சிரத்தையாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு கால பூஜை என்றால் இன்ன நேரத்திற்குக் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மிகவும் முக்கியம். எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு மதியம் மூன்று மணிக்குப் போய் பூஜை செய்வது என்று ஏற்பட்டு விட்டால் அதுவே பழக்கமாகிவிடும்.  இறைவன் பசியால் காத்திருப்பாரே என்று ஏங்கிய கண்ணப்ப நாயனார்  விரைந்து ஓடி மலை மீதிருந்த குடுமித்தேவரைச் சென்றடைந்தார் என்று புராணம் கேட்டிருந்தும் இவ்வாறு நடக்கக் கூடாது அல்லவா? கால லோபத்தை அனுமதித்தால் பிற லோபங்கள் தானாகவே புகுந்துவிடும்.

 நியம லோபம் ஏற்படுவது பல இடங்களில் வாடிக்கை ஆகி விட்டது. அதிகாரியின் மிரட்டல், அதிக அளவில் மக்கள் வருகை, பக்தர்களின் பொறுமை இன்மை ஆகியவை காரணங்களாகக் காட்டப்பட்டாலும் நியமம் இன்றி எவ்வாறு பூஜை செய்வது ? பூஜை முறைகள் மிகத் தெளிவாக ஆகமங்களில் கூறப்பட்டிருந்தும் அவற்றை மீறுவது அவ்வாகமங்களை அருளிய சிவபிரானின் கட்டளையை மீறுவது போலாகுமே !  குறுக்கு வழிகளில் மனம் போன போக்கில் மற்ற வேலைகளை வேண்டுமானால் செய்யலாம். சிவாராதனையைக் கூடவா நியமமின்றிச் செய்வது ? 

தெய்வ தரிசனத்தை ஒருபோதும் காட்சிப் பொருள் போல ஆக்கி விடக்கூடாது. அர்ச்சனை செய்தால் மட்டுமே ஒரு காலத்தில் கற்பூர ஹாரத்தி செய்து வந்தார்கள். அதனால் கோயிலுக்குச் செல்பவர்கள் வெறும் கையோடு போக மாட்டார்கள். கற்கண்டு ,திராக்ஷை போன்றவற்றையாவது நைவைத்தியம் செய்யச் சொல்லிவிட்டு ஹாரத்தி செய்யச் சொல்வார்கள். ஆனால் இப்போதோ தொடர்ந்து கற்பூரம் காட்டப் படுகிறது. மக்கள் வரிசையில் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் அர்ச்சனை என்பது பெயர் அளவில் ஆகி விடுகிறது. அஷ்டோத்திர நாமாவளி குறுகிப் போனது தான் மிச்சம். பல அர்ச்சனைத் தட்டுக்கள் வரிசையாக வைக்கப்பட்டு ஒரே முறைதான் அர்ச்சனை செய்வது  சாத்தியம் ஆகிறது.  

போர் குழாயைத் திருப்பி விட்டால் அபிஷேக நீர் கருவறையிலோ அர்த்த மண்டபத்திலோ நிரம்பும் நவீன காலத்தில் ஸ்நபனமாவது ஒன்றாவது ?  பூவோடு நீர் சுமந்து கொண்டு வந்த காலம் இனி எப்போது வரப் போகிறது? திருமஞ்சனம் ஆறுகளில் இருந்து கொண்டு வந்த காலம் மலை ஏறிப் போய் விட்டது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் போதிய வருவாய் இல்லை என்று விளக்கம் சொல்லக் கேட்கிறோம். வருவாய் மிகக் குறைவு தான். ஒப்புக் கொள்ளாதவர் எவரும் இருக்க முடியாது. அதே நேரத்தில், நியமத்துடனும் சிரத்தையுடனும் பூஜை செய்பவர்களை மக்கள் அலட்சியம் செய்வதில்லை. இறைவன் அந்த பூஜையை ஏற்றுக் கொள்வதன் அடையாளமாக மிகக் குறைவாக மக்கள் வந்து கொண்டிருந்த திருமணஞ்சேரி போன்ற ஆலயங்களில் இப்பொழுது மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்க்கிறோம். இதற்கு மூல  காரணம் அங்கு அரும் பணியாற்றிய சிவாச்சாரியார் என்பதை நேரில் கண்டவர்கள் ஒப்புக் கொள்வார்கள். 

இப்போது கோவிலுக்கு வருபவர்கள் பல்வேறு ஆடைகளை அணிந்து கொண்டு வருகிறார்கள். சிலரிடம் துர் நாற்றம் வீசுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நெற்றியில் விபூதி பூசி விட்ட பின்னர் இறைவனைத் தொட்டு பூஜையைத்  தொடரலாமா என்பதை ஆகம வல்லுனர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம். முன்பெல்லாம் சமுதாயத்தில் அர்ச்சகர்களின் பங்கு முக்கியமாகக் கருதப்பட்டது. குருவாக அவர்களை மக்கள் ஏற்ற படியால் குருக்கள் என்று போற்றப்பட்டனர். நகரத்தார்களுக்கு சிவ தீக்ஷை செய்து வைத்த சிவாகம சீலர்கள் பலர் உண்டு. 

சமூகத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து வந்த சிவாசார்ய பரம்பரை இன்று போதிய வருவாய் இல்லை என்ற ஒன்றையே மனதில் கொண்டு ஆகம விதி மீறல்களைச் செய்யத் தொடங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டைப் பலரும் சொல்லக் கேட்கையில் மனம் வேதனைப் படுகிறது. நமக்குத் தெரிந்தவரையில் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறோம். நமக்குப் படி அளப்பவன் பரமேசுவரன் ஒருவன் தான். நடைமுறையில் அதிகாரி மூலம் ஊதியம் பெறுவது போலத் தோன்றினாலும் இதுவே உண்மை. அப்படியானால் இத்தனை துயரங்கள் ஏற்படுவானேன் என்று கேட்கலாம். மேற்கண்ட லோபங்கள் புகுந்து விட்டபடியால் சிவாபராதம் ஏற்பட்டு அதன் பலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. குற்றம்  பொறுத்துக் குணம் ஒன்றையே கொள்ளும் பரமன் மட்டுமே சரண் என்று நம்பியவர்கள்  என்றும் கை விடப் படுவதில்லை. இது எக்காலத்திற்கும் பொருத்தம்.

Tuesday, April 10, 2018

யாரிடம்தான் குறை இல்லை ?

ஒவ்வொருவருக்கும் தான் செய்யும் செயல்கள் எல்லாம் சரியாகவே தெரிகிறது. தங்களுக்கென்று ஒரு பாணி, முத்திரை ஆகியவற்றோடு மக்களிடயே உலா வருகின்றனர். அப்படி வரும்போது அவர்களுக்குப் பின் ஆதரவாளர்கள் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. நாட்டுக்கும் மொழிக்கும் எதிராகச் செயல் படுவோர்களுக்கே ஒரு கூட்டம் பின்னால் நிற்கும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ள நிலையைக் கூடப் பார்க்கிறோம். கருத்துக்கள் தாராளமாக மக்கள் முன்னிலையில் வீசப்படுகின்றன. ஆனால், சுட்டு விரல் பிறரைச் சுட்டிக் காட்டும்போது ஏனோ கட்டைவிரல் நம் பக்கம் பார்ப்பது மறந்து போய் விடுகிறது.

யாரை எளிதாகக் குறை கூற முடியுமோ அவர்களை இலக்காக வைக்கத் துவங்கி விட்டனர். அதற்காக எவரும் குறை இல்லாதவர்கள் என்று சொல்ல வரவில்லை. ஏதோ ஒரு விதத்தில் நாம் எல்லோருமே குறை உடையவர்கள் தான். அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தான் இன்னும் நமக்கு வரவில்லை. 

சமய உலகிலும் குறைகள் காண்பது இயற்கை. சிவாகமமே அக்குறைகளைப் பட்டியலிட்டு பூஜை முடிவில் சிவாச்சாரியாரை விட்டுச் சொல்லச் சொல்லும்போது நம்மவர்கள் குறை சொல்லப் புகுவதற்கான தேவையே இல்லை. அதற்கு மேலும் குறைகள் தொடர்ந்தால் அதற்கான பொறுப்பு இன்னாருக்கு என்று இறைவன் தீர்ப்பு அளிப்பான். நாம் முதலில் நமது குறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டி வழிபாடு செய்வதே நல்ல பண்புக்கு அடையாளம். 

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது முன்னோக்கி உள்ள சூழ்நிலையில் அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பதைப் பற்றி எவ்வளவு பேர் கவலைப் படப் போகிறார்கள் ? எப்படியாவது பொருள் சம்பாதித்து இம்மாதத்தை ஓட்டியாகவேண்டிய கட்டாயத்தில் அனைவரும் தள்ளப்பட்டுள்ளார்கள்.  வறுமையின் காரணமாக சொல்லமுடியாத துன்பங்களில் சிக்கியுள்ள குடும்பங்கள் தமக்கே உரிய வழிகளிலிருந்து தடம் மாறி விடுகின்றன. செய்யும் தொழிலில் அசிரத்தை ஏற்படுத்தும்  விபத்தும் நடைபெற்று விடுகிறது.. அவர்களது துன்பம் துடைக்க முன் வருவோர் சிலர். ஆனால் அவர்கள் சொற்ப வருவாயிலும் பணி  செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று வேறு சிலர் எதிர்பார்ப்பது வேதனையாக உள்ளது. 

பாட சாலைகளில் பயிற்சி பெற்றுக் காலம் தோறும் நியமத்தோடு சிவாலய பூஜை செய்ய வேண்டும் என்று ஆதிசைவ சமூகத்திடம் எதிர்பார்ப்பது நியாயம் தான். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நெல் நிறுத்தப்பட்டபோதும், மிகச் சொற்ப சம்பளம் கொடுக்கப்படும் நிலையிலும் அவர்கள் மறு பேச்சே பேசாமல் பணியைத் தொடர வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா ? அப்படி எதிர்பார்ப்பவர்கள், தாமாக முன்வந்து அவர்களுக்கு மாதம்  தோறும் முடிந்த உதவி செய்யலாமே ! அதை விட்டுவிட்டுக் குறை சொல்வதால் என்ன மாற்றத்தை எதிர் பார்க்க முடியும் ? 

மக்கள் எப்போது ஆதரவளிக்கத் தவறி விட்டார்களோ அப்போதிலிருந்தே விபரீதம் தொடங்கி விட்டது. கிராமங்களில் ஆலயங்களுக்கு ஆதரவளித்து வந்த அக்கிரகாரங்கள் காலியாகி விட்டன. கோயில் சிப்பந்திகளில் அர்ச்சகரைத் தவிர எல்லோரும் இடம் பெயர்ந்து விட்டார்கள். ஆகவே பூ பறித்துக் கட்டுவது, ஆலயத்தை சுத்தப் படுத்துவது , அபிஷேகத்திற்கு ஜலம் கொண்டு வருவது, நைவேத்தியம் தயார் செய்வது போன்ற வேலைகளும் அர்ச்சகர்களுக்குப் புகுத்தப்பட்டு விட்டன. இதற்காகக்  கூடுதல் வருமானமா அவர்களுக்கு வருகிறது ? முன்னோர் வசித்த வீட்டில் இருந்து கொண்டு, எவ்வளவோ சிரமத்துக்கு நடுவில் பணியாற்றுபவர்கள்  இன்றும் இருக்கிறார்கள். அந்த வீடுகள் பெரும்பாலும் மேற்கூரைகள் பழுதாகி மழை நீர் வீட்டுக்குள்ளே கொட்டியும் இரவு பூராகவும் கண் விழித்து மேற்கூரை இடுக்கு வழியாகக் கொட்டும் மழை நீரைப் பாத்திரங்களில் பிடித்து அவை நிரம்பியவுடன் அப்புறப்படுத்தும் குடும்பங்களைப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் அவர்கள் படும் சிரமங்கள் .

பாடல் பெற்ற சிவாலயங்களில் சில சிவாச்சார்யார்களால் கைவிடப் பட்டு விட்டன என்று கூறுவோர் உண்டு. ஆனால் சமூகமே அவர்களைக் கைவிட்டுவிட்ட நிலையில் வேறு வழி இல்லாமல் இடம் பெயர்கிறார்களே ஒழிய அக்கிராம மக்களோ அரசாங்கமோ ஆதரவளித்தால் எதற்காக வேறிடத்திற்குப் போகப் போகிறார்கள்? அர்ச்சகர் இல்லாததால் ஒரு கோவிலில் மெய்க் காவல் புரிபவரின் மகன் பூஜை செய்வதாக ஒரு அன்பர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் காலை நேரத்தில் அக் கோயிலைத் தரிசிக்கச் சென்ற  படியால் ஒன்று மட்டும் கூறுகிறோம். சுவாமிக்கு அபிஷேகம் மாலை நேரத்தில் மட்டுமே நடத்துவதாக அம்மகனாரே ஒப்புக் கொண்டார். இதைத்தான் இச் சமூகம் ஏற்கிறதா? அல்லது இறைவன்தான் மனமுவந்து ஏற்கிறாரா? உள்ளூர் மக்கள் முன்வந்து ஒரு சிவாச்சார்யாருக்குத்  தகுந்த ஊதியம் வழங்கி விட்டு அதற்குப் பிறகு குறைகள் இருந்தால் களைய முற்படலாமே ! 

அரசு ஊழியருக்கு சமமாக ஆலய ஊழியருக்கும் சம்பளம் வழங்கப்படும் என்று அண்டை மாநிலம் அறிவித்ததை இங்கு எத்தனை பேர் ஆதரித்து அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார்கள்? இங்கேதான் தொட்டதற்கெல்லாம் மொழிப் பிரச்னை,ஜாதிப் பிரச்னை என்று சொல்லியே மக்களை திசை திருப்புகிறார்களே. கோயில்களோ சிப்பந்திகளோ எப்படிப் போனால் இவர்களுக்கு என்ன? பொதி சுமக்கும் விலங்குகளுக்குச் சமமாகத்தானே ஆலய ஊழியர்கள் பார்க்கப்படுகிறார்கள் ! 

நிறைவாக ஒன்று சொல்ல விரும்புகிறோம். நமது இன்றைய தேவை கிராமம் தோறும் சென்று குறை அறிந்து அவற்றை நிவர்த்தி அளிக்கும் தன்னலமற்ற தொண்டர்கள் மட்டுமே.  இருந்த இடத்திலிருந்தே முற்றோதுதல்,அன்ன தானம் செய்தல், ஆகியவற்றைச்  செய்துவருபவர்கள் இதுபோன்ற இடங்களுக்குச் சென்று செய்யலாம். உழவாரம் செய்யும் அடியார்கள் இச் செயல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உள்ளூர் வாசிகளுக்கு ஊர்க் கோயிலின் பெருமையை எடுத்துச் சொல்லி, தினசரி வழிபாட்டிற்கு வரச் சொல்ல வேண்டும். அர்ச்சகர்கள் அவர்களை நம்பியே காலம் தள்ளுகிறார்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். 

சொந்த ஊரை விட்டு விட்டு நகரங்களுக்குக் குடிஏறியவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தயவு செய்து உங்கள் பூர்வீக கிராமத்தின் கோயில்களுக்கும் அவற்றின் அர்ச்சகர்களுக்கும் குன்றிமணி அளவாவது கொடுத்து உதவுங்கள். உங்களது முன்னோர்கள் உங்களை நம்பியே இக்கோயி ல்களை விட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள். நம் குடும்பத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கும் போது, இதுவரையில் சிறிதளவும் உதவாதவர்கள் இனிமேலாவது அதை மேற்கொள்ளலாம். அது உங்கள் வம்சத்தையே காப்பாற்றும். செய்து பார்த்தல் தான் அதன் அருமை புரியும். 

வெள்ளி மலையை நோக்கிப் பறந்து செல்லும் காக்கையும் அந்நிறம் பெறும் என்பது போல இறைவனை நோக்கிச் செல்லும் நாம் அனைவரும் அவனது குணங்களில் ஒரு சிறு துளியேனும் பெற முயற்சிக்க வேண்டாமா?  " குறை உடையார் குற்றம் ஓராய் " என்று  அடியார்களது குற்றத்தை மன்னித்துக் குணத்தையே கொள்ளும் சிவபரம்பொருளின் பெரும் கருணையை சம்பந்தர் பாடுகின்றார். " பழுது இல் தொல் புகழாள் பங்க "  என்று திருவாசகம் பார்வதி பரமேசுவரர்களது புகழ் தொன்மையானதாகவும், குற்றமற்றதாகவும் விளங்குவதாகக் கூறும். எனவே , நமது குறைகள் நீங்க ஒவ்வொருவரும் வழிபட்டால் ஊரே குறையற்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும். அதற்கு அடுத்த படியாகப் பிறருக்கு இரங்கும் குணம் தானாகவே வந்து விடும். அந்த இரக்க குணம் வந்துவிட்டால் நாம் புனிதர்கள் ஆகி விடுவோம். நமது வழிபாடும் அப்போதுதான் அர்த்தமுள்ளதாக ஆகும். குற்றமே பெரிதும் உடைய நம்மிடத்திலும்  கடைக் கண் பாலித்து நம்மை உய்ய வைக்க வேண்டும் என்று ஞான பரமேசுவரனை பிரார்த்திப்போம். 

Monday, March 12, 2018

தாயும் ஆகும் ஆதிசைவர்


இறைவனிடம் தொண்டனாகவும், புத்திரனாகவும் , தோழனாகவும் , நாயகி பாவத்தோடும் வழிபடும் மார்க்கங்களை முறையே திருநாவுக்கரசரும்,திருஞான சம்பந்தரும், சுந்தரரும், மாணிக்க வாசகரும்  வாழ்ந்து காட்டி நமக்கு அருளியுள்ளனர். முழுமுதற்கடவுளைத் தாயாகவே கூட இருந்து தன்னையும் பிறரையும் பேரின்ப மாகடலில் திளைக்க வைப்பவர்கள் ஆதிசைவர்கள்.

உண்ணாது உறங்காது இருக்கும் சிவபெருமானுக்கு நியமத்தோடு பூசை செய்யும்போது ஒரு தாய் அன்றாடம் தன குழந்தைக்கு நீராட்டுவதைப்போல நீராட்டுகின்றார் சிவாச்சார்யார். நீராட்டும்போது குழந்தைக்குப் பிடித்த பாடல்களைத் தாய் பாடுவதுபோல, இவரும் ருத்ராதி சூக்தங்களைச்  சொல்கிறார். குளித்த குழந்தைக்கு ஜலதோஷம் வராமலிருக்கத் தாயார் சாம்பிராணிப் புகை போடுவது போல இவரும் பெருமானுக்குத் தூபம் காட்டுகிறார். அன்னையானவள் குழந்தைக்குத் திருஷ்டி சுற்றிப் போடுவது போலவே இவர் விபூதியால் சுற்றிப் போடுகிறார். குழந்தையை அலங்கரித்துக் கண்ணாடி காட்டுவது போலவே இவரும் பெருமானை அலங்கரித்துக கண்ணாடி,குடை,சாமரம் போன்ற பொருள்களைக் காட்டுகின்றார். நீராடிய குழந்தைக்குப் பசிக்கும் என்று கருதிப் பால் நினைந்து ஊட்டும் தாயினைப் போலத் தானும் சாலப் பரிந்து நைவேத்தியம் செய்கிறார். குழந்தைக்கு நாள் முழுவதும் தாய் உணவு ஊட்டுவதைப் போல ஆதி சைவரும் பெருமானுக்கு ஆறு வேளைகள் இவ்வாறு பணி செய்கிறார். இதனால் தானோ என்னவோ குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பெரியோர்கள் கூறினார்கள் போலும்!

மேற்கூறிய ஒப்பு நோக்குதலில் சிறிது வித்தியாசமும் உண்டு. குழந்தை வளரும் வரையில் தான் தாயின் அரவணைப்பில் இருக்க முடியும். ஆனால் ஆதி சைவரோ தனது வாழ் நாள் முழுதுமே பெருமானுக்குத் தாய் போன்று இருந்து பணிவிடை செய்யக் கடமைப் பட்டவர். எனவேதான் ஆகம வழி நின்று பூஜைகள் செய்வது அத்தியாவசியமாகிறது. ஆறு கால பூஜைகள் நடப்பதற்குப் பதிலாக நாளடைவில் நான்கு,இரண்டு என்று ஆகி, ஒரு கால பூஜைகள் நடைபெறுவதையும் பார்க்கும்போது இறைவனை அன்னையாக இருந்து ஆராதிக்கும் அணுகுமுறைக்குக் குந்தகம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

பல்வேறு காரணங்களால் ஒருகால பூஜையே குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறாமல் இருக்கும் ஊர்களைக் காணும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. காலம் தாழ்ந்தால் சுவாமி பசியோடு இருப்பாரே என்று ஓடோடிச் சென்று காளத்தி மலை ஏறித் தான் கொண்டு வந்த இறைச்சியை இறைவன் முன் வைத்து , தலையில் செருகி வந்த காட்டுப் பூக்களை அர்ப்பணித்து , வாயில் கொண்டு வந்த பொன்முகலி ஆற்று நீரைத் திருமுடி மேல் உமிழ்ந்து அன்பின் வடிவமாகத் திகழ்ந்த கண்ணப்ப நாயனாருக்குக் கிடைத்த பேறு யாருக்குக் கிடைக்கும் ? ஒரு கால பூஜை என்று ஆகி விட்ட ஊர்ர்களில் அந்த ஒரு காலமாவது முழு ஈடு பாடுடன் நடைபெறுகிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம்.
உண்மையில் சுவாமிக்கு நாம் நைவைத்தியம் செய்வது என்பது, “ பெருமானே, நீ அருளிய தான்யங்கள் மூலம் செய்த உணவை உனது கருணை என நன்றியுடன் நினைவு கூர்ந்து உனக்கு அறிவிக்கிறேன் “ என்ற உயர்ந்த எண்ணத்தோடு செய்யப்படுவது. வீட்டிலேயும் பூஜை செய்து, மலர்களால் அர்ச்சனை செய்து, நைவேத்தியம் செய்வதன் நோக்கமும் இதுவே ஆகும். உண்பதன் முன் மலர் பறித்து, இறைவனது கழல்களுக்கு இடாவிட்டால், நோய்களுக்கே விருந்தாவர் என்று எச்சரிக்கிறார் அப்பர் பெருமான்.

ஆலய பூஜைகள் ஆறு காலங்கள் நடைபெற்றாலும் ஏதோ ஒரு சில காரணங்களால் ஆகமம் காட்டிய பாதையில் இருந்து சற்று விலகி விட வாய்ப்பு உண்டு என்பதால் கால பூஜையின் இறுதியில் தற்செயலாக நடைபெற்றமைக்கு மன்னிப்புக் கேட்கப்படுகிறது. அது மந்திர-தந்திர லோபமாகவோ, ஸ்ரத்தா லோபமாகவோ,கால-நியம லோபமாகவோ இருக்கக்கூடும் என்பதால் இறைவனிடம் இவ்வாறு விண்ணப்பிக்கப்படுகிறது.

தாயாய் இருந்து தொண்டாற்றும் கடமை பூண்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவாவது , வருமானத்தையோ சிரமத்தையோ பொருட்படுத்தாமல் பணியைத் தொடர வேண்டும். அதற்கான பலனை இறைவன் தராமல் விட மாட்டான். அதிலும் தன்னைத் தாயே போல் சீராட்டிப் பணிவிடை செய்பவனைக் கை விடுவானா அக்கடவுள் ?

Tuesday, January 30, 2018

சமயத்தைப் பிடித்துள்ள கிரகணம்

இணைய தள நண்பர் அனுப்பிய படம் : நன்றி 
பொழுது விடிந்தாலே ஒரு சர்ச்சையோடு ஆரம்பிக்கும் காலம் இது. அதுவும் கடந்த ஆண்டினைச்  சர்ச்சை ஆண்டு என்றே பெயரிட்டு விடலாம் போல் இருக்கிறது. சமயம் பற்றிய சர்ச்சைகளே அவற்றில் அதிகமாகக் காணப்படுபவை. சர்ச்சைகள் என்று கூறினால் அவற்றைப் பிரச்னைகள் என்று வேறு பெயர் இட்டு விடுகிறார்கள். எதற்கு எடுத்தாலும் போராட்டம், எதிர்ப்பு என்று ஆகி விட்டது. இப்படிச் செய்வதால் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்ற எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம். இத்தனை காலமும் பின்பற்றி வந்த மரபினை மாற்றத் துடிக்கிறார்கள். ஊடகங்களில் பேட்டி கொடுத்து சுய லாபத்தை அடைய முனைகிறார்கள். 

இத்தனை ஆண்டுகளாக சந்திர கிரஹணம் வந்த போதெல்லாம் மௌனிகளாக இருந்தவர்கள் இப்போது புது சர்ச்சையைத் தோற்றுவித்து மக்களைக் குழப்புகிறார்கள். கிரகண காலத்தில் ஆலயத்தை மூடாமல் திறந்து வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்த வேண்டும் என்று கருத்து வெளியிடுகிறார்கள். ஆகமங்களில் இருந்து வாக்கியங்களை எடுத்துக் கூறி இக்கருத்தை நியாயப்படுத்த முனைகிறார்கள். 

கிரகண காலத்தில் சந்திரனை ராகு பிடிப்பதாகப் புராணங்கள் கூறியதை ஏற்க மறுத்தவர்களும் , அந்த நேரத்தில் ஏற்படும் கதிர்  வீச்சினால் நமக்குப் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞான ரீதியாகக் கூறுவதை ஏற்கிறார்கள்.  அந்நேரத்தில் வெளியில் செல்லாமல் இருந்தால் கதிர் வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதால் கோவிலுக்குக் கூடச் செல்வதை அந்த சில மணி நேரங்கள் மட்டும் இத்தனை காலமும் தவிர்த்து வந்தார்கள். குறிப்பாகக் கர்ப்பமடைந்த பெண்கள் வெளியில் செல்வதால் அதிகமாகப் பாதிக்கப்படுவர் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். 

ஆகமங்களைப் பிரமாணங்களாகக் காட்டி ஆலயங்களைக் கிரகண காலத்தில் திறக்க வேண்டும் என்று சொல்பவர்களைக் கேட்கிறோம்:

1. தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தியே ஆக வேண்டும் என்று அறிக்கை விடாதது ஏன் ? 

2  உற்சவர்கள் வீதி உலா சென்றாலே, ஆலயத்தில் மூலவர் வழிபாடு செய்யலாகாது என்பதால் கோவில் மூடப்படும் நிலையில், உற்சவர்கள் அனைவரையும் பாதுகாப்பு என்ற பெயரில் பல்லாண்டுகள் அறநிலையத்துறை வேறோர் கோயிலில் சிறை வைத்துள்ளதைக்  கண்டித்து அறிக்கை விடாதது ஏன் ? 

3 சுவாமி-அம்பாளுக்கு யாகசாலையில் நவகுண்டங்கள் அமைக்க வேண்டும் என்ற ஆகம உரையை மாற்றி(க்  குறைந்தது ஐந்து குண்டங்களாவது அமைக்காமல்) ஒரே குண்டம் அமைத்துக் கும்பாபிஷேகம் நடத்தும் ஊர்களைக் கண்டிக்காதது ஏன் ?

4 ஆங்கிலப்புத்தாண்டன்று நள்ளிரவில் கோவிலைத் திறந்து வைத்து வழிபாடுகள் செய்வது எந்த ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது ? 

5  இறைவனைப் பல இடங்களில் தீண்டாத் திருமேனி என்று சொல்லிக் கொண்டு மனிதர்கள் நெற்றியில் திருநீறு பூசி விடுவதை யாரும் கண்டித்ததாகத் தெரியவில்லையே ! 

6  ஆகமப் ப்ரவீணர்களாக இருப்பவர்கள் கும்பாபிஷேகத்திற்கு மட்டும் செல்வதோடு நிறுத்தி விடாமல் சாதாரண நாட்களிலும் கிராமக் கோயில்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தினசரி வழிபாட்டின் அவசியத்தை எடுத்துச் சொல்லலாமே ! 

இன்று ஏராளமான ஆலயங்கள் ஈ-காக்காய் கூட இல்லாமல் வௌவால்களும் பாம்புகளும் ஆட்சி செய்து வரும் நிலையில் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஊர் மக்கள் அக்கறை இல்லாமல் ஆலயம் இடியும் நிலையைக் கண்டும் காணாதது போல இருக்கிறார்கள். எடுத்துச் சொல்ல எவரும் முன் வருவதில்லை. இருந்த இடத்தில் இருந்த படியே அறிக்கை மட்டும் விடுபவர்ர்கள். முதலில் மக்களை நல்  வழிப்படுத்தட்டும்  பிறகு மாற்றங்கள் பற்றி யோசிப்போம். 

திருவாரூர் கோயிலைக் கிரகண காலத்தில் திறந்து வைக்க வில்லையா என்று கேட்கிறார்கள். எல்லாக் கோயில்களையுமே திறந்து வைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். கோயிலுக்கு வருபவர்கள் எந்த வேளையிலும் இரண்டு மணி நேரம் அங்கேயே இருப்பது அபூர்வமாகி விட்ட இக்காலத்தில் , அவர்கள் கிரகணம் பிடித்தவுடன் அரை மணி நேரம் தரிசனம் செய்து விட்டு, வீட்டுக் குத் திரும்பும் போது, கதிர் வீச்சுக்கு ஆளாவர் அல்லவா? அது மட்டுமல்ல. கிரகணம் முடிந்ததும் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதால் கோவிலுக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தால் ஸ்நானம் செய்யலாமா என்பதும் நியாயமான காரணமாகப் படுவதால் தினசரி தரிசனத்தை அந்த சில மணி நேரங்களில் செய்யாமல் சற்றுத் தள்ளிப் போடச் சொன்னார்கள் நமது முன்னோர்கள். அவ்வளவுதான். 

அவரவர்கள் தனக்குத் தோன்றியவற்றை நியாயப் படுத்த முனைந்து விட்டபோது யார் என்ன சொன்னாலும் அவ்வளவு எளிதில் ஏற்பதில்லை. அனைவரும் ஏற்கும் படியாக அறிவுரை சொல்பவர் இல்லாமலும் இருக்கக் கூடும். ஒருவேளை இருந்தாலும், ஆணவ மலம் அதனை ஏற்க மறுக்கிறது. 

பக்தி மேலீட்டின் பால், இறைவனே எல்லாவற்றுக்கும் காரணமாக விளங்குவதால் நாம் அஞ்ச வேண்டியதில்லை என்பர் சிலர். உண்மைதான்.ஆனால் இந்தப்பக்குவம் ஏற்பட எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டுமே !  பாமர மக்களுக்குப் போய்ச் சேரும்படி எளிய அறிவுரைகளைக் காலத்தை மனதில் கொண்டு சர்ச்சைகள் ஏற்படாதவாறு எடுத்து உரைப்பதே நல்லது. நிருபர்களைக் கண்டவுடன் வித்தியாசமாகப் பேசியே தீர வேண்டும் என்ற மனப்பாங்கைத் தவிர்த்தல் சமய உலகிற்கே நலம் விளைவிக்கும்.  

Wednesday, January 17, 2018

புராண வரலாறுகளைச் சொல்லலாமே

ஆகமம் தந்த அண்ணலும் அர்ச்சித்த தவக் கொழுந்தும் 
தல யாத்திரை செய்பவர்கள் பலவிதம். சிலர் தாங்கள் ஒரு ஊரின் பெருமையைப் பிறர் சொன்னதால் வருபவர்கள். சிலர் பத்திரிகை,தொலைக் காட்சி மூலம் தெரிந்து கொண்டு வருவார்கள். இன்னும் சிலர்  புத்தகங்களில் படித்து விட்டுச் செல்பவர்கள். எப்படியாவது வரட்டும். சுற்றுலா மாதிரி செல்பவர்கள் இல்லாமல் இருந்தால் நல்லது. யாத்திரை என்பது புனிதமானது. நம்மைப்  புனிதப்படுத்துவது. பொழுது போக்குவதற்கும், கேளிக்கைக்கும் அதனை மாற்றி விடக் கூடாது. யாத்திரை மேற்கொள்பவர்கள் பக்தி நெறியைக் கடைப் பிடிப்பது மிகவும் அவசியம்.

தனியாகச் செல்வோரும் குழுக்களாகச் செல்வோரும் ஒரு வாகனத்தை அமைத்துக் கொண்டு பல கோயில்களுக்குச் செல்கிறார்கள். இக்கோயில்கள் பெரும்பாலும் கிராமங்களில் உள்ளன. இவ்வாறு பலர் வருகை தருவதால் ஆலய சிப்பந்திகளும் பயனடைவர். வெளியூர்களில் இருந்து வரும் யாத்திரீகர்களுக்கு உள்ளூர் வாசிகள் தங்குமிடம், உண்ண உணவு ஆகியன கொடுத்து அவர்களை விருந்தாளிகளாக எண்ணி உபசரித்த காலம் இனி எப்பொழுது வரப்போகிறது? 

தேசாந்திரிகளுக்கு உணவு வழங்க அக்காலத்தில் நிலங்களைத் தானமாகக் கொடுத்திருந்தார்கள். நில வருவாய் இல்லாமல் போனதால் அந்த தருமமும் நின்று போய் விட்டது. மதிய வேளையில் சில கோயில்கள் அன்னதானம் செய்கின்றன. அதுவும் பிறரது நன்கொடையிலிருந்து! 

எல்லாம் தான் ஒன்றன் பின் ஒன்றாக நின்று போய்க் கொண்டிருக்கிறது. வாய் வார்த்தைக்குமா பஞ்சம் ?  வெளியூர் அன்பர்களுக்குத் தரிசனம் செய்து வைக்கும் சிவாச்சார்யர்களில்  அநேகர்,  தமது கோயிலின் புராண வரலாறைக் கூறுவதில்லை என்று பரவலாக ஒரு புகார் உள்ளது. நாமாகக் கேட்டால் சொல்வோரும் உண்டு. ஒரு ஊரில் தல வரலாற்றைக் கேட்ட பொது, தகவல் பலகையில் எழுதி இருக்கிறது படித்துக் கொள்ளுங்கள் என்று கூறியதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இந்த நிலைமை? விரக்தி காரணமா? அசிரத்தை காரணமா? நாம் எதற்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணமா?  எதுவுமே புரியவில்லை. இது பற்றி நாமும் எழுத வேண்டாம் என்று இத்தனை நாள் இருந்தோம். சமூக வலைத் தளங்களில் சிலர் இதைச் சுட்டிக் காட்டும்போது நாமும் பிறரது எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் செயல் படலாம் என்று சொல்லத் தோன்றியது.

பெருமாளின் திவ்ய தேசங்களுக்கு யாத்திரை செய்பவர்களுக்கு அங்கு எப்படித்  தரிசனம் செய்து வைக்கிறார்கள் என்பது தெரியும். மூலவரது பெயர், எந்த திசையை நோக்கியுள்ளார், யாருக்கு அருள் செய்தார், நின்ற/ அமர்ந்த/கிடந்த கோலம், விமானம் மற்றும் புஷ்கரணியின் பெயர்கள், முதலிய தகவல்கள் தரிசிக்க வருபவர்களுக்குச் சொல்லப்படுகிறது. இதுபோல் சிவாலயங்களில் ஏன் சொல்லப் படுவதில்லை? திருப்தி அடைந்த சேவார்த்திகள் தாராளமாக தட்சிணை அளிக்கவும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. 

அறநிலையத்துறை தரும் சம்பளமோ சில நூறுகள் தான். உள்ளூரிலிருந்தும் வருமானம் இல்லை. பொருள் ஈட்டுவதற்காக வெளியூர் சென்று படாத பாடு படுவதைக் கண்டும் உதவுவார் இல்லை. அப்படி இருக்கும் போது யாத்ரிகர்கள் மூலம் வரும் வருவாய் சொற்பமாக இருந்தாலும் உதாசீனப் படுத்தலாமா? வருமானத்தை விட, புராண வரலாறு கேட்டவர்களின் முகத்தில் ஏற்படும் திருப்தி இருக்கிறதே, அது ஒன்றே, ஆறுதல் தரும் மருந்தாகவும்  அமைவதாகக் கருதலாமே. 

Tuesday, January 16, 2018

நந்தியை மறைப்பதா ?

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவரை பூஜிக்கும் பெண்ணின் நல்லாள் 

சபரி மலை போகும் பக்தர்கள் பலர் கோயில்களில் மாலை போட்டுக் கொள்கிறார்கள். மலைக்குப் போகும்போது கோவிலுக்கு வந்து ஐயப்ப பூஜை செய்து விட்டு இருமுடியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். அண்மையில் ஒரு கோயிலில் கண்டதை இங்குப் பகிர வேண்டியிருக்கிறது. 

துணியால் மறைக்கப்பட்ட நந்தி மண்டபம் 
ராஜ கோபுரத்தைக் கடந்தவுடன் நந்தி மண்டபம், கொடி மரப் பிள்ளையாரை வணங்கி விட்டு, நந்திக்கு நேராக இருக்கும் சிவசன்னதிக்குச் செல்லுகையில்  நந்தி தேவரை மீண்டும் வணங்க எண்ணியபோது நந்தியைப் பார்க்க முடியாத படித் திரை இடப் பட்டிருந்தது. அதற்கு முன்பாக மூலவரை நோக்கிய நிலையில் 18  மரப்படிகள் அமைக்கப் பட்டு, அதன் மீது ஐயப்பன் விக்கிரகம் இருந்ததைக் கண்டோம். பூஜைக்காகச்  செய்யப்பட்ட ஏற்பாடு இது. 

நந்தி போல் மறைக்காதே என்று வேடிக்கையாகச் சொல்வது போய் நந்தியையே மறைத்து விட்டிருக்கிறார்கள்! தற்காலிக ஏற்பாடாக இருந்தாலும் சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகக் கூடாது என்று ஆலய வழிபாட்டு முறை இருக்கும்போது, நந்தி மண்டபத்தையே இப்படித் துணியால் மூடியது வியப்பில் ஆழ்த்தியது!  சிவாகம முறைப்படி நடக்கும் கோயில்களில் கூட இப்படி விதி மீறல்கள் நடக்கலாமா ? 

மறைப்பும் பூஜை அமைப்பும் விலகியபின் தெரியும் நந்தி 
தகுந்தபடி எடுத்துச் சொன்ன பிறகு படிகளோடு கூடிய பூஜை அமைப்புச் சற்று விலக்கப்பட்டது. நந்தனார் சரித்திரத்தில் இறைவன் நந்தி தேவரைச் சற்று விலகி இருக்கும் படி கூறியருளினார். ஆனால் இங்கு நடைபெற்றதோ வேறு விதமாக இருந்தது. இப்படியெல்லாம் நடை பெறாமல் சிவாச்சாரியப் பெருமக்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். 

பூஜைக்குக்  குடும்பத்துடனும் நண்பர்களுடனும்  வருபவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை உண்டுவிட்டு எஞ்சியவற்றைக் கோயிலிலேயே எறிவது வருத்தமளிப்பதாக உள்ளது. எஞ்சிய  உணவை கோவிலுக்கு வெளியில் ஒரு தொட்டியில் போடாமல், கோவிலுக்கு உள்ளேயே போடுவதால், அதை உண்பதற்காக நாய்கள் வந்து விடுகின்றன. எஞ்சிய இலைகளும், பிளாஸ்டிக் பொருள்களும் சிதறிக் கிடப்பதைப் பார்த்தால் வேதனையே மிஞ்சுகிறது. போதாக் குறைக்கு வாய் கொப்பளித்த எச்சில் நீர்  , அங்கு வருபவர்களின் கால்களில்  படுகிறது . 

வீட்டில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் மட்டும் போதாது. வீதிகளையும் நாம் வணங்கும் கடவுளின் ஆலயத்தையும் அவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டாமா? நாம் எப்போது தான் திருந்தப்போகிறோமோ தெரியவில்லை. 

Friday, January 12, 2018

அலங்காரமா அறியாமையா ?

இலிங்கப் பெருமானுக்கு  உருவம் 
மூர்த்தி அலங்கார விதி என்ற பழைய புஸ்தகத்தில் எவ்வாறு அலங்காரம் செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப் பட்டிருக்கிறது. ஆண் விக்கிரகத்தைப் பெண்ணாகவும், மனம் போன போக்கில் எல்லாம் அடியோடு மாற்றி அமைப்பதும் பல கோயில்களில் நடைபெறுகின்றன. சிவாகமத்திற்கு மாறாக நடந்து கொள்வது வருந்தத்தக்கது. அலங்காரம் என்ற பெயரில் கண்ட பொருள்களைக் கொண்டு மூலவர் மற்றும் உற்சவத் திருமேனிகள் அலங்கரிக்கப்படுகின்றன. பார்ப்பவர்களோ ஒன்றும் தெரியாத அப்பாவிகளாகவும், இப்படிப்பட்ட  " அலங்காரத்தைப் பெரிதும்  மெச்சுபவர்களாகவும் இருப்பதால் கேட்பவரின்றி ,விதம் விதமான  அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு மாற்றுவதால் ஏற்படும் தோஷங்கள் பற்றித் தெரிந்தவர்கள் இப்படி மாற்றத் துணியமாட்டார்கள். 

ஒரு ஊரில் நவராத்திரியின் போது அம்பிகைக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களைப் படம் எடுத்து அனுப்பிஇருந்தார்கள். அம்பிகையை ராஜ ராஜேசுவரியாகவும், திருபுர  சுந்தரியாகவும், சிவ பூஜை செய்பவளாகவும்,தக்ஷிணா மூர்த்தி ரூபிணியாகவும், சரஸ்வதி,லக்ஷ்மி ஆகிய தேவி அம்சங்களாகவும், துர்க்கா தேவியாகவும், காமாக்ஷியாகவும் , மீனாக்ஷியாகவும், அன்னபூரணியாகவும் அலங்காரம் செய்து வருவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் வெண்ணைத் தாழி அலங்காரம் செய்திருந்தார்கள். எழுதிக் கேட்டதற்கு, "  அரியலால் தேவியில்லை" என்ற தேவார வாக்கை சுட்டிக் காட்டினார்கள். அப்படியானால் பத்து நாட்களும் தசாவதாரங்களையும் அம்பிகைக்கு செய்து பார்ப்பார்களோ என்னவோ !!


சிவலிங்க மூர்த்தியாவது உருவமும் அருவமும் கலந்த படியால், அம்மூர்த்திக்கு உருவம் கொடுப்பது உயர்ந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ளாததன் விளைவு. சந்தனக் காப்பே செய்து விடுகிறார்கள் சில இடங்களில். மேலும், கண்,மூக்கு,வாய் என்ற எல்லாம் பாணத்தில் வரையப் படுகிறது. போதாததற்கு மீசை வேறு ! 


அன்னாபிஷேகம் என்பது அன்னத்தால் அபிஷேகம் செய்யப் படுவது. அன்னம் பாலித்த கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக செய்யப்படுவது. சிதம்பரத்தில் சந்த்ரமௌலீசுவரருக்கு அன்றாடம் செய்யப்படுவது. வித்தியாசமாகச் செய்வதாக எண்ணிக்கொண்டு பல ஊர்களில்  முகம் வரையப்பட்டு , எல்லாப் பொருள்களைக் கொண்டும் " அலங்காரம் " செய்யப்படுகிறது  பாவம் , அலங்காரம் செய்ய எவ்வளவோ முயன்றும், கண் ஒன்றரைக் கண்ணாகவும், விழித்துப் பார்ப்பதாகவும் பயங்கரமாகவும் சில ஆலயங்களில் சித்தரிக்கப்படுகிறது. சிவலிங்கப் பெருமானுக்கும் ,அம்பிகைக்கும்  அர்த்தநாரி வடிவம் கொடுத்து விடுவதையும் பார்க்கிறோம்.  


உற்சவருக்குச்  செய்யப்படும் அலங்காரமோ கற்பனையின் உச்சமாக இருக்கிறது. நிற்கும் விக்கிரகத்தை போலிக் கரங்களையும் கால்களையும் வைத்துக் கயிறுகளால் கட்டி, இயல்பான வடிவம் எது என்று தெரியாதபடி ஆக்கி விடுகிறார்கள். சோமாஸ்கந்த மூர்த்திக்கு நீண்ட கால்களை வைத்துக் கட்டி செயற்கைக் கைகளில் சூலத்தைக் கொடுத்து, மூர்த்தியின் அழகையே கெடுத்து விடுகிறார்கள். தொண்டை மண்டலத்தில் இவ்வித அலங்காரம் சகஜமாகப் போய் விட்டது. அதையும் ரசிப்பவர்கள் உண்டு. உயரத்தில் அமர்ந்திருக்கும் மூர்த்தியின் செயற்கைக் கால்கள் அதிகார நந்தியின் ஏந்திய கரங்கள் வரை நீட்டப்படுகின்றன. 


மூர்த்தியால் நகைக்கு அழகு 
சோழ நாட்டுக் கோயில்களில் பெரும்பாலும் மூர்த்தியின் இயற்கையான வடிவை மாற்ற மாட்டார்கள். கவசம் சார்த்தி, நகைகள்,கிரீடம்,நகைகள், பின் அலங்காரம் ஆகியன மட்டும் செய்து விட்டு, புஷ்ப அலங்காரம் மூர்த்தியை மறைக்காதவாறு செய்வார்கள். அது அவர்களுக்கே உரிய ஆற்றல். மற்ற பகுதிகளில் உள்ள பெரிய கோயில்களில் உற்சவ அம்பாளுக்குத் திருக் கல்யாணத்தின் போது கூட புடவை அணிவிக்காமல், பாவாடை அணிவிப்பதை  என்னவென்று சொல்வது ? 


ஒரு ஊரில்  சுவாமி, அம்பாளுக்குப் பின்னல் பின்னி விடுவதாக உற்சவர்கள் அலங்காரம் செய்யப் பட்டுள்ளனர். இதெல்லாம் ஆகம சம்மதமா, எப்படி வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம் என்ற எண்ணமா  என்பதை  சிவாச்சாரியப் பெருமக்களின் சிந்தனைக்கு விடுகிறோம்.


சுவாமிக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலை போடப் போய் இப்பொழுது சன்னதியையே நோட்டுக்களால் அலங்கரிக்கத் துவங்கி விட்டனர். மரத்தை மறைத்தது மா மத யானை என்பதைப் போல் காகிதம் என்பதே மறந்து நோட்டு மட்டுமே தெரிகிறது !! 

இப்பதிவு எவரையும் குறைகூறவோ, புண்படுத்தவோ எழுதப்பட்டதன்று. சிவாசார்யர்களது சிந்தனைக்கு மட்டுமே உரியது என்பதால் பரவலாக எல்லோருக்கும் அனுப்பப்படவில்லை. யாரோ சிலரது  ஆர்வக் கோளாறுகளால் மொத்த சமூகமே பழிக்கப்படக் கூடாது. எனவே இதனை சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

Tuesday, December 5, 2017

" எதுக்கும் கவலைப் பட வேண்டாம் ஸ்வாமி இருக்கார் "

ஸ்ரீ கணேச சிவாசாரியார் அவர்கள் 
நாம் பல கோயில்களைத் தரிசிக்கச் செல்லும்போது மனதுக்கு இதமாக ஆலய தரிசனம் செய்து வைப்பவர்களை சந்திக்கிறோம். அவர்களது அயராத சேவையைக் கண்டு அதிசயிக்கிறோம். எந்த விதமான பிரதி பலனையும் எதிர்பாராமல் இறைவனுக்குத் தொண்டு செய்வதொன்றையே தனது வாழ்நாளின் இலட்சியமாகக் கொண்டு வாழ்பவர்கள் இத்தகையவர்கள். சிவனருளால் தனக்குக் குறை எதுவும் இல்லை என்று பெருமிதமாகக் கூறிக் கொண்டு குக் கிராமத்தில் ஏழ்மை நிலையிலும் சிறிதளவு அங்கலாய்ப்பும் கூட  இல்லாதவர்களைப் பார்க்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. இன்றைய சமூகம் அவர்களைப் போற்றிக் காப்பாற்றத் தவறி விட்டது என்று உறுதியாகச் சொல்லலாம். கோயில் முறை உள்ள நாட்களில் எந்த அசௌகர்யம் வந்தாலும் பொருட்படுத்தாமல்  பூஜை ஒன்றையே இலக்காகக் கொண்டு தம்மை இறை பணிக்கு  அர்ப்பணிப்பவர்களுக்கு நாம் நன்றி செலுத்தத் தவறி விட்டோம்.

 நிலைமை இப்படி இருக்கும்போது, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது அல்லவா? எனவே, கோயில் முறை இல்லாத காலங்களில் வெளியூர் சென்று கும்பாபிஷேகங்கள் செய்வித்தும், வீடுகளில் சுப காரியங்கள் செய்வித்தும் பொருள் ஈட்டி, மிகுந்த சிரமத்துடன் மாதம் தோறும் நாட்களைத் தள்ளவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். எதிர் காலத்தைப் பற்றி யோசிக்க என்ன இருக்கிறது? 

மயிலாடுதுறையில் இளமைக் காலத்தில் வசித்த காலத்தில் பக்கத்து வீட்டில் இருந்த சிவாசார்ய குடும்பமும் மேலே குறிப்பிட்ட நிலையில் தான் இருந்தது. சிவாகமத்தில் நன்கு தேர்ச்சி பெற்றதோடல்லாமல் ஆலய பூஜையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பம் அது. சகோதரர்கள் தங்கள் குடும்பங்களோடு வசித்துக் கொண்டு தங்களது ஆலயத்திற்குச் சென்று பூஜைகளைச் செய்து வந்தனர். அப்போதெல்லாம் மழைக் காலங்களில் காவிரி கரை புரண்டு ஓடும். படிகளைக்கூடப் பார்க்க முடியாது. ஆற்றின் நடுவில் நந்தி மண்டபம் ஒன்று உண்டு. அதிலுள்ள நந்திகேசுவரருக்கு இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிவாசாரியார், ஒரு கையால் நைவேத்தியத்தை சுமந்து கொண்டு மறு கையால் ஆற்று நீரை விலக்கிக் கொண்டுபோய், அபிஷேக ஆராதனைகள் செய்வதைக் கண்டிருக்கிறோம்.

அக்குடும்பங்களில் ஒன்றாக, பக்கத்திலுள்ள பாண்டூரைச் சேர்ந்த சிவாசார்யக் குடும்பமும் வசித்து வந்தது. அக்குடும்பத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ கணேச சிவாசாரியார் அவர்கள், திருவாரூர் செல்லும் வழியிலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் ஆலய பூஜையைச் செய்து வந்தார்கள். 
 பரமேசுவரன் கஜ சம்ஹாரம் செய்ததோடு ஞானோபதேசம் செய்த இந்த அற்புதத்தலத்திற்கு இவரோடு பலமுறை சென்றதுண்டு. கோயிலின் பல்வேறு சிறப்புக்களை விளக்குவதோடு, நுட்பமான பூஜை முறைகளையும் விளக்குவார். யந்த்ர தரிசனம் செய்துவைக்கும்போது, ஸ்ரீ ருத்ரத்தில் வரும், " பரிணோ ருத்ரஸ்ய " என்ற பகுதியைச் சொல்லச் சொல்லித் தீபாராதனை காட்டுவார். அவ்வளவு பய பக்தியோடு அவர் அதைச் செய்யும்போது நம்மை அறியாமல் ஆனந்தக் கண்ணீர் விடுவோம். நமக்கு சிவபக்தி அதிகமாவதற்கு முக்கியமானவர்களுள் இவரும் ஒருவர். 

சுவாமி தரிசனம் செய்ய வரும்போது வெறும் கையோடு வரக் கூடாது என்று வலியுறுத்துவார். தேங்காய்,பழம் இல்லாவிட்டாலும் கற்கண்டோ , உலர்ந்த திராக்ஷையோ கொண்டு வரலாமே என்பார். ஞானம் வருவதற்கு மூல மந்திர ஜபம் செய்து தியானிக்க வேண்டியது முக்கியமானது என்று சொல்லுவார். " நானே உனக்கு வல்லப மகா கணபதி , சுப்பிரமணிய ஜபங்களை உபதேசிக்கிறேன் " என்று சொல்லி க்ருத்திவாசரின் மகாமண்டபத்தில் அடியேனுக்கு அந்த ஜபங்களை எடுத்து வைத்து விட்டு, நிறைய ஆவர்த்தி செய்து வந்தால் மந்திர சித்தி ஏற்படும் என்றும் சொல்வார். தன்  நினைவாக ஒரு ஸ்படிக ருத்ராக்ஷ மாலையையும் தந்து ஆசீர்வதித்தார்.   

வயது முதிர்ச்சியின் காரணமாக வழுவூர் செல்வது நின்று போன நிலையிலும்  தனது இல்லத்தில் இருந்தபடியே மனதாகிய இல்லத்தில் நீங்காது விளங்கிய ஞான சபேசுவரப் பெருமானை சதா காலமும் தியானிப்பது இவரது வழக்கம். நேரில் சந்திக்கும்போதெல்லாம் அந்த மூர்த்தியின் பெருமைகளை சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி அடைவார். அந்த ஊரின் புராணம் புத்தக வடிவில்  வெளிவந்தவுடன்  அதன் ஒரு பிரதியைத்  தந்து, " இதை வைத்துக் கொள். உனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்" என்றார். பின்னர் அப்புத்தகத்தைப் படித்ததால் வழுவூரைச் சுற்றியுள்ள சில தலங்களின் இருப்பிடங்கள்  தெளிவாக விளங்கின . இன்னும் தெளியவேண்டியவை பல உண்டு. 

சுமார் ஆறு மாதங்கள் முன்னர் அவரை சந்தித்தபோது அவரது நிலை சொல்லும்படியாக இல்லை. யாரோடு பேசுகிறோம் என்பதும் தெரியவில்லை. முகத்தில் மட்டும் தேஜஸ் சற்றும் குறையவில்லை. வீட்டிற்குள் நுழைந்தவுடன் எப்பொழுதும் ஒருமையில் அழைப்பவர் அன்றைய தினம் " வாங்கோ " என்று அழைத்தார். நினைவாற்றல் இழந்த நிலையிலும் வருபவர்களை வரவேற்பது மட்டும் குறையவில்லை. யார் வந்திருப்பது என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. சில நிமிடங்களில் ஒரே வார்த்தை அவரிடமிருந்து உதித்தது:  "எதுக்கும் கவலைப் பட வேண்டாம். ஸ்வாமி இருக்கார் " என்பதே அது. இந்த ஆசி மொழிகளைக் கேட்டுக் கண்ணீர் பெருக்குவதைத் தவிர மேலும் அவரிடம் பேசத் தோன்றவில்லை. 

அதுவே அவரைக்  கடைசியாக சந்தித்தது. சுய நினைவுடன் இருக்கும்போது அவரிடம் எத்தனையோ முறை ஆசிகள் பெற்றிருந்தும், இவ்வாறு சுய நினைவில்லாத போது பெற்ற ஆசிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று நினைக்கத் தோன்றியது. மூலமாகிய ஞான தீபத்திலிருந்து பல தீபங்கள் ஏற்றப்படலாம். இருந்தாலும் மூலத்திற்கு நிகர் எது? 

சென்ற கும்பாபிஷேகத்திற்கு முன்னர்  திருப்பணிகள் நடந்த சமயம் வழுவூர் சென்றிருந்தபோது மாலை நேரம். நமக்கும் அத்திருப்பணியில் பங்கேற்கும் பாக்கியம் கிட்டுமா என்று மனம் ஏங்கிய போது, " ஒவ்வொரு சன்னதியையும் ஒரு உபயதாரர் திருப்பணி செய்கிறார். ஒரே ஒரு சன்னதி விமானம் மட்டும் திருப்பணி செய்வதற்கு யாரும் முன் வரவில்லை. அது எந்த சன்னதி தெரியுமா? எந்த மூர்த்திக்கு முன்னால் நின்று கொண்டு வரும்போதெல்லாம் தேவாரம் பாடுவாயோ அந்த கஜ சம்ஹார மூர்த்தி சன்னதி தான் . அதை  நீயும் உன் நண்பர்களும் ஏற்றுச் செய்யலாமே " என்றார். உண்மையிலேயே மெய் சிலிர்த்தது.  அதன்படியே அத்  திருப்பணியைச்  செய்யும் பாக்கியத்தை க்ருத்திவாசப் பெருமான் அருளினான். 

நமது அமைப்பின் மூலம் கிராமக் கோயில்களில் பணி  புரியும் சிவாச்சாரியார்களைக் கெளரவிக்கும்போது இவரைத்  தம்பதி சமேதராய் மேலும் நான்கு ஆலய சிவாசார்ய தம்பதிகளோடு திருவாழ்கொளிபுத்தூர் ஆலயத்திற்கு அழைத்து வந்தபோது எல்லோருமாக ஆசீர்வதித்ததை வாழ்க்கையில் பெற்ற பெறும் பேறாகக் கருதுகிறோம். இவ்வாறு ஞானச் சுடர் விளக்குகளைத் தோற்றுவித்து அவற்றை அணையாமல் தூண்டிப் பாதுகாத்து வந்த மூல தீபம் 1.12.2017 அன்று காலையில் கயிலை நாதனின் மலரடிகளைச் சென்றடைந்தது. " தேச விளக்கெல்லாம் ஆன   தூண்டு சுடர் அனைய சோதி"யுடன் சோதியாகக் கலந்து விட்டது. 

Thursday, October 19, 2017

அர்ச்சகர் நலனும் அரசின் கடமையும்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்                        உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,                                              அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்                                      பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து.
                                                                                   - பெரிய புராணம்                                                
    மக்கள்  தொகையில் எந்தெந்தப் பிரிவில்  எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கு எடுக்கிறார்கள். அப்போது அவர்கள் சார்ந்த மதம்,மொழி, இனம் ,செய்யும் தொழில் ஆகிய பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதனால் மக்களின் வளர்ச்சியைக்  கண்காணி ப்பதற்கு  எளிதாகிறது என்று கொள்வோம். ஒவ்வொரு குடிமகனும் முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததைவிடப் பொருளாதார நிலையில் முன்னேறியிருக்கிறாறா   என்பதை நோக்கும்போது  நாட்டின் முன்னேற்றமும் அறியப்படுகிறது. ஒருக்கால் ஏதோ காரணத்தால்  பொருளாதாரத்தில் பிற்பட்ட நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களது முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுவது அரசின் கடமை ஆகும். 

 தமிழகத்தைப் பொறுத்தவரைப்  பல்லாண்டுகளாக மேற்கண்ட சமநோக்கோடு செயல் படாமல் இருக்கக் காரணம் அவ்வாறு செயல் படுத்த விடாமல் எதிர்ப்பவர்களே. எந்தப்பலனும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விளையாதபோது அரசாங்கம் வீண் செலவு செய்வதாகவே தோன்றுகிறது. பொருளாதாரத்தில் முன்னேறாவிட்டாலும் பரவாயில்லை. பின் நோக்கிப் போகும் அர்ச்சகர் சமுதாயத்தின் மீது சிறிதும் இரக்கம் காட்டாதது என்? எதற்கெடுத்தாலும் மதச் சாயமும் சாதிச் சாயமும் இன்னும் எத்தனை காலம் தான் பூசப்போகிறார்கள்? தமிழக மக்கள் தொகையில் சுமார் ஒன்று அல்லது இரண்டு சத வீதமே இருக்கும் பிரிவினர்  சிறுபான்மையர் என்று கருதப்படாவிட்டாலும் புறக்கணிக்கப்பட்டவர் என்றாவது கருதப்படலாம் அல்லவா?  

பொருளாதாரத்தை வேண்டுமானால் விட்டுத்தள்ளுங்கள். அந்தப்பிரிவே இல்லாமல் போய் விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பெரிய கோயில்களில்  தட்டில் விழும் காசுகளைப் பார்த்தே பழக்கப்பட்ட பொறாமையாளர்கள், மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு கிராமங்களில் அல்லல் படுபவர்களை  ஏன் காண்பதில்லை? எல்லோரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பவர்கள் இது போன்ற வருமானம் இல்லாத கோயில்களில் எத்தனை நாட்கள் பணியாற்ற முடியும்? வீம்புக்காக வேண்டுமானால் எது வேண்டுமானாலும் பேசலாம். செய்து பார்த்தால் அதன் அருமையும் சிரமங்களும் புரிய வரும். 

விரக்தியின் விளிம்பில் இருக்கும் அர்ச்சகர் சமூகம், குலத் தொழிலை இன்னமும் செய்தால் ஆதரிப்பார் இல்லை எனக் கருதி, வேறு வேலைக்குச் செல்ல எத்தனிக்கிறது. வேலைக்குச் செல்லும் அர்ச்சகர் குலப் பெண்கள்,தாங்கள் மணக்க இருக்கும் தங்களது குல ஆடவர்கள் கோயில் வேலை செய்பவராக இருந்தால் துயரங்கள் தொடரும் எனக் கருதத் துவங்கிவிட்டதால் ஆண்களுக்குத் திருமணம் ஆகாமல் காலம் பூராவும் பிரமச்சாரிகளாக இருக்க வேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது. இதற்கு அரசாங்கமும் மடாலயங்களும் தீர்வு காணக் கடமைப் பட்டவர்கள். ஆனால், அவர்களோ அறிக்கை விட்டு விட்டு அமைதி ஆகி விடுகிறார்கள். தமது நிர்வாகத்திற்குட்பட்ட ஆலயங்களின் அர்ச்சகர்களுக்குப் போதிய வருவாய் அமைத்துத் தந்து அறநிலையத்துறையும் அவ்வாறே செய்வதற்கு முன் உதாரணமாகத் திகழலாமே! 

அர்ச்சகர் நலனைக் காப்பதில் ஆந்திரம் மற்றும் தெலுங்கானா அரசுகள் சீரிய திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அர்ச்சகர் தொழிலைச் செய்து வரும் ஆண்களை, அக்குலப்பெண்கள் மணக்க முன்வந்தால் அவ்விருவருக்கும் மூன்று லக்ஷ ரூபாய் நிதி உதவியும் திருமணச் செலவுக்கு  ஒரு லக்ஷமும் தருவதாகத் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர்களும் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அடுத்த மாதம் முதல் பெறுவர் என்ற அறிவிப்பு அச்சமூகத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தர வல்லதாகும். அது  மட்டுமல்ல. எப்போதெல்லாம் அரசு ஊழியர்கள்  சம்பள உயர்வு பெறுவார்களோ அப்போதெல்லாம் அர்ச்சகர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போது கேட்கலாம். இது போன்ற நலத்திட்டங்களைத்  தமிழக அரசு வழங்காதது ஏன் என்று. அறிவிப்பதால் அடுத்த தேர்தலில் பலன் இருக்குமா என்றுதான் யோசிக்கிறார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. மக்கள் தொகையில் மிகச் சொற்ப சதவீதமே இருப்பவர்களால் வெற்றி- தோல்வியை  நிர்ணயிக்க முடியாது என்ற பட்சத்தில் அவர்களுக்கு இரக்கப்படுவதற்குப் பதிலாக, நிச்சயம் வோட்டு கிடைக்கும் பிரிவுக்கு வாரி வழங்குவதே வெற்றி தர வல்லது என்ற கணிப்பே மேலோங்குகிறது. உண்மைதான். அர்ச்சக சமூகத்திற்கு உதவும் அரசு பிரதி பலனை எதிர்பாராது சேவையாகக் கருதினால் மட்டுமே அக்குலம் வாழ முடியும். இல்லாவிட்டால் ஆந்திரத்தையும் தெலுங்கானாவையும் பார்த்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.   

Saturday, September 23, 2017

சிவாகம பாடசாலைகள்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்                         

உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,                                                   

அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்                                             

 பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து.                                                                                                                                                       
                                                                                                       - பெரிய புராணம் 
                                                
                                                                சிவாகம பாடசாலைகள் 
                                                                  சிவபாத சேகரன் 

வழிபாடு என்பது பழங்காலந்தொட்டே மரபை ஒட்டியும், தேசாச்சாரத்தை ஒட்டியும், காலாசாரத்தை ஒட்டியும் நடைபெற்று வருகிறது. அடிப்படை ஒன்றாக இருந்தாலும் , மேற்கண்ட காரணங்களால் சிறிய மாறுதல்கள் இங்குமங்குமாக இருப்பது இயல்பு. அவரவர் தமக்குத் தோன்றியபடி வழிபாடுகள் செய்வதானால், தெறி கெட்டுப் போகும் நிலை உருவாகும். இது பற்றியே, நம் முன்னோர்கள் ஆலய வழிபாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தினார்கள். அப்படி இருந்தும், எல்லை தெய்வங்கள்,காவல் தெய்வங்கள் ,நடுகல் ஆகியவற்றின் வழிபாட்டு முறைகள் ஊருக்கு ஏற்பத்  தொடர்ந்து வருவதைக் காண்கிறோம். 

திலதைப்பதி பாடசாலை மாணவர்களில் சிலர் 
ஆகம அடிப்படையிலான வழிபாட்டில் ஆலய அமைப்பு முதல், அனைத்துக்  கிரியைகளும் விளக்கப்பட்டுத்  தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆகமக் கல்வியை சிறு வயது முதல் ஏழு ஆண்டுகளுக்குப் போதித்து, பரார்த்த பூஜைக்குத் தயார் படுத்தினார்கள்.  ஆகம பாடசாலைகள் பல இடங்களில் அமைக்கப்பெற்று மன்னர்களது ஆதரவையும்,மக்களது ஆதரவையும் பெற்றன. காலப் போக்கில் கற்போர் எண்ணிக்கை குறைந்து, பலவிடங்களில் பாடசாலைகள் மூடப் பட்டன. எஞ்சிய பாடசாலைகள், நல்ல மனம் கொண்ட அன்பர்களது ஆதரவோடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை, பிள்ளையார்பட்டி,திருப்பரங்குன்றம், குடந்தை, திருவாலங்காடு, திலதைப்பதி ஆகிய ஊர்களில் நடைபெறும் சிவாகம பாடசாலைகளை சில உதாரணங்களாகக் காட்டலாம். 

முக்தீச்வரர் ஆலயம்,  திலதைப்பதி 
திலதைப் பதி என்ற தேவாரத் தலம் மக்கள் வழக்கில் தற்போது செதலைப்பதி எனப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள பூந்தோட்டத்திலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.இங்குள்ள நரமுக விநாயகரைத்  தரிசிக்க அநேகர் வருகை தருகிறார்கள். தில தர்ப்பணபுரி என்றும் வழங்கப்படும் இத்தலத்தில் முன்னோர்களுக்குச் செய்யப்படும் தர்ப்பணம், சிறந்த பலன்களைத் தர வல்லது. இந்த ஆலயத்தின் சிவாச்சாரியாரது பெருமுயற்சியால் ஒரு சிவாகம பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ நாற்பது மாணாக்கர்கள் ஆகமம் கற்று வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

அதி காலை முதல் மாலை வரை ஆகமம்,வேதம் மட்டுமல்லாமல் ஆங்கிலம்,ஹிந்தி, தமிழ், திருமுறை, யோகா , கணினி போன்றவைகளும் கற்பிக்கப்படுகின்றன. மாலையில் விளையாடுவதற்கென்றே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழாண்டு பயிற்சிக்குப் பிறகு மாணவர்கள்  தத்தம் ஊர்களுக்குத்திரும்பி , தந்தையுடன் இணைந்து சிவாலய பூஜை செய்கிறார்கள். தீக்ஷையின் முக்கியத்துவத்தை இப்போது முதற்கொண்டே உணர்ந்திருக்கிறார்கள். பூஜை செய்து வைத்தால் தக்ஷிணை  இவ்வளவு வேண்டும் என்று கேட்கவே கூடாது என்று தங்களுக்குக்  குருநாதர் அறிவுறுத்தியதை  நினைவு கூர்கிறார்கள். இவ்வாறு படிப்போடு,நற்பண்புகளும் இங்கே கற்பிக்கப் படுகின்றன.  இவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையத்  திருத் திலதைப் பதியில் கோயில் கொண்டு நீங்காது அருள்புரியும்  சுவர்ணவல்லி அம்பிகா சமேத முக்தீசுவரப் பெருமானைப்  பிரார்த்திக்கிறோம். 

Ways of worship may differ from place to place due to cultural and regional  differences. By and large, the basics remain the same under a near standardised procedure. South Indian Temples , especially those in Tamilnadu follow Sivagamas which provide a treatise on Temple construction, rituals etc.  Schools which teach Sivagamas were started at various places under the patron ship of Kings and philanthropists. The Modern pattern of education and lifestyle has not spared even this "Guru Kula " type of education which is entirely focused on "Parartha Puja", meant for the welfare of mankind. Though many such schools had to be closed , there are Veda- Agama schools at places like Mayiladuthurai,Pillayarpatti, Thiruparankunram, Kumbakonam, Thiruvalankadu, Thilathaippathi, to name a few. 

The Veda- Sivagama Patasala at Thilathaippathi is located 3 km away from Poonthottam, a place on Mayiladuthurai - Thiruvarur road. Muktheeswara Swami Temple of this place is sung in Thevaram by Thirugnana Sambandhar , some 1400 years ago. Lord Rama worshipped the Main deity here and performed Pithru tharpanam for his father, Dhasaratha. People visit here to do Tharpanam on Amavasya days and worship the deities. Nara Mukha Adhi Vinayaka sannadhi in front of the Temple is visited by devotees on Sankata Hara Chathurthi days. 

The Sivacharya of this Temple has taken pains to conduct a Sivagama Patasala close to the Temple. About 40 students learn not only Veda and Sivagama but also receive a fair knowledge of English, Tamil, Hindi, Thirumurai, Computer, Yoga etc. which spreads throughout the day right from 4.30 A.M. After completing the 7 year course, the students return to their parents and start doing daily rituals at the temples.They proudly declare that they would not demand money from the worshippers and accept whatever be offered.  Let us pray for their bright future and help them and the Patasala in whatever way we can.   
                                                                       ***************

குடும்ப சூழ்நிலைகளால் ஆகமக்கல்வி முழுதும் பெற இயலாமல் தந்தை விட்டுச் சென்ற சிவாலய பூஜையைச் செய்துவரும்  சிவாசார்யர்களுக்குக்  கொடுமுடியில் 13 நாட்கள் ஒரு ஆகம பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவும் தங்குமிடமும் இலவசம். ஆகமக் கல்வி பெற விழைவோர் இந்த நல்ல வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.  

A sandwich course is being organised at Kodumudi for 13 days for the benefit of those Sivacharyars who could not learn Agama for 7 years due to family problems. Food and lodging are offered free of cost for the participants. It is desired that those could not go for Gurukula education may avail this opportunity to learn various topics as shown in the invitation below: